marriage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
marriage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கலக்கல் கலாச்சாரம்

கலக்கல் கலாச்சாரம் 


இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான விளக்கங்கள் பெரியவர்களுக்கே தெரியாததால் இந்தக் குழப்பம்; இந்தத் தலை முறையும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்; எல்லா விஷயங்களுக்கும் காரணம்  இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிக்கும் உறவுகளின் அருமைக்கும் பெருமைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்; கூர்ந்து நோக்கினால் நாம் கொண்டாடும் பண்டிகை போது அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் காய் கனியையோ பொருட்களையோ தான் அதிகம் பயன் படுத்தி இருப்போம்; உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை; புதிய அரிசியையும், அந்தக் காலக் கட்டத்தில் விளைந்திருக்கும் கரும்பையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம்; சில பண்டிகைகள் போது ஆரோகியமான உணவு முறையை பின்பற்றுகிறோம் ;நவராத்திரியை உதாரணமாக கூறலாம். பூவிற்கும் நெற்றி பொட்டிற்கும் மிகுந்த முக்கியதுவத்தை தமிழ் காலாச்சாரம் அளித்து வருகிறது. இதில் எல்லாம் பெரிய முரண்பாடுகள் வருவதில்லை; சில நம்பிக்கை   சார்ந்த விஷயங்கள் செயல்படுத்த கட்டாயப் படுத்தும் போது தான் தர்கங்களும் தேவையில்லாத மனக் கசப்பும் ஏற்படுகிறது.

இது ஒரு விதத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு தாலியான மஞ்சள் கயத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது; ஆனால் இப்போ தாலிக் கட்டுவதை விட, திருமணம் பதிவு செய்ய படும் சிறு காகிதத்திற்கு தான் அதிக மதிப்பு ; தாலியை விட பதிவு செய்யப் பட்டிருந்தால் தான் அத் திருமணம் ஏற்றுக் கொள்ள படுகிறது; இதை காலாச்சாரம் தவறி விட்டது என்று எப்படி கூற முடியும்? காலாச்சாரம் என்ற பெயரில் பிள்ளை,பெண்ணின் தாய் விதவையாக இருந்தால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் கூட முழுமையாக கலந்துக் கொள்ளும் உரிமை வழங்கப் படவில்லை; கலைஞர் சொன்னது போல் அந்த வார்த்தைக்கு கூட ஒரு பொட்டு இல்லை; அதனாலேயே அமங்கலி என்று எழுதி வார்த்தைலாவது பொட்டு  இருக்கட்டுமே என்று பயன் படுத்தி வந்தார். இன்று நிலைமை மாறி வரவேற்கத் தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது; இதுவும் காலாச்சாரத்தை மீறின விஷயம் இல்லை.ஒரு காலத்தில் ப்ரோகிதர்கள், கடல் தாண்டி செல்வது பாரம்பரியத்தை மீறின செயலாக கருதப் பட்டது; ஆனால் இன்றும் அப்படியே செயல் பட்டால் நமது பண்பாடு உலகளவில் தெரியப் படாமலே போயிருக்க வாய்ப்புண்டு. அதே சமுகத்தை சேர்ந்த சிலரால் தமிழர்களின் திறமையும் எல்லோராலும் பேசப் படுகிறது. நாமாக ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள் காலத்தினால் மாறும் போது அது கலாச்சாரத்தை மீறினதாகாது;

ஆனால் இப்படியே எல்லா விஷயங்களையும் ஒதுக்கியும் மாற்றியும் , காலத்தின் பேரில் பழி போடுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது; விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு வருகிறோம்.அது முழுவதுமாக காணாமல் போகும் முன் சுதாரித்துக் கொள்வது நல்லது. திருமணம் என்றாலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரியானபடி அவர்களை உபசரித்து அனுப்புவதில் கூட நாம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை; நம்மை மதித்து வந்தவர்களை தக்க மரியாதையுடன் கவனித்து, உபசரித்து அனுப்புவது தான் பண்பாடு; அழைபிதழ்களை வேண்டுமானால் நேரமின்மைக் காரணமாக e-mail இல் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளலாம்; சில விஷயங்களுக்கு அதற்குண்டான முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும்.என்னதான் நண்பர்கள் பெருகி இருந்தாலும் சுற்றத்தார்களுக்கும் நாம் உரிய பெருமையை அளிக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும்,விருந்தோம்பலிலும் நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது. இது நாம் உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விஷயம். சுகி சிவம் அவர்கள் சொன்னது போல் முன்பு தனியாக இருந்த bath.room இன்று attached ஆகவும், சேர்ந்து இருந்த உறவுகள் deattached ஆக மாறிவிட்டதும் வருத்த பட வேண்டிய ஒன்றாகும். எதற்குமே react பண்ணுகிற அளவிற்கு நாம் act பண்ணுவதில்லை; இன் நிலை மாறினால் நன்றாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதித்தாலும் வேர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலை முறையிடம் தான் இருக்கு.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

விவாகரத்து - மறுபக்கம் !!!




இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை துலைத்து விடாமல்இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணத்திற்கு இன்று நம்மிடையே பெருகி வரும் அதிக விவாகரத்து. முன்பு இந்த வார்த்தைஎங்கேயோ  எப்போவோ கேட்ட குரலாகத் தான் இருந்தது; ஆனால் இப்போ அடிக்கடிக் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. சகிப்புத் தன்மையும் பொறுமையும் குறைந்ததை ஒருக் காரணமாகச் சொன்னாலும், சட்டத் திருத்தங்களால் இப்பொழுது எளிதில் கிடைபதால் சிலருக்கு மிகவும் சாதகமாகி விட்டது. சம்மந்த பட்ட ஆணோ, பெண்ணோ, அவரவர் தங்கள் விருப்பப்படி வேறு வாழ்க்கை துணையை தேர்வு செய்து செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் இதனால் பாதிப்பிற்கு உண்டான இன்னொரு தரப்பு பற்றி யாருமே நினைத்து பார்பதில்லை. அவர்கள் தான் சம்மந்த பட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள்! கண்டிப்பாக குழந்தைகளின் நல் வாழ்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மனதில் ஏற்படும் அந்தக் காயத்திற்கும் பிறரின் பார்வையில் தாழ்ந்து போவதற்கும் யாரும் மருந்து போட முடியாது. எத்தனையோ கனவுகளுடன் பல மாதங்களாக பார்த்து பார்த்து பிரமாண்டமாக செய்யப் படும்  திருமணம் சில சமயங்களில் அற்பக் காரணங்களால் சில மாதங்களிலே பிரிவு வரும் போது பெற்றோர்களின் மன நிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்றையத் தலைமுறை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் மனோபாவம் இருப்பதால் சுலபமாக எதையும் எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் பாதிப்பு அடைந்த  பெற்றோர் நிலையோ வேறு!

பொது இடங்களிலோ, திருமணத்திலோஇந்த மாதிரி சம்பவத்திற்கு பிறகு அவர்களால்  எப்போதும்  போல் சகஜமாக கலந்துக் கொள்ள முடிவதில்லை; பிறர் கேட்கும்  கேள்விகளை எதிர் நோக்கும் தைரியம்   அவர்களுக்கு இருப்பதில்லை. குடும்பத்தினரிடமும், உறவுகளிடமும் நண்பர்களிடம் , அவர்களின் மதிப்பு குறைந்து விடுகிறது; தங்களின் வளர்ப்பு சரி இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மனம் புழுங்கித்  தவிக்கிறது. இதில் கூட பிறந்தவர்கள் இருந்தால் அவர்களின் திருமணம் என்ற கட்டம் வரும் போது எதிர் பார்ப்பது போல் அவ்வளவு சுலபமாக அமைவதில்லை. விவாகரத்து என்ற சொல் அந்தக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டு   ஒரு சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. விவாகரத்து என்ற ஒன்று இல்லாமலே இருந்தால், சகிப்புத் தன்மையும், வாழ்க்கையின் அருமையும் புரியுமோ என்று நினைக்கும் அளவிற்கு பெற்றோர் மனம் விரும்புகிறது;

ஏன் என்றால் திருமணம் என்ற ஒன்று  நடக்கும் போதே இது சரியாக அமைய விட்டால் இருக்கவே இருக்கு இன்னொன்று என்ற எண்ணத்துடன்  தான் சிலர் மணம் புரிகின்றனர். ரொம்ப சுலபமாகவே விலக்கும் கிடைபதால் வாழ்க்கையின் அருமை எதில் உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவது பெற்றோர்களே என்பதை அறிவதில்லை. எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு அவசியம்; இல்லாமல் போனால் அதன் மதிப்பை உணராமலே தவற விடும் வாய்ப்பு அதிகரித்து விடும். புது கலாச்சார  விஷயங்களை வரவேற்கலாம்; அதற்கு முதலில் நம்மிடம் உள்ள நல்லக் கலாச்சரங்களை உணர்ந்து மதிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தை தொலை நோக்கு பார்வையோடு பார்த்தால் தான் அதன் அருமையை அனுபவித்து  உணர்ந்து ரசிக்க முடியும்.



திங்கள், 12 டிசம்பர், 2011

Living together



Living together, இந்த வார்த்தையைக் கேட்டாலே பொதுவாக பெற்றோர் வயற்றில் புளியைக் கரைக்கும் விதமாக இருந்தது. திருமணம் முன்பே ஆணும் பெண்ணும் சேர்ந்து சிறிது காலம் வாழ்ந்து விட்டு அதன் பிறகு திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதில் இந்தத் தலை முறை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் . அது நம் இந்தியக் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு சீர்கேட்டை  விளைவிக்க கூடியது என்பதை நாம் அறிவோம். அதனாலேயை அதனை ஊக்குவிக்க ஒருவரும் முன்வரவில்லை.

ஆனால் இதே வார்த்தை சமீப காலமாக மீண்டும் வழக்கத்திற்கு வந்துள்ளது. காரணம் தான் வேறு. 50 வயதிற்கு மேல் காலத்தின் கட்டாயத்தால் தனித்து விடப்பட்ட ஆண் , பெண் இதனை பின்பற்றலாமா என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு விதத்தில் அதில் தவறு இல்லை. மீதி நாட்களை தனிமையில் கழிப்பதற்கு பதில் தன் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்துக் கொள்ளவும் தனிமையை போக்கவும் நட்பு என்ற முறையில் துணைக் கிடைத்தால் ஆரோக்கியமானது  தானே!! ஒரே கூரையின் கீழ் துணையுடன் அவரவர் விருப்பப் படி வாழ்வது மன அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். அந்த வயதில் நிறைய பக்குவம் அடைந்திருப்பதால் துணையை தேர்வு செய்வதில் குழப்பமும் அதிகம் இருக்காது.

ஒருவருக்கொருவர் கமிட்மென்ட் இல்லாத இத் தகைய வாழ்க்கை இந்த வயதில் சரிவரும் என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் முதியோர் இல்லங்களுக்கு போகத் தயங்கும் சிலருக்கு இது ஒரு வரப் பிரசாதமாக கூட அமையலாம். மற்ற ஆசாபாசங்களுக்கு இடம்  இன்றி நட்பு சார்ந்த ஒரு வாழ்க்கை அமையும் என்றால் அது வரவேற்க  பட வேண்டிய  ஒன்று. அதையும் தாண்டி செல்வது அவரவர் தனிப் பட்ட விருப்பம். மக்கள் மனோபாவம் மாறிக் கொண்டு வருகிறது .இதற்கு சில நாட்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியை ஒரு உதாரணமாக கூறலாம். ஒரு தனிப் பட்ட அமைப்பு 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு living patner தேர்வு செய்துக் கொள்ள ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் .அதற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அமைப்பார்களே ஆச்சிரியப்பட்டுப் போனார்கள் .எதற்கும் ஒரு தொடக்கம் அவசியம்; அது நல்லதாக இருக்கும் பட்ச்சத்தில் ஊக்குவிப்பதில் தவறு இல்லை அல்லவா?

சனி, 3 டிசம்பர், 2011

80 வயதில் TWINS !!! சரியா !!!????


சில தினங்களுக்கு முன் செய்தித் தாளில் கண்ட அந்த செய்தியை படித்தவுடன் இது சரியா என்றக் கேள்வி மனதில் தோன்றியது. செயற்கை முறை கருத்தரிப்பில் ஒரு தம்பதியருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது தான்; இதில் என்ன அதிசயம் , ஆச்சரியம் என்கிறிர்களா? ஒன்றும் இல்லை, தந்தைக்கு 80 வயதும் தாய்க்கு 48 வயதும் தான்! (மெனோபாஸ் ஆனவர்) அதுவும்அந்தப் பெண்மணி அவரின் இரண்டாவது மனைவி!! நடந்திருப்பது வெளி நாட்டில் இல்லை; நம்ப தமிழ் நாட்டில் தான் ; இதற்கு அவர்கள் சொன்னக் காரணம் விநோதமானது.

சில வருடங்களுக்கு முன் 23 வயதான தங்கள் வாரிசை விபத்தில் பறி
கொடுத்ததால் தனிமை வாட்டியதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டதாம். பொருளாதரத்தில் சாதாரண நிலையில் உள்ள இவ்வயது பெற்றோர் இந்த முடிவை எடுத்தது சரியா?  இன்று தங்கள் தனிமையை பற்றி யோசிப்பவர்கள் நாளை எவ்வளவு சீக்கிரம் அதே தனிமையில் தள்ளப் பட்டு ஆதரவு இல்லாமல் குழந்தைகளின்  எதிர் காலம் எவ்வளவு கேள்விக் குறி ஆகிவிடும் என்பதை ஏன் யோசிக்கவில்லை. இதில் இன்னொரு கவனிக்கப் பட வேண்டிய விஷயம் சம்பந்தப் பட்ட மருத்துவரின் அணுகு முறை .

குழந்தை வேண்டி இம்மாதிரி செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருபவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப் படுகிறதா ? மேற் கூறிய சம்பவத்தைப் பார்க்கும் போது சந்தேகம் வரத் தான் செய்கிறது. தங்கள் திறமையை பரிசோதிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட மாதிரி அல்லவா தோன்றுகிறது. தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் அந்த மருத்துவர் செய்தது சரி என்றாலும் சமுதாயப் பொறுப்பிலிருந்து தவறி விட்டதாக தோன்றுகிறது.

இத்தனை வயதிற்கு மேல் அதுவும் பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கும் இவர்களால் குழந்தை பெற முடிந்தாலும் வளர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கூற ஏன் தவறி விட்டார்கள்? இது இவர்களுக்கு கூடுதல் சுமை தானே? நாளை அந்தக் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு யார் உத்தரவாதம்? உலக அறிவு அதிகம் இல்லாத அந்தப் பெற்றோருக்கு சரியான ஆலோசனையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த மருத்துவர் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. தனிமையைப் போக்க வேறு எத்தனையோ வழிகள் இருக்க அதை செல்படுத்த முயற்சி  செய்திருக்கலாமே? அதற்கான முயற்சியைக் கூட செய்யவில்லை என்று பார்க்கும் போது மருத்துவர்களுக்கு  சமுதாய அக்கறை பற்றிக் கவலை இல்லையோ என்றுக் கேட்கத் தோன்றுகிறது. இத் தகைய செயல்களைக் காணும் போது சில மருத்துவர்களைக் கண்டு ஆச்சரியப் படுவதா இல்லைக் கோபப்படுவதா என்றே புரியவில்லை!!