திங்கள், 21 நவம்பர், 2011

லஞ்ச (மு)தலைகள் ...!!!!


லஞ்ச (மு)தலைகள் ...!!!!

ஒரு காலத்தில் சிறைக்குச் செல்லும் அரசியல் தலைவர்களின் பின்னணியில் மக்களுக்கான நியாயமான நலத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இருந்தது.. சுய விளம்பரதிற்கோ, சுய லாபத்திற்கோ, முக்கியத்துவம் இல்லாத அவர்களது செயல் மக்களிடையே பெரும் மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சொத்துக் குவிப்பிற்கோ, வாரிசுகளின் எதிர் காலத்திற்கோ, அரசியல் தலைமையை கருவியாகப் பயன் படுத்த வில்லை; மக்களிடம் உண்மையான பற்றும் சேவை எண்ணமும் இருந்ததால், அத் தலைவர்களின் சிறைவாசம் மக்களின் மனதில் பெரும் பாதிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. தன்னலமற்ற செயலால் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்தது. அதனால் தானோ என்னவோ அவர்களின் வாரிசுகள் யார், எங்கே இருக்கிறார்கள் என்று இன்று நம்மால் அடையாளம் கூட காண முடிவதில்லை.

ஆனால், இப்போதுள்ள அரசியல்வாதிகளும், தலைவர்களும் (?) அரசியலை ஒரு லாபகரமான வியாபாரமாக எண்ணித் தான் நுழைகின்றனர். எப்போது பணம் பிரதானமாகக் கருதப் படுகிறதோ அப்போதே இலவச இணைப்பாக லஞ்ச,ஊழலும் உள்ளே நுழைந்து விடுகிறது; இன்றும் தலைவர்களும்(?), வாரிசுகளும் அடிக்கடி சிறை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின்னணி தலைக்குனிவை  தான் ஏற்படுத்துகிறது;  நம்பிய மக்களுக்கு அவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் கண்டு மனம் கொதித்து தான் போகிறது. இதனை கண்டு வருத்தமும், பரிதாபமும் படும் சிலர் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா என்று சிந்திக்க  வேண்டும். தலைவர்கள் (?) வாரிசுகளுக்கு சரியான வழி காட்டியாக இல்லாவிட்டாலும் தவறான பாதையில் செல்வதை தடுக்காமல் இருப்பதும் ஒரு வகையில் குற்றமே.

ஒருவரிடம் இருக்கும் அளவிற்கு அதிகமான பணமே லஞ்ச ஊழல் கைமீறி போனதிற்கு ஒரு காரணமாகிறது. லஞ்சத்தை ஒழிக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப் பட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் நம்பிக்கை இழக்க வில்லை; இதற்கு எப்படியும் ஒரு விடிவு பிறக்கும் என்று நினைத்து தான் ஓட்டுப் போட்டு வருகின்றனர். இன்றும் ஒரு சில கிராமங்களில் அந்தந்த வார்டுத் தலைவர்கள் போட்டி இன்றி தேர்ந்தடுக்கப் பட்டு தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; மனது வைத்தால் மனசாட்சியுடன் செயல் பட்டு மக்களுக்கு ஊழல் இல்லாத வாழ்க்கையை அமைத்து தர முடியும் என்பதை உணர்த்தி உள்ளனர். சிறு துளி பேரு வெள்ளம் போல் அந்தந்த பகுதித் தலைவர்கள் இதனை  உணர்ந்து செயல் பட்டாலே கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிரண்டோடு நிற்காமல் மற்ற ஊராட்சி நகராட்சி எல்லாவற்றிக்கும் இந்த நிலை பரவ வேண்டும்.

புதன், 16 நவம்பர், 2011

மனதிற்கான Surf Excel !!!

ஒரு நாளைக்கு இருக்கும் நேரத்திற்கு ஏற்ப வேலைகளை அமைத்துக் கொள்ளும் என் போன்றோருக்கு கூடுதலாக 2 மணிநேரம் கிடைத்தால் விட்டுப் போன சில விஷயங்களை யோசிக்கலாம்; என் சிந்தனைக் கொஞ்சம் பின்னோக்கித் தான் சென்றது . உடைகளில் உள்ளக் கரைகளை surf excel கொண்டு நீக்கி விடலாம்; ஆனால் மனம் என்ற உடையில் ஏற்படும் காயம், வடு போன்ற கரைகளை இந்த மாதிரி அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது நம்முடைய அணுகுமுறையால் சாத்தியமே என்றுதான் தோன்றுகிறது.

நம்மால் யாரேனும் காயப் பட்டிருந்தால் அதைப் போக்குவதற்கான முதல் முயற்சியை எடுக்க வேண்டும். தொடர்பு சாதனங்கள் பெருகி உள்ள இந்தக் காலக் கட்டத்தில் யாரையும் சுலபமாகதேடி  அணுக முடியும். அதன் மூலம் சம்பந்த பட்டவரை அணுகி நம் தவறை உணர்ந்து எண்ணங்களை பரிமாறிக் கொண்டு பேச்சு வார்த்தை மூலம் அவர்களுக்கு நம்மால் ஏற்பட்ட காயம் என்றக் கரையை போக்க முயற்சி  செய்யலாம்.

அது போல் நமக்கு யாரிடமாவது பிணக்கோ, வருத்தமோ இருந்தாலும் "இன்ன செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் "என்ற குறளுக்கு ஏற்ப நடக்க முயலலாம். நாமே முன்வந்து அவர்களிடம் நேசத்தை வளர்த்து அவர்களுக்கு தேவையானதை செய்யத் தொடங்கினால் மனதில் ஏற்பட்ட காயம் என்ற கரை கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்பு உண்டு! கிடைக்கும் அதிகமான 2 மணி நேரத்தில் இத் தகைய முயற்சியில் இறங்கினால் மனம் லேசாவதுடன் அன்பையும் நடப்பையும் வளர்க்க முடியும்.

இது வெறும் பேச்சுக்காக சொல்லப் படும் விஷயம் அல்ல;உண்மையிலேயே மனதை தூய்மை ஆக்கும் ஒரு உன்னதமான செயல். காலம் போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் மனிதபிமானத்துடன் செய்ய வேண்டிய விஷயத்திற்கு கூட இப்படி அதிகமாக 2 மணி நேரம் கிடைக்கும் போது தான் யோசிக்கத் தோன்றுகிறது!! இதற்கு யாரைக் குறை சொல்வது?

சனி, 12 நவம்பர், 2011

நண்பன்டா !!!!!!!


நண்பன்டா !!!!!!!

தொலைக் காட்சியில்  டாக்டர் கமலாசெல்வராஜ் அவர்களின் பேட்டியை சுவாரசியமாக முகுந்த் பார்த்துக் கொண்டிருந்தான். முதன்  முதலாக தன்னால் உருவாக்கப் பட்ட ,  சோதனைக் குழாய் மூலம் பிறந்தக் குழந்தையைப் பற்றி மிகவும் பூரிப்புடனும், பெருமையுடனும் இன்று தான் நடந்தது போல் கூறிக் கொண்டிருந்தார். முதல் காதல், முத்தம், வேலை,சம்பளம், என்று எதையுமே மறக்க முடியாதல்லவா?  அதைக் கேட்க கேட்க முகுந்திற்கு தன் உயிர்த் தோழன் கிருபாவின் நினைவு தான் வந்தது. நட்புக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வார்கள், ஆனால் உண்மையில்  கொடுத்தவன் இந்த முகுந்தன். பேட்டியின் நடுவே தன் மனைவி பூமாவின் முகத்தை அடிக்கடி  நோக்கினான். அவளுள் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை தெளிவு படுத்த வேண்டிய தருணம் இது என்பதை உணர்ந்தான். அவளை அழைத்து முகுந்தன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான். அதைக்  கேட்ககேட்க பூமா ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். இப்படியும் ஒரு நட்பா என்று வியந்தாள். 

முகுந்தும், கிருபாவும் கல்லூரியில் சேர்ந்த  முதல் நாள் தான் ஒருவரை ஒருவர் முதலாக சந்தித்துக் கொண்டது. என்னக் காரணமோ, பார்த்த உடனே இருவருக்கும் பிடித்து விட்டது. கிருபாவின் அமைதியான சிரித்த முகமா, இல்லை முகுந்தின் குழி விழுந்த கன்னமா?  எதுவோ அன்று முதல் இருவரும் இணைப் பிரியா நண்பர்களானார்கள். இருவர் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எல்லாப் பொறுப்பையும் ஏற்று நல்லபடியாக முடித்து தருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் இவர்களின் நட்பு பற்றி பெருமை யாக இருந்தாலும் கடைசி வரை நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே வரும். பாதி நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர்வதில் சிக்கல் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இரண்டு ஆண்கள் ஒத்துப் போவது போல், பெண்கள் ஒத்துப் போவது கொஞ்சம் அரிது தான்.

இருவருக்கும் எந்த விஷயத்திலும் மனக் கசப்போ, கருத்து
 வேறுபாடோ வந்தது இல்லை. பண விஷயத்திலும், ஒருவர் குடும்பத்திற்கு ஒருவர் செலவு செய்தாலும் ஏன், எதற்கு என்று கேட்க மாட்டார்கள். இதில் மற்றவர்கள் தலையிடையும் அனுமதிபதில்லை. திருமண விஷயத்தை  இருவரும் மிகவும் கவனமாக கையாள நினைத்தார்கள். தங்கள் நட்பை மனைவி, இயல்பாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினர். பலவந்தத்தினால் வருமே ஆனால் அதில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.
க்ருபாவிற்கும் கீர்தனாவிற்கும் மூன்று வருடப் பழக்கம். முகுந்திற்கு மட்டும் இவர்களின் பழக்கம் தெரியும். கீர்த்தனா  முதலில் இவர்களின் நட்பை சாதரணமாக தான் நினைத்தாள். போகப் போக நட்பின் ஆழத்தை புரிந்துக் கொண்டு பக்க பலமாக இருந்தாள். முகுந்தும், கிருபாவும் தங்கள் திருமணம் சேர்ந்து நடக்க விருப்பப் பட்டாலும், முடியாமல் கீர்த்தனாவின் வீட்டு சுழலால், உடனே செய்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. கிருபாவின்  திருமண வாழ்கை நாளொரு காதலும், பொழுதொரு ஊடலுமாக, சந்தோஷமாக இருந்தது. கிருபாவின் பெற்றோர்களும் அவர்களின் தனிமையின்  அவசியம் புரிந்து தங்கள் மகளிடம் சிறுது காலம் கழிக்க சென்றனர்.முகுந்தும் எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருந்தான். அவர்கள் முவரும் சேர்ந்தால் அங்கு கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை. வேலை விஷயமாக கிருபா 3 ,4 நாட்கள் வெளியூர் போனாலும் முகுந்த் வீட்டிற்கு வருவது தவறாது. வழக்கம் போல சில பேர் ஏதேனும் பின்னாடி பேசினாலும், அது பற்றி கவலைப்  படாமல் இவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அன்று அலுவலக வேலையாக கிருபா தன் நண்பனுடன் வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக லாரி மோதி விபத்தில் தூக்கி எறியப் பட்டான். நல்ல வேளையாக அருகில் உள்ளவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். முகுந்துக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அதிஷ்டவசமாக  பெரிய வெளிக் காயம் எதுவும் இல்லை.முகுந்த் கூடவே இருந்து கீர்தனாவிற்கும் தைரியம் சொல்லி, தேவையான எல்லாம் செய்து கிருபா நன்றாக தேறும் வரை உடன் இருந்தான். ஆனால் இந்த விபத்து இரு நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டது என்றால் மிகை ஆகாது.
விபத்திற்கு பிறகு கிருபா எப்போதும் போல் இல்லை என்பதை முகுந்த் உணர்ந்தான். கண்டிப்பாக அவனை வாட்டிக் கொண்டிருப்பது  சாதாரண விஷயம் இல்லை என்று மட்டும் புரிந்தது. அவனாக சொல்லட்டும்  என்று காத்திருந்தான். கிருபா தன் மனதிற்குள் ஒரு பட்டி மன்றமே நடத்தி, தீர்வுக்கு வந்து முகுந்தை நாடிச் சென்றான். கிருபா,"முகுந்த், நான் இப்போக் கேட்கும் இந்த உதவியை முழு மனதோடு எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்ய வேண்டும், சரியா?".முகுந்த்," ஏண்டா இப்படி, என்ன வேணும் கேளு; ஏன் இவ்வளவு தயக்கம்." "முகுந்த், எனக்கு நடந்த விபத்தில் நான் இழக்க கூடாததை இழந்து விட்டேன்; என்னால் இனி கீர்த்தனாவிற்கு ஒரு குழந்தையை தரும் தகுதிக் கிடையாது."என்றான். "ஐயையோ என்னக் கொடுமை இது!!" "ஆமாம், என்னாலும் தான் தாங்க முடியவில்லை; அதற்காக இப்படியே விட்டு விட முடியாது; உனக்கேத் தெரியும் கீர்த்தனவிற்கு குழந்தை என்றால் எவ்வளவு உயிர் என்று; தாய்மையை எவ்வளவு விரும்புபவள் ; என்பொருட்டு அவள் அந்த அனுபவத்தை இழக்கக்  கூடாது." முகுந்த்,"கண்டிப்பாக. அப்போ நீங்கள் குழந்தையை தத்தெடுப்பது பற்றி யோசிக்கலாமே, இப்போது இதல்லாம் பெரிய பிரச்சனை இல்லை." என்றான் முகுந்த். கிருபா,"இல்லை குழந்தை சுமக்கும் அனுபவத்தை அவள் பெற வேண்டும்," முகுந்த்,"நீ என்ன சொல்ல வர எனக்குப் புரியலே" கிருபா,"நீ...உன்னுடைய விந்தை எங்களுக்கு தானமாக தர வேண்டும்; உன் மாதிரி ஒரு குழந்தையை பெற நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் "என்றான். முகுந்த்,"ஏய் நீ தெரிந்து தான் பேசுகிறாயா? கீர்த்தனா இதை எப்படிப் பார்ப்பாள் என்று யோசித்தாயா "? கிருபா,"அதைப் பற்றி நீ கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றான்.

விஷயம் கேள்விப் பட்டு கீர்த்தனா கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள். கிருபா அவளிடம் இதையே நினைத்து கலங்காமல் அடுத்து செய்ய வேண்டியதையும், அது விஷயமாக தான் எடுத்திருக்கும் முடிவையும் கூறினான். அதிர்ச்சி அடைந்த கீர்த்தனாவை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி சம்மதிக்க வைத்தான். அதற்கு பின் மருத்துவர் யோசனை படி விஷயம் வேகமாகவும்,மும்மரமகவும் நடக்க ஆரம்பித்தது. வீடு, தங்கம், விலைஉயர்ந்த பொருட்கள் இதையெல்லாம் வாங்கும் போது தான் சந்தோசம். ஆனால் அன்பு, பாசம், நட்பு, கல்வி, இதையல்லாம் கொடுப்பதில் தான் அதிக சந்தோசம். இதை உணர்வு பூர்வமாக உணர்ந்த முகுந்த் மிகவும் மகிழ்ந்தான். இதற்கு நடுவில் முகுந்திற்கும் கல்யாணம் நிச்சயமாகியது. பூமாவும், கீர்த்தனாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆனதால் இவர்களின் நட்பு மேலும் பலமானது.
கீர்த்தனாவிற்கு, 2,3 சோதனைக்குப் பிறகு பலன் கிடைத்தது. முகுந்த் திருமணம் போது அவளுக்கு மூன்று மாதம். எல்லோரும் மகிழ்ச்சியல் திளைத்தனர். இவர்களின் அதீத நட்பைப் பற்றி பூமாவிடம் சிலர் தவறாகப் பேசினாலும் அதைப் பொருட் படுத்தாமல்,சந்தோஷமாக வளைய வந்தாள். இவர்களின் நட்பு நாளுக்கு நாள் இறுக்கமானது. குழந்தை பேருக்கு கீர்த்தனா பெற்றோரிடம் சென்றாள்.


குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து கீர்த்தனா கிருபாவிடம் வந்து  சேர்ந்தாள். குழந்தை வளர வளர குழி விழுந்த கன்னமும், கண்களும், நிறைய முகுந்தின் ஜாடையுடன் ஒத்து போவது பற்றி, சுற்றி இருப்போர் பலவிதமாக பேச ஆரம்பித்தனர். அதைப் பற்றி நண்பர்கள் கவலைப் படாவிட்டாலும், பூமாவிற்கு காரணம் விளங்கவில்லை. சந்தேகம் இல்லாவிட்டாலும், குழப்பத்துடனே வளைய வந்தாள். இன்னும் கொஞ்ச நாளில் வரும், குழந்தையின்  முதல் பிறந்த நாள் ஏற்பாட்டில் முழமையாக ஈடு பட முடியவில்லை. அப்போது தான் முகுந்த் தங்கள் மூவருக்கு மட்டும் தெரிந்த   ரகசியம் பூமவிற்கும் தெரிய வேண்டும் என்று உணர்ந்தான். அவளிடம் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதைக் கூற தொடங்கினான். இப்படி ஒரு உன்னதமான நட்பை நினைத்து பூரித்தவள், தன் கணவனை பெருமையுடன் நோக்கினாள். மனம் லேசாகிப் போக, உற்சாகமாக விழாவிற்கான ஏற்பாட்டினைக் கவனிக்கத் தொடங்கினாள்.

வியாழன், 10 நவம்பர், 2011

KBC ஒரு திருப்புமுனை!!


 சில நிகழ்வுகளும் சம்பவங்களும் திரைப் படங்களிலும் , கதைகளிலுமே சாத்தியம். உதாரணமாக சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் ஒரே பாடலிலோ அல்லது 4,5 காட்சிகளிலோ கோடீஸ்வரக  ஆவதை பார்த்திருக்கிறோம். அது மாதிரி நடைமுறை வாழ்க்கையில் சாத்தியம் என்பதைக் KBC என்ற நிகழ்ச்சி நிருபித்துள்ளது. மாதம் 6000 சம்பளத்தில் இருந்த சுஷில் குமார் 13 கேள்ளிவிகளுக்கு பதில் அளித்ததின் மூலம் இன்று 5 கோடிக்கு அதிபதி ஆகிவிட்டார். இது அவர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

வெற்றிப் பெற்றபின் அவர் முகத்தில் தெரிந்த அதிர்சிக் கலந்த சந்தோஷமும் அதை தன் மனைவியுடன் சுற்று சுழலை மறந்து பகிர்ந்துக் கொண்ட விதமும் உண்மையிலேயே மனதை நெகிழச் செய்தது. ஒரு சாதாரண மனிதனை இந்த நிலைக்கு உயர்த்திய அந்த நிகழ்சியை பாராட்டத்தான் வேண்டும். இது அதிஷ்ட்டத்தை நம்பி இல்லாமல் அறிவுபூர்வமாக நடத்தப் படும் நிகழ்ச்சி ஆகும். இதற்கு நிறைய புத்தகங்கள் மூலமாகவும், மற்ற ஊடகங்கள் வாயிலாகவும் தகவல்கள் சேகரித்து தயார் படுத்திக் கொண்டால் தான் அந்த இருக்கையில் அமர முடியும்;  நிறைய உழைப்பும், விடா முயற்சியும் தேவை. எல்லாம் இருந்தும் இந்த நாற்காலியில் அமர்ந்து, நினைவில் வைத்துக் கொண்டு பதில் கூறுவது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறு கிராமத்திலுருந்து அதிகம் வெளிஉலகை அறியாதவர் சாதித்திருப்பது உண்மையிலேயை  பெருமை பட வேண்டிய விஷயம்.இதையேமுன் உதாரணமாகக் கொண்டு நாளை நிறைய சுஷில் குமார் உருவாக வாய்ப்புண்டு. இவர்களுக்கு பணத்தின் தேவையும்,  மதிப்பும் உணருவதால் சாதிக்கும் உத்வேகமும் அதிகம்.

இதே நிகழ்ச்சியில் பலமான பொருளாதாரமும் கல்விப் பின்னணியும் கொண்ட பெண்மணி பொழுது போக்காக கலந்துக் கொண்டு ஒரு சாதாரணக் கேள்விக்கு பதில் தெரியாமல் 50 லட்சத்தை இழந்த போது அவருக்கும் சரி நமக்கும் பெரிய வருத்தம்  ஒன்றும்   ஏற்படவில்லை .ஆனால் இந்த சாதாரண மனிதனுக்கு கிடைத்த தொகை எல்லோரையுமே மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றால் மிகையாகாது .இம்மாதிரி நிகழ்ச்சி ஒருவரது வாழ்க்கைக்கே திருப்பு முனையாக இருக்குமே ஆனால் அதை வரவேற்பதில் தவறு ஒன்றும் இல்லை.

நிற்க. TRP rating மனதில் கொண்டு இது ஒரு set up நிகழ்ச்சியாக இருக்காது என்று நம்புவோமாக!!!

வெள்ளி, 4 நவம்பர், 2011

கிரிக்கெட் T(party)20 !!!



இந்தியர்களுக்கு மற்ற விளையாட்டை விட கிரிக்கெட்டில் உள்ள ஆர்வமே தனி. இங்கிலாந்தில் வாங்கிய அடிக்கு இங்கு முழுமையாக திருப்பிக் கொடுத்ததில் தான் எவ்வளவு திருப்தியும் மகிழ்ச்சியும்! அன்று இந்திய வீரர்களைப் பற்றி அவ்வளவு பேசிய நாசர் ஹுசைன் இப்போ எங்கே போனார்? ஆனால் இவ்வளவு ஆராவரத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் இப்போதைய கிரிக்கெட் தகுதி தானா என்பது யோசிக்க வேண்டிய விஷய மாகிவிட்டது.

எப்போ விளையாட்டை விட பணம், சூதாட்டம் அதிகம் முக்கியத்துவம் பெற்றதோ அப்போதே கிரிக்கெட் தரம் குறைந்து தான் போய்விட்டது. ஒரு காலத்தில் கிரிக்கெட் ஒரு gentlemen game என்று அழைக்கப் பட்டது. ஆனால் புல்லுருவி போல் பணம் உள்ளே  நுழைந்ததால் நாம் நல்ல விளையாட்டை மட்டும் இன்றி நல்ல வீரர்களையும் அல்லவா இழந்து விட்டோம். எரியும் நெருப்பில் எண்ணை விடுவது போல் இந்த T.20 தொடரினால் கிரிக்கெட் ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது என்றால் மிகையில்லை. ஆட்டத்துக்கும் பார்ட்டிக்கும் உள்ள முக்கியத்துவம் விளையாட்டுக்கு இல்லை!! மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது!! ஆனால் அந்த மாற்றம் வளர்வதற்குத் துணைப் போக வேண்டுமே அன்றி தரக் குறைவிற்கோ, தாழ்விற்கோ காரணமாகக் கூடாது.

இந்த T.20 முன்னேற நினைக்கும் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம்; பல நாட்டு வீரர்களுடன்கலந்து விளையாடுவதால்  தத்தம் பலம்,  பலவீனங்களை அறிந்து சில நுணுக்கங்களை பகிர்ந்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் விளையாடும் போதுக் கிடைக்கும் பேரும் புகழும் குறுகிய காலத்திற்குத் தான். ஒரு திறமையை வெளிக் கட்டவோ அல்லது கிரிக்கெட்டில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கவோ கண்டிப்பாக இந்த T.20 முறை உதவாது. இந்த முறையில் பிரகாசிப்பவர்கள் டெஸ்ட் மாட்சில், ஒரு நாள் போட்டியில் நிலைத்து விளையாட முடியாமல் போகிறது. துரித உணவு போல் கிரிக்கெட்டிலும் துரிதத்தைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்என்ற பழியை போட்டு  இத் தகைய போட்டிகளை நடத்துவது அதிகமாகி விட்டது.

டெஸ்ட் போட்டி அதிகம் நடத்துவதன் மூலம் தான் திறமை சாலிகளை உருவாக்க முடியும்; தரமான விளையாட்டையும் காண முடியும். இதில் என்ன மாற்றம் செய்தால் ரசிகர்களை கவர முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். பணத்திற்கும் வியாபாரத்திற்கும் விளையாடும் இந்தப் போக்கு மாற வேண்டும். இதனால் இன்று அதிகம் பாதிக்கப் பட்ட பாகிஸ்தான் அணியைப் பார்க்கும் போது எல்லா ரசிகர்கள் மனமும் வேதனைத் தான் அடைகிறது. என்ன இருந்தாலும் இந்திய பாகிஸ்தான் போட்டிப் போல் வருமா? தேர்வாளர்களும் அரசியல் கலக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்லப் பயிற்சித் தளங்களை உருவாக்கி சிறந்த வீரர்களையும் உருவாக்க பாடு  பட வேண்டும்.