திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ! கேள்விக்குறி !!


சமச்சீர் கல்வி இன்று சமமாக இல்லாமலும், சீராக இல்லாமலும் சீரழிந்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அதே சமயம் கல்வி தரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகுப்பு வரை ஒரே மாதரியான பாடத் திட்டம்இருக்க வேண்டும் என்பதில் தான் தெளிவு வேண்டும். முதலில் நன்கு தேர்ந்த அனுபவம்  உள்ள கல்வியாளர்களைக் கொண்டு பாடத் திட்டம் வரையறுக்க வேண்டும். 5ஆம் வகுப்பு வரை ஒரே மாதரியான பாடங்கள் இருக்கலாம். ஓரளவு அந்த வயது வரை கற்றுக் கொள்ளும் திறன், அளவுகோல் இதில் எல்லாம் அதிக வேறுபாடு இருக்காது;  தேவையான அடிப்படை அறிவு திறன் கிடைக்கும் வண்ணம் பாட அமைப்பு இந்த வகுப்பு வரை இருத்தல் அவசியம்.

இன்றைய காலக்கட்டத்தில் சராசரிக்கும் அதிகமான knowledge தேவையாக இருக்கிறது . அதை மனதில் கொண்டு பாடத் திட்டத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற் படிப்பிற்கு  போகும் போது அதிக சுமையோ புரிவதில் சிக்கலோ, கஷ்டமோ இருக்ககூடாது. ஆறாம் வகுப்பு முதலே கொஞ்சம் கொஞ்சமாக தயாராகும் வண்ணம் கல்வி அமைப்பு இருத்தல் காலத்தின் கட்டாயம். கல்வித் தரம் நிலையாக இருக்க தகுந்த ஆசிரியர்களை அமர்த்துவது இன்னும் முக்கியம். ஆசிரியர்களை தேர்வு செய்வதில் அரசியல் புகுந்தால் தரமானக் கல்வியை எவ்வாறு தர முடியும்?

 Branded பொருட்களின் விலை அதிகமானாலும், அதன் தரத்தைக் கருதி எவ்வளவு விலையானாலும் வாங்கத் தயங்குவதில்லை. கல்வியும் இன்று அதே வியாபார நோக்கோடு தான் பார்க்கப் படுகிறது. இதனால் சிலப் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் பற்றிக் கவலைப் படாமல் தரமான கல்விக் கிடைக்கும் பட்சத்தில் இத்தகையப் பள்ளிகளை வரவேற்கின்றனர். சில  மேலை நாடுகளில் உள்ளது போல் இங்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி அமைப்பது சாத்தியம் இல்லை. பொருளாதார அடிப்படையல் நிறைய வேறுபாடு இருப்பதால் நடைமுறை படுத்துவது மிகவும் கடினம். இதை மனதில் கொண்டு கல்வித் திட்டம் செயல் படுத்த வேண்டும்.

தொழில் முறைக் கல்வியை விரிவு படுத்தி, அதற்கான விழிப்புணர்ச்சி மாணவர்கள் இடம் சென்றடைய வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஊக்கப் படுத்துவதைக் குறைக்க வழி செய்ய வேண்டும்; பொருளாதரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு இத் தொழில் கல்வி மூலம் பயன் பெற செய்ய வேண்டும். எதிர் காலத்தில் சுயமாகத் தொழில் துவங்குவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். வேலை இல்லாத் திண்டாட்டமும் குறைய வாய்ப்புண்டு; ஏட்டுக் கல்வி மட்டுமே தான் பொருளாதாரம் பெருக உதவும் என்ற எண்ணம் மாற வேண்டும். அடிப்படைக் கல்வியைக் கொண்டே தொழில் மூலம் சாதிபவர்கள் நிறையப் பேர் உண்டு; இரண்டு கோணத்திலும் சிந்தித்து அதற்கேற்றார் போல் கல்வி அமைப்பு இருக்குமே ஆனால் ஓரளவு சீர் படுத்த முடியும்.