வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்னா அச(தரா )ரே !!!

இன்று இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் குரல் லஞ்ச, ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே  உடன் கை கோர்த்திருப்பது வரவேற்க பட வேண்டியது. லோக்பால் மசோதாவின் முழு விவரம் எல்லோராலும் அறியப் படாமல் இருக்கலாம்; ஆனால் அது லஞ்சஊழலுக்கு எதிரான மசோதா என்ற விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கு இல்லை. 64 வருடங்களுக்கு முன்னால் அந்நியர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற அண்ணல் தலைமையில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம்.; இன்று அன்னா தலைமையில் லஞ்ச ஊழலுக்கு எதிரானப் போராட்டத்திலும் வெற்றிப் பெறுவோம் .அதற்கு எவ்வளவு  காலம் ஆனாலும் தளராமல், சாதிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் இளையத் தலைமுறையும் அதிக ஈடுபாடும், அக்கறையும் கொண்டு செயல் படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த ஆதரவு ஒரு புறம் அதிகரித்தாலும், இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டும். ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் துணைப் போகிறவர்கள் இப்போதேனும் தவறை உணர்ந்து இப் போராட்டத்தில் கைக் கோர்க்க வேண்டும். அதுமட்டும் அல்ல, லோக்பால் மசோதா சட்டத்தை அமல் படுத்துவதால் மட்டுமே லஞ்ச, ஊழலை முடிவிற்கு கொண்டு வர முடியாது; சிறு துளி பெரு வெள்ளம் போல் முதலில் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அந்த உறுதி வர வேண்டும்.

இன்றைய தலைமுறைக்கு, ஒரு காந்தியையோ, விவேகாந்தரையோ போன்ற தலைவர் வழி நடத்த முன்வந்தால் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இதற்கு இன்று அன்னா அசாரேக்கு கிடைத்திருக்கும் ஆதரவே சாட்சியாகும்; அடுத்த தலைமுறையனும் லஞ்ச, ஊழல் இல்லாத நல்ல சூழலில் வாழும் வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்; அதற்கான விதையை இப்போதே விதைக்க வேண்டும்; மரம் நடுபவனே அதன் பலனையும் அனுபவிக்க முடியாது ; அதே நிலைதான் நமக்கும். நல்லப் பலனைத் தருமே ஆனால் அதற்குண்டான முயற்சியையும், உழைப்பையும் கொடுப்பதில் தவறே இல்லை.

இன்னொன்றையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; எந்தப் பிரச்சனைக்கும்,உண்ணாவிரதம் மட்டுமே தீர்வாகாது. நாட்டை நல்ல முறையில் வழி நடத்திச் செல்ல இம்மாதிரி தலைவர்களின் ஆதரவு, துணை   மிகவும் அவசியம். அதற்காக தங்கள் உடல் நலத்தை பேணுவது மிகவும் முக்கியம். இதை மனதில் கொண்டு, போரட்டங்களை வேறு வழிக் கொண்டு கையாள வேண்டும்; அதில் வெற்றியும் காண வேண்டும்.