சனி, 30 ஜூலை, 2011

துணிந்து நில் !!!

நகரத்திலிருந்து சற்றே தள்ளி இருந்த அந்த  பிரம்மாண்ட பங்களாவிற்கு மேலும் அழகு சேர்த்தது அதன் உள்ளே இருந்த பூக்களும் செடிகளும் நிறைந்த தோட்டம். நகரின் முக்கிய புள்ளிகளும்,பணக்காரர்களும், அமைதி வேண்டி இந்த மாதிரி இடத்தை விரும்புவது அதிகமாகி விட்டது. பிரபாகரின் குடும்பமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த சொந்த வீட்டில் குடி வந்து முன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் கூட்டு குடும்பம் என்பது மிகவும் அரிதாகிவிட்டது . 

ஆனால் பிரபாகர் குடும்பம் கொஞ்சம் விதி விலக்கு. மனைவி சரளா, மகன்கள் ராகவ்,பாஸ்கர் மருமகள் சுனிதா என எல்லோரும், எந்த வித ஈகோ வும் இல்லாமல்சேர்ந்து இருக்கும்  நெருக்கமான குடும்பம்.

பாஸ்கரைத் தவிர மற்ற எல்லோரும் நன்றாகப்  படித்து நல்ல வேலையில்  இருப்பவர்கள். ராகவ் வெளி நாட்டில் படித்து இருந்தாலும், தாய்நாட்டில் வேலை செய்யவே விரும்பினான். அவன் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையும் ,வசதியும், மதிப்பும் உள்ள அலுவலகம் அமைய அதுவே போதுமானதாக இருந்தது. மனைவி சுனிதா தனியார் வங்கியல் பணிபுரிபவள். பிரபாகர் தனியார் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி. இவர் மனைவி சரளாவும் நிறைய படித்திருந்தாலும் வேலைக்குப் போகாமல் நிறைய பொது சேவையில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவள். பாஸ்கர் மட்டும் அதிகம் படிக்காததால், சொந்தமாக தொழில் தொடங்கி, அதில் நிறைய சம்பாதிக்கவும் செய்கிறான். வரும் லாபத்தில் ஒரு சிறு பகுதியை அனாதை இல்லங்கள், மருத்துவ உதவி, கல்விக்கு என்று தவறாமல் ஒதுக்கி விடுவான். இந்த குடும்பத்தில் எல்லோருக்கும் இரத்த தானம் செய்யும் வழக்கமும் உண்டு.

பாஸ்கர்  தனக்கு படிப்பு வராததை ஒரு பெரிய குறையாகவே எண்ணி தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு வீட்டினுள் வளைய வருபவன். குடும்பத்தினர் அதனைப் போக்க வேண்டி அவனை இழுத்து வைத்து கலகல என்று பேச முயன்றாலும் அவன் ஒதுங்கியே தான் இருப்பான். இந்த வீட்டில் தான் மட்டும் தனித்து இருப்பதாக பாஸ்கருக்கு தோன்றும்.

சமையல் அறையிலிருந்து கமகம என்று சாம்பார்,பொங்கல் மணம் எல்லோரையும் dining hall கு இழுத்தது. சரளாவின் மேற்பார்வையில்  சமையல்,மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருப்பதால், வீட்டுப் பொறுப்பைப் பற்றி கவலைப் படாமல் அவரவர் வேலைக்கு நிம்மதியாக போய் வர முடிந்தது. சாப்பிடும் போது எல்லோரும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே சாப்பிடுவது இவர்களது வழக்கம்.

 அன்றும் பாஸ்கர் வழக்கம் போல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சரளா,"என்னடா, இப்படி இருக்கே.வயதிற்கு  ஏற்ற மாறி ஜாலியா சந்தோஷமா இரேன்; தேவை இல்லாமல் கண்டதையும் நினைத்து உனக்கு நீயே ஒரு வேலிப் போட்டு  கொண்டு வெளி வர மறுக்கிறாய். ராகவைப் பாரு என்னதான் படித்து, வெளி நாடெல்லாம் போயிருந்தாலும் உன்னை போல் தொழில் தொடங்கும் தைரியம் இருந்ததா? என்றாள்  "ராகவ்,"ஆமாம் பாஸ், உன்னைப் பார்த்தால் பொறாமையாகவும்  ,அதே சமயம் பெருமையாகவும் இருக்கு; என்ன இருந்தாலும் உன் சாமர்த்தியம் எனக்கு வராது; இன்னொருவருக்கு சலாம் போடாமல் தனித்து சாதித்து ஜெயித்துக் கொண்டு இருக்கே', என்றான்.

ஆனால் இதே பாஸ்கர் நண்பர்கள் மத்தியில்  ரொம்பவும் ஜாலியாகவும், கடி ஜோக்ஸ் அடித்துக் கொண்டும் கலகலப்பாக இருப்பான்; இதுவே சரளாவிற்கு எதைச்சையாக வீட்டில் நடக்கும் ஒரு விருந்தின் போது தான் தெரிய வந்தது. வார நாட்களில், எல்லோரும் வேலை வேலை என்று ஓடுவதால் வாரக் கடைசியில்  relaxed ஆக இருக்க விருந்தை சரளா ஏற்பாடு செய்வதுண்டு . அப்படி தான் ஒரு முறை," அவனா இவன்!! என்று வியக்க வைத்த பாஸ்கரைப் பார்த்தாள். அது முதல் அவன் நண்பர்களும் விருந்தில் இருக்கும் மாறு பார்த்துக் கொள்வாள்.

"பாஸ்கி இந்த சனிகிழமை உன் friends இடம் dinner இருக்கு என்று சொல்லி விடு சரியா"என்றாள் சரளா. பின் ஆமாம்,ஏன் ரொம்ப dull ஆக இருக்கே, உடம்புக்கு ஒன்றும் இல்லையே, ஒழுங்க சாப்பிட கூட இல்லையே" ."கொஞ்சம் அலைச்சல் ஜாஸ்தி அதான்",என்றான். ஆனால் உள்ளுக்குள் ஏன் முன்பு போல் நம்மால் அதிக நேரம் உழைக்க முடியாமல் சோர்வு ஏற்படுகிறது; சரியாக சாப்பிட முடிவதில்லை, அடிக்கடி மயக்கம் வேறு வருகிறது என்று தெரியாமல் குழம்பினான். போன வாரம் கூட clientஇடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம், சுற்றி என்ன நடந்தது எனப் புரியாமல் இருட்டிக் கொண்டது. உடனே சரியாகி விட்டது. வேலை மும்மரத்தில் மறந்தும் விட்டான். இப்போ அம்மா கேட்கும் போது தான் நினைவு வந்தது. சரளாவிற்கு எதுவோ சரி இல்லை என்று தோன்ற,"எதற்கும் டாக்டர் ஐ போய் பாரு" என்றாள்.

வழக்கம் போல் இந்த வார விருந்தும்  பாட்டும் கும்மாளமுமாக களை கட்டிக் கொண்டிருந்தது. பாஸ்கி நண்பர்கள் கூட வந்தாகி விட்டது; பொதுவாக நேரத்திற்கு வரும் பாஸ்கரை தான் இன்னும் காணோம். கடைசியில்  சாபிடுகிற நேரம் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த குடும்பதற்கு, "ஐயோ,இதன்ன முகமெல்லாம் வெளிறிப் போய், ஜீவனே இல்லாத நடைப் பிணமாய் இருக்கான். தொழிலில் ஏதேனும் பிரச்சனையா? என்று கலங்கினர். எதுவானாலும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவனை சாப்பிட அழைத்தனர். அவனும் சாபிட்டுவிட்டு நழுவுவதிலே  குறியாக இருந்தான்.
இவனுக்கு நல்ல கலகலவென்ற வாயடிப் பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணனும், அப்போதான் மாறுவான்." என்ற கிண்டலைப் பொருட்படுத்தாமல், அசதியாக இருக்கு என்று படுக்கப் போவதாக கூறி தன் அறையை நோக்கி நடந்தான். எதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட சரளாவும் அதற்கு மேல் கட்டாயப் படுத்தவில்லை.

தன் அறைக்குப் போய் கதவை தாளிட்டவன் படுக்கையில் விழுந்து கதறி அழுதான். இது எப்படி நடந்தது, எனக்கா இந்த நிலை,இனி என் எதிர்காலம், அப்படி ஒன்று உண்டா? என் பலதும் எண்ணி மனம் புழுங்கினான். இனி உயிர் வாழ்வதில் என்ன பலன்? குடும்பதற்கு என்னால் எவ்வளவு பெரிய தலை குனிவு, அவமானம்; அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்? பல உணர்சிகளும், எண்ணங்களும் தாக்க உறக்கமும் வராமல் தவித்தான். வழக்கம் போல் ரத்த தானம் கொடுக்க போன போது,டாக்டர் சொன்ன விஷயம் தான் அவனை இந்த பாடு படுத்தியது.   அவன் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாக நத்தைப் போல் தனக்குளே சுருண்டான்.

4,5 நாட்களாக சரியாக சாப்பிடவும் இல்லை; தொழிலையும் கவனிக்கவில்லை.   இன்னும் சகஜ நிலைக்கு திரும்பாதது வீட்டில் எல்லோருக்கும் கவலையை அளித்தது. எல்லோரும் கலந்து பேசி பாஸ்கரிடமே தெளிவு படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். அன்று கொஞ்சம் நேரம் கழித்து வந்த  பாஸ்கர் hall லில் எல்லோரும் கூடி இருப்பதைப் பார்த்து தயங்கி நின்றான். சரளா அவனை அருகில் அமர்த்தி நிதானமாக பேச ஆரம்பித்தாள். 

"இங்கே பாரு நீ எங்களை விட்டு ஒதுங்கியே இருந்தாலும் நாங்கள் உன்னை எவ்வளவு நேசிக்கிறோம் என்று உனக்கேத்  தெரியும். இந்த கொஞ்ச நாளா உன்னைப் பார்க்கவே மனதிற்கு ரொம்ப கஷ்டமாகவும்,வருத்தமாகவும் இருக்கு; என்னப் பிரச்சனையானாலும் சொல்லு; எதுவானாலும் நாங்க உனக்கு உறுதுணையாக இருப்போம்". சரளா பேசப்பேச பாஸ்கர் துக்கம் தாங்காமல் சரளாவின் மடியில் முகம் புதைத்து கட்டுப் படுத்த முடியாமல் அழுதான். அனைவரும் ஒரு கணம் மூச்சு விட மறந்து அதிர்சிக்கு உள்ளனார்கள். விஷயம் தாங்கள் எதிர் பார்த்ததுக்கும் மேலான விபரிதம் என்று புரிந்தது. பாஸ்கர் ஒரு கணம் தலை நிமிர்ந்து தன்னை உயிர் கொல்லியான எய்ட்ஸ் தாக்கி இருப்பதைக் கூறிவிட்டு வேகமாக தன் அறையிகுள் புகுந்து கதவை சாத்தினான். குடும்பத்தினர் அதற்கு react பண்ணவும் மறந்து மிகுந்த அதிர்ச்சிக்கு
உள்ளனார்கள்.

2,3, நாட்கள் ஒருவர்கொருவர் பேசவும் முடியாமல் கலகலப்பு குறைந்து வீடே ஒரு மயான அமைதியை தழுவியது. எல்லோரும்  ஒரு நிலைக்கு வர இந்த நேரம் தேவையாக இருந்தது. 

அன்று சரளா பாஸ்கர் அறைக்குள் நுழைய,அவனோ பெட்டியுடன் எங்கோ கிளம்புவதற்கான ஆயுதத்தில் இருந்தான். "எங்கே போகிறாய்,"என்ற சரளாவின் குரல் மற்ற எல்லோரையும் அங்கு வரவழைத்தது  . "என்னை மன்னியுங்கள்,என்னால் எவ்வளவு பெரிய தலை குனிவும், அவமானமும்; அதனால் உங்களை விட்டு கண்காண இடம் போய் விடுகிறேன்,அதான் நல்லது " என்றான். "என்னப் பேசுகிறாய்,இப்போது தான் உனக்கு எங்களின்அன்பும் அரவணைப்பும் அதிகம் தேவை. நாங்கள் ஒருவரும் உன்னை தப்பானக் கண்ணோட்டத்தில் பார்கவில்லை;இந்த நோய் எப்படியெல்லாம் பரவக் கூடும் என்ற விழிப்பணர்வு உடையவர்கள். மும்பை போய் இருக்கும் போது, நீயே சொன்னாய் பானிபூரி , பேல்பூரி  எல்லாம் அடிக்கடி சாப்பிட்டேன்  என்று.ஒரு வேளை விற்பவர்களின் விரல் காயங்களினால் கூட வந்திருக்கலாம். சில விஷயங்கள் செய்தியாக படிக்கும் போது நமக்கெல்லாம் இது போல் நடக்க வாய்ப்பே இல்லை என்று தோணும்; அதனால் தான் நமக்கு வரும் போது போராடும் பக்குவம் வருவதில்லை.

எல்லோரும் ஒரு நாள் இந்த உலகை விட்டுப் போக வேண்டியவர்களே! பிறர் சொல்லுக்கும் ஏச்சுக்கும் பயந்து ஓடுவது கோழைத்தனம். உனக்காக வாழு; நமக்கு பணப் பிரச்சனை இல்லை, இனி இருக்கும் காலத்தில் இதைப் பற்றிய விழிப்புணர்வையும்,எதிர்த்துப் போராடும் பக்குவத்தையும் எங்கெலாம்  தேவையோ அங்கு பரப்புவோம். இந்த காலத்தில் சிறு குழந்தைகளுக்கு கூட சர்க்கரைநோய், எய்ட்ஸ் எல்லாம் பாதிக்கிறது. அந்த வயதிற்கே உண்டான விளையாட்டு, உணவு எல்லாம் மறந்து கட்டுப்பாடுடன் இருக்க வேண்டி உள்ளது; அந்தக் குழந்தைகளின் பெற்றோரை நினைத்துப் பார்; இப்படி எல்லோரும் வாழ்கை முடிந்து விட்டது என்று நினைத்தால், போராட்டம், மன தைரியம் போன்ற வார்த்தைகளுக்கு அகராதியல் இடம் இல்லாமலே போய் விடும். சுய இரக்கத்தை ஒதுக்கி விட்டு தைரியமாக எதிர் கொள். நாங்கள் எல்லோரும் உனக்கு பக்க பலமாக இருப்போம்."

சரளாவும் மற்றவர்களும் பேசப் பேச பாஸ்கர் மனதில் உள்ள சஞ்சலங்களும்,வருத்தங்களும் விலகி, போராடும் நம்பிக்கை நுழையத் தொடங்கியது. தன் குடும்பத்தினரை இன்று முழுமையாக
 புரிந்து கொண்டதுடன், அவர்களை நினைத்து மிகவும் பெருமைக் கொண்டான்.

இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைந்தால், ஒரு பாஸ்கர் என்ன, லட்சம் பாஸ்கர் கூட சமூகத்தையும் எந்தவிதமான  நோயையும் தைரியமாக   எதிர் கொள்ள முடியும் !!!

******************