வெள்ளி, 9 செப்டம்பர், 2011

தீவிரவாதமா? கோழைத்தனம் !!!

இன்று தொலைக் காட்சியில் வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தங்கள் உறவையும், உடன் பிறப்பையும் தேடி அலைந்தக் காட்சி மனதை உலுக்குவதாக இருந்தது. இம்மாதரி செயல்கள்  நாளுக்கு நாள் பெருகி வருவது வேதனையைத் தருகிறது. முதலில் இதை வெடிகுண்டு கலாசாரம் என்று கூறுவதே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கலாசாரம் நல்ல விஷயங்களுக்குத் தான் துணை போகும், வழிக் காட்டுமே அன்றி இத் தகைய செயல்களுக்கு அல்ல;

நம் நாட்டு 70 விழுக்காடு  மக்கள் ஏற்கனவே பலவிதமான சவால்களுடன் வாழ்ந்துக் கொண்டிருகிறார்கள். அரசியல் வாதிகளின் ஆளுமை, ஊழல், அத்யாவசப் பொருட்களின் தேக்கம் எல்லாவற்றையும் ஏற்று  மிகுந்த சகிப்புத் 
தன்மையுடன் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வாழ்க்கை வாழ்வதே குடும்பத்திற்கும், உறவுகளுக்கும் தான்; அதற்குமே இத்தகைய செயல்களினால் பங்கமும் இழப்பும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?

ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் கூட எப்பேர்பட்ட பசியோ, கோபமோ இருந்தால் கூட , புலி புலியையோ,சிங்கம் சிங்கத்தையோ, நாய் நாயையோ அடித்து துன்புறுத்தி, கொன்று பசி ஆறுவதில்லை. அப்படி இருக்க  ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஏன் தன் இனத்தையே  அழிக்கும் செயலில் ஈடு படுகின்றான்; புரியவில்லை! ஒரு வேளை இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு பலமான குடும்ப பின்னணி இல்லையோ; அதனால் தான் உயிரின் மதிப்பும் உறவுகளின் அருமையும் புரியவில்லையோ? உங்களின் கோரிக்கையை ஏற்க வைக்க அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது கோழைத்தனம். இதனால் உங்களுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை; மக்களின் ஆதரவும் பெறப் போவதில்லை.

உங்களின் கோரிக்கைகளை யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம்  தீவிரமாக வாதம் செய்யுங்கள்; தீவிரவாத  செயலில் ஈடுபடுவதால் அது பிரச்சனையை இன்னும் பெரிதாகி வெறுப்பும் இழப்புகளும் தான் மிஞ்சும். அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்; ஏன் உங்களில் ஒருவரே நாளை தூக்கு மேடை ஏறும் நிலை வந்தால் அதை எதிர்த்து போராடுவதில் முதலில் முன் நிற்பது இந்த அப்பாவி மக்களே தான். நம் மக்களுக்கு எதையும் மறக்கவும், மன்னிக்கவும் தெரியும். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் அப்பவும் அது அஹிம்சா வழி ஆகத் தான் இருக்கும்.

இயற்கையின் சீற்றத்தை கட்டுப் படுத்துவது நம் கையில் இல்லை. ஆனால் மனிதனின் சீற்றத்தால், மனிதனுக்கு ஏற்படும் கொடுமையையும், அழிவையும் கட்டுப் படுத்துவது நம் கையில் தான் இருக்கு; அதை உணர்ந்து, மனித உணர்வுக்கும் உயிருக்கு மதிப்பும் அளிக்கும் வண்ணம் செயல்படுவதில் தான் தீவிரம் இருக்க வேண்டும்.