uniform education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
uniform education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 பிப்ரவரி, 2012

வாங்க பேசலாம் !!!




சமீபத்தில் இந்தியக் கல்வித் தரத்தை பற்றி வெளி வந்த செய்தியை  அப்படியே ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும்அதை ஒருமுன்னெச்சரிக்கையாக எடுத்துக்  கொள்வதில் தவறில்லை. சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அடிப்படை கல்வியை ஆராயும் போது நமது கல்வித் தரம் மிகவும் பின் தங்கி இருப்பதாக கணித்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள கல்வியின் தரம், 72 நாடுகளில் 70 வது இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 2  மாநிலங்களைக்  கணக்கில் கொண்டு இந்த முடிவை அறிவித்திருக்கின்றனர். ஆனால் இது எந்த அடிப்படையில், எந்த அளவு கோலில் கணக்கெடுக்கபட்டது ? என்று  தெரியவில்லை; இவ்வளவு பெரிய ஆய்வை வெறும் இரண்டு மாநிலத்தை வைத்து எப்படி முடிவிற்கு வர முடியும் . இன்று, இந்தியாவில் படித்த நிறைய பேருக்கு வெளி நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? .ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்; முன்  போல் ஆசிரியர்கள்அதிக  ஈடு பாட்டுடன் சொல்லிக் கொடுப்பதில் வேண்டுமானால் தொய்வு நிலை ஏற்பட்டிருக்கலாம்; மேலும் இப்போது தரமான ஆசிரியர்களைக் கூட காண்பது அரிதாகி விட்டது. எல்லோருக்கும் பணத் தேவை அதிகரித்திருப்பது காலத்தின் கட்டாயம் .ஆசிரியர் வேலையில் இதை எதிர் பார்க்க முடியாது; ஒரு வேளை அவர்களையும் மதித்து நல்ல சம்பளம் கொடுத்தால் தரமான ஆசிரியரை பெறுவதில் கஷ்ட்டம் இருக்காது.

ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பது பழமொழி; நம் நாட்டில் பள்ளி வாசனை அறியாத சிறுவர்கள் கூட கணக்கு வழக்குகளில் மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.இதை பெட்டிக் கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் வேலை செய்பவர்களிடம் கண்கூடாக பார்கிறோம். சில சுட்சமங்களும் சாதுரியங்களும் படித்தவர்களை விட இவர்களிடம் அதிகம் பார்க்க முடியும். ஆனால் அடிப்படைக் கல்வி இருந்தால் இவர்களால் இன்னும் சாதிக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது. இம் மாதிரி விஷயங்களை பொது படையான ஒரு அளவு கோல் வைத்து கணிக்க  முடியாது. எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான சட்டத் திட்டங்கள் இருப்பதில்லையே; சில சட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாச படுகிறது; உதாரணத்திற்கு நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் என்பது சட்டத்திற்கு விரோதமானது. ஆனால் சில நாடுகளில் சிறுவர்கள் கூட பகுதி நேர வேலை பார்ப்பதை பெற்றோரும் சரி அரசாங்கமும் சரி அனுமதி அளிக்கிறது; நமது நாட்டில் திரைப்படங்களில்  நடிப்பது மட்டுமே விதி விலக்கு; சில இடங்களில் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே கற்கும் வழக்கமும் இருக்கிறது; அது நமது நாட்டிற்கு சரிவராது. பல்கலை கழகமும், பள்ளிக் கல்லூரிகளும் நாட்டிற்கு  நாடு வித்தியாசமான சூழ்நிலையில் தான் அமையப் பெற்றிருக்கு; வளரும் நாடுகளில் அத்தகைய வசதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது; அதனாலேயே கல்வித் தரம் பாதிக்கும் என்பதையும் ஏற்க முடியாது.


நம்  நாட்டில் கல்வின்  நிலை எந்த தரத்தில் இருக்கு என்பதை இன்னொருவர் சொல்லி அறிந்துக் கொள்ள வேண்டிய சுழலில் நாம் இல்லை. அது நமக்கே தெரியும்; எந்த நிலையிலுருந்து நாம் இன்று  இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கோம் என்று எல்லோரும் அறிந்ததே; இன்று மற்றவர்களுக்கு  போட்டியாக நாம் இருப்பதே  பெருமை பட வேண்டிய விஷயம். இன்றையக் காலக் கட்டத்தில்  நம்மிடையே  பல விஷயங்களில் மாற்றம் நடந்துக் கொண்டிருக்கும் நேரம்; அதனால்  சில பின்னடைவுகளும் தொய்வுகளும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை தவிர்க்க முடியாது தான். இது நிரந்தரம் கிடையாது; இந்நிலை கூடிய சீக்கிரமே மாறி விடும்.
  
உண்மை இன்று நமது அடிப்படைக் கல்வியில் தரமும் மாற்றமும் தேவை தான். காலத்திற்கு எற்றார் போல் நடை முறை  வாழ்க்கைக்கு  பயன் படும் வண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்படுவது அவசியம்; கட்டிடத்திற்கும்  வசதிக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை சரியான ஆசிரியர்களை அமர்த்துவதிலும் காட்ட வேண்டும் ;சரியான பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது மட்டும் அல்லாமல் தகுந்த ஊதியத்தை தருவதிலும் பரந்த மனத்தைக் காட்ட வேண்டும். சிறந்த கல்வி ஆய்வார்களைக்  கொண்டு சரியானபடி பாடத் திட்டங்களை வகுத்து நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை எல்லோரும் உணரும் நாள் கூடிய சீக்கிரமே அமையும்.



திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ! கேள்விக்குறி !!


சமச்சீர் கல்வி இன்று சமமாக இல்லாமலும், சீராக இல்லாமலும் சீரழிந்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அதே சமயம் கல்வி தரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகுப்பு வரை ஒரே மாதரியான பாடத் திட்டம்இருக்க வேண்டும் என்பதில் தான் தெளிவு வேண்டும். முதலில் நன்கு தேர்ந்த அனுபவம்  உள்ள கல்வியாளர்களைக் கொண்டு பாடத் திட்டம் வரையறுக்க வேண்டும். 5ஆம் வகுப்பு வரை ஒரே மாதரியான பாடங்கள் இருக்கலாம். ஓரளவு அந்த வயது வரை கற்றுக் கொள்ளும் திறன், அளவுகோல் இதில் எல்லாம் அதிக வேறுபாடு இருக்காது;  தேவையான அடிப்படை அறிவு திறன் கிடைக்கும் வண்ணம் பாட அமைப்பு இந்த வகுப்பு வரை இருத்தல் அவசியம்.

இன்றைய காலக்கட்டத்தில் சராசரிக்கும் அதிகமான knowledge தேவையாக இருக்கிறது . அதை மனதில் கொண்டு பாடத் திட்டத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற் படிப்பிற்கு  போகும் போது அதிக சுமையோ புரிவதில் சிக்கலோ, கஷ்டமோ இருக்ககூடாது. ஆறாம் வகுப்பு முதலே கொஞ்சம் கொஞ்சமாக தயாராகும் வண்ணம் கல்வி அமைப்பு இருத்தல் காலத்தின் கட்டாயம். கல்வித் தரம் நிலையாக இருக்க தகுந்த ஆசிரியர்களை அமர்த்துவது இன்னும் முக்கியம். ஆசிரியர்களை தேர்வு செய்வதில் அரசியல் புகுந்தால் தரமானக் கல்வியை எவ்வாறு தர முடியும்?

 Branded பொருட்களின் விலை அதிகமானாலும், அதன் தரத்தைக் கருதி எவ்வளவு விலையானாலும் வாங்கத் தயங்குவதில்லை. கல்வியும் இன்று அதே வியாபார நோக்கோடு தான் பார்க்கப் படுகிறது. இதனால் சிலப் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் பற்றிக் கவலைப் படாமல் தரமான கல்விக் கிடைக்கும் பட்சத்தில் இத்தகையப் பள்ளிகளை வரவேற்கின்றனர். சில  மேலை நாடுகளில் உள்ளது போல் இங்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி அமைப்பது சாத்தியம் இல்லை. பொருளாதார அடிப்படையல் நிறைய வேறுபாடு இருப்பதால் நடைமுறை படுத்துவது மிகவும் கடினம். இதை மனதில் கொண்டு கல்வித் திட்டம் செயல் படுத்த வேண்டும்.

தொழில் முறைக் கல்வியை விரிவு படுத்தி, அதற்கான விழிப்புணர்ச்சி மாணவர்கள் இடம் சென்றடைய வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஊக்கப் படுத்துவதைக் குறைக்க வழி செய்ய வேண்டும்; பொருளாதரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு இத் தொழில் கல்வி மூலம் பயன் பெற செய்ய வேண்டும். எதிர் காலத்தில் சுயமாகத் தொழில் துவங்குவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். வேலை இல்லாத் திண்டாட்டமும் குறைய வாய்ப்புண்டு; ஏட்டுக் கல்வி மட்டுமே தான் பொருளாதாரம் பெருக உதவும் என்ற எண்ணம் மாற வேண்டும். அடிப்படைக் கல்வியைக் கொண்டே தொழில் மூலம் சாதிபவர்கள் நிறையப் பேர் உண்டு; இரண்டு கோணத்திலும் சிந்தித்து அதற்கேற்றார் போல் கல்வி அமைப்பு இருக்குமே ஆனால் ஓரளவு சீர் படுத்த முடியும்.