திங்கள், 21 நவம்பர், 2011

லஞ்ச (மு)தலைகள் ...!!!!


லஞ்ச (மு)தலைகள் ...!!!!

ஒரு காலத்தில் சிறைக்குச் செல்லும் அரசியல் தலைவர்களின் பின்னணியில் மக்களுக்கான நியாயமான நலத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இருந்தது.. சுய விளம்பரதிற்கோ, சுய லாபத்திற்கோ, முக்கியத்துவம் இல்லாத அவர்களது செயல் மக்களிடையே பெரும் மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சொத்துக் குவிப்பிற்கோ, வாரிசுகளின் எதிர் காலத்திற்கோ, அரசியல் தலைமையை கருவியாகப் பயன் படுத்த வில்லை; மக்களிடம் உண்மையான பற்றும் சேவை எண்ணமும் இருந்ததால், அத் தலைவர்களின் சிறைவாசம் மக்களின் மனதில் பெரும் பாதிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. தன்னலமற்ற செயலால் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்தது. அதனால் தானோ என்னவோ அவர்களின் வாரிசுகள் யார், எங்கே இருக்கிறார்கள் என்று இன்று நம்மால் அடையாளம் கூட காண முடிவதில்லை.

ஆனால், இப்போதுள்ள அரசியல்வாதிகளும், தலைவர்களும் (?) அரசியலை ஒரு லாபகரமான வியாபாரமாக எண்ணித் தான் நுழைகின்றனர். எப்போது பணம் பிரதானமாகக் கருதப் படுகிறதோ அப்போதே இலவச இணைப்பாக லஞ்ச,ஊழலும் உள்ளே நுழைந்து விடுகிறது; இன்றும் தலைவர்களும்(?), வாரிசுகளும் அடிக்கடி சிறை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின்னணி தலைக்குனிவை  தான் ஏற்படுத்துகிறது;  நம்பிய மக்களுக்கு அவர்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகம் கண்டு மனம் கொதித்து தான் போகிறது. இதனை கண்டு வருத்தமும், பரிதாபமும் படும் சிலர் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தானா என்று சிந்திக்க  வேண்டும். தலைவர்கள் (?) வாரிசுகளுக்கு சரியான வழி காட்டியாக இல்லாவிட்டாலும் தவறான பாதையில் செல்வதை தடுக்காமல் இருப்பதும் ஒரு வகையில் குற்றமே.

ஒருவரிடம் இருக்கும் அளவிற்கு அதிகமான பணமே லஞ்ச ஊழல் கைமீறி போனதிற்கு ஒரு காரணமாகிறது. லஞ்சத்தை ஒழிக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப் பட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் நம்பிக்கை இழக்க வில்லை; இதற்கு எப்படியும் ஒரு விடிவு பிறக்கும் என்று நினைத்து தான் ஓட்டுப் போட்டு வருகின்றனர். இன்றும் ஒரு சில கிராமங்களில் அந்தந்த வார்டுத் தலைவர்கள் போட்டி இன்றி தேர்ந்தடுக்கப் பட்டு தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; மனது வைத்தால் மனசாட்சியுடன் செயல் பட்டு மக்களுக்கு ஊழல் இல்லாத வாழ்க்கையை அமைத்து தர முடியும் என்பதை உணர்த்தி உள்ளனர். சிறு துளி பேரு வெள்ளம் போல் அந்தந்த பகுதித் தலைவர்கள் இதனை  உணர்ந்து செயல் பட்டாலே கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிரண்டோடு நிற்காமல் மற்ற ஊராட்சி நகராட்சி எல்லாவற்றிக்கும் இந்த நிலை பரவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக