culture shock. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
culture shock. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 பிப்ரவரி, 2012

இது நாத்திகமாகுமா!!!!

இது நாத்திகமாகுமா!!!!


ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி கொள்கைகளும் வழிபாடுகளும் உண்டு. இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே உருவ வழிபாடு என்ற தனித்துமை உண்டு. இது ஒரு தனிச் சிறப்பாக இருந்தாலும் இதுவே சில சமயம் கேலிக்கு ஆளாக்க படுகிறது. இந்து மதம் என்றாலே பல உருவ கடவுள்களும், இரு பெரும் காப்பியங்களுமான ராமாயண மகாபாரதமும் தான் நினைவுக்கு வரும். இந்த மதத்தில் முக்கியமான ஒரு பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்பது; ஆனால் வணங்கப் படும் சிவன் விஷ்ணு,முருகன்,கண்ணன் என்றுஎல்லாக்  கடவுளயும் இரு மனைவியுடன் தான் வணக்குகிறோம். இதுவும் மற்றவர்களால் கேலிக்குறியதாக்கப் படுகிறது. கண்ணனை பற்றி கூறும் போது, லீலைகள் என்ற பெயரில் வெண்ணை திருடியதையும் கோபிகைகளுடன் விளையாடி களித்த கேளிக்கைகளையும் தான் அதிகம் அறிவோம். ஏன் இப்படி? கதா காலஷேபத்திலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி கதை, கிளைக் கதைகளையே கூறி வருகின்றனர்; இந்து மதத்திற்குரிய நான்கு வேதங்களில் வாழ்க்கைக்கு தேவையான எத்தனையோ கருத்துக்கள் கூற பட்டிருக்கின்றன.அதனைக் கொண்டு கதைகளும் கிளைக் கதைகளும் அமைக்கலாமே. படங்களிலும், திரைப்படங்களிலும் உருவங்களை வைத்து அவரவர் இஷ்டத்திற்கு, கையாளுவதும் வரம்பு  மீறுவதையும் ஒன்றும் செய்ய முடிவதில்லையே!

 இப்படி சொல்வதால் நாத்திகம் பேசுவதாக அர்த்தமாகி விடாது. போலிச் சாமியார்களும் கொள்கைகளை பரப்புவதை விட கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி சொத்துக் குவிப்பதில் தான் வெற்றிக் காண்கின்றனர். ஆன்மிகம் என்பதன் அர்த்தத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை; கோவில் என்பது மனதிற்கு அமைதியையும் தூய்மை படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும் ; எல்லா மனிதனுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ; ஆனால் கட்டுவதற்கு உதவியவர்களையே விதிமுறைகள் என்ற பேரில் கோவில் உள்ளே அனுமதிபதில்லையே?

அடுத்து ராமாயணம்; ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி சொன்னாலும், அது எழுத பட்டக் காவியம்; அதில் வரும் ஒரு பாத்திரமான  ராமனைக் கடவுளாகக் கொண்டாடுகிறோம்; திருமணம் ஆனவர்களை ராமனும் சீதையும் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்; ஆனால் திருமணத்திற்கு பிறகு சீதை அனுபவித்த  துயரங்களும் துன்பமும் யாவரும் அறிந்ததே; அப்போ இந்த வாழ்த்து பொருந்துமா  என்று தெரியவில்லை;இதே காவியத்தில் தான் ராமனின் தந்தை தசரதனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள்; உடன் பிறப்பு பற்றிய பெருமைக்கு லட்சுமணன் எடுத்துக் காட்டாக இருந்தாலும், மனைவி ஊர்மிளா பாத்திரத்தின் பொறுமையும், பெருமை அதிகம் அறிய படாமலே போய்விட்டது; காவியத்திற்காக படைக்கப் பட்ட பாத்திரங்களை எல்லாம் கடவுளாக கொண்டாடுவதை விட, மனதை தூய்மை ஆக வைத்துக் கொள்ள உதவும் கருத்துக்களை பின் பற்றுவதே மேலாகும்; திருடர்களும், சமுதாய விரோத செயல்களில் ஈடுபவர்கள் கூட கடவுளை வணங்கி விட்டுத் தான் செய்கின்றனர். இதையும் கேலியாகத்தான் பார்கின்றனர்.

மகாபாரதத்தில் பகவத் கீதையில், வாழ்க்கைக்கு துணை நின்று முன்னேறக் கூடிய அனைத்து விஷயங்களும் சொல்லப் பட்டிருகிறது . ஆனால்,அதை விட அதில் இடம் பெற்றிருக்கும் போருக்கும் சண்டை சச்சரவிற்கும் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேசப்   படுகிறது. அதிலும் திரௌபதைக்கு 5 கணவர் என்பதை காவியம் என்பதாலையே ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இன்னொன்று , மகாபாரதத்தில்  சகோதரி தேவகிக்கு  பிறக்கும் எட்டாவது குழந்தையால் மாமனான கம்சனுக்கு ஆபத்து என்று ஒரு அசரிரி கேட்கும்; இந்தக் காலத்து சிறுவன் கேட்ட கேள்வி, தெரிந்தும் ஏன் இருவரையும் ஒரே சிறையில் கம்சன் அடைத்தான் என்று?  இந்து மதத்தில் எத்தனையோ தெளிவான நல்லக் கருத்துக்கள் இருக்கின்றன. அதை எல்லாம் பரப்புவதில் தான் தீவிரத்தைக் காட்ட வேண்டும்.தேவையல்லாத பேச்சையும் கிண்டலையும் களைய முனைய வேண்டும்.

பொதுமறையான வள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளது. இது மனிதனுக்கு எந்தக் காலக் கட்டத்திலும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. இதை விட ஒரு பெரிய பொக்கிஷம் வேறு உண்டா? கடவுள் பக்தி என்பதே மனதை தூய்மையாக வைத்துக் கொள்வது தான்! அது கீதை மூலமாகவோ திருக்குறளின் மூலமாகவோ கிடைக்குமே ஆனால் அதை பின்பற்றி நடப்பதில் தவறேதும் இல்லை.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கலக்கல் கலாச்சாரம்

கலக்கல் கலாச்சாரம் 


இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான விளக்கங்கள் பெரியவர்களுக்கே தெரியாததால் இந்தக் குழப்பம்; இந்தத் தலை முறையும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்; எல்லா விஷயங்களுக்கும் காரணம்  இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிக்கும் உறவுகளின் அருமைக்கும் பெருமைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்; கூர்ந்து நோக்கினால் நாம் கொண்டாடும் பண்டிகை போது அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் காய் கனியையோ பொருட்களையோ தான் அதிகம் பயன் படுத்தி இருப்போம்; உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை; புதிய அரிசியையும், அந்தக் காலக் கட்டத்தில் விளைந்திருக்கும் கரும்பையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம்; சில பண்டிகைகள் போது ஆரோகியமான உணவு முறையை பின்பற்றுகிறோம் ;நவராத்திரியை உதாரணமாக கூறலாம். பூவிற்கும் நெற்றி பொட்டிற்கும் மிகுந்த முக்கியதுவத்தை தமிழ் காலாச்சாரம் அளித்து வருகிறது. இதில் எல்லாம் பெரிய முரண்பாடுகள் வருவதில்லை; சில நம்பிக்கை   சார்ந்த விஷயங்கள் செயல்படுத்த கட்டாயப் படுத்தும் போது தான் தர்கங்களும் தேவையில்லாத மனக் கசப்பும் ஏற்படுகிறது.

இது ஒரு விதத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு தாலியான மஞ்சள் கயத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது; ஆனால் இப்போ தாலிக் கட்டுவதை விட, திருமணம் பதிவு செய்ய படும் சிறு காகிதத்திற்கு தான் அதிக மதிப்பு ; தாலியை விட பதிவு செய்யப் பட்டிருந்தால் தான் அத் திருமணம் ஏற்றுக் கொள்ள படுகிறது; இதை காலாச்சாரம் தவறி விட்டது என்று எப்படி கூற முடியும்? காலாச்சாரம் என்ற பெயரில் பிள்ளை,பெண்ணின் தாய் விதவையாக இருந்தால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் கூட முழுமையாக கலந்துக் கொள்ளும் உரிமை வழங்கப் படவில்லை; கலைஞர் சொன்னது போல் அந்த வார்த்தைக்கு கூட ஒரு பொட்டு இல்லை; அதனாலேயே அமங்கலி என்று எழுதி வார்த்தைலாவது பொட்டு  இருக்கட்டுமே என்று பயன் படுத்தி வந்தார். இன்று நிலைமை மாறி வரவேற்கத் தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது; இதுவும் காலாச்சாரத்தை மீறின விஷயம் இல்லை.ஒரு காலத்தில் ப்ரோகிதர்கள், கடல் தாண்டி செல்வது பாரம்பரியத்தை மீறின செயலாக கருதப் பட்டது; ஆனால் இன்றும் அப்படியே செயல் பட்டால் நமது பண்பாடு உலகளவில் தெரியப் படாமலே போயிருக்க வாய்ப்புண்டு. அதே சமுகத்தை சேர்ந்த சிலரால் தமிழர்களின் திறமையும் எல்லோராலும் பேசப் படுகிறது. நாமாக ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள் காலத்தினால் மாறும் போது அது கலாச்சாரத்தை மீறினதாகாது;

ஆனால் இப்படியே எல்லா விஷயங்களையும் ஒதுக்கியும் மாற்றியும் , காலத்தின் பேரில் பழி போடுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது; விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு வருகிறோம்.அது முழுவதுமாக காணாமல் போகும் முன் சுதாரித்துக் கொள்வது நல்லது. திருமணம் என்றாலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரியானபடி அவர்களை உபசரித்து அனுப்புவதில் கூட நாம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை; நம்மை மதித்து வந்தவர்களை தக்க மரியாதையுடன் கவனித்து, உபசரித்து அனுப்புவது தான் பண்பாடு; அழைபிதழ்களை வேண்டுமானால் நேரமின்மைக் காரணமாக e-mail இல் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளலாம்; சில விஷயங்களுக்கு அதற்குண்டான முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும்.என்னதான் நண்பர்கள் பெருகி இருந்தாலும் சுற்றத்தார்களுக்கும் நாம் உரிய பெருமையை அளிக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும்,விருந்தோம்பலிலும் நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது. இது நாம் உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விஷயம். சுகி சிவம் அவர்கள் சொன்னது போல் முன்பு தனியாக இருந்த bath.room இன்று attached ஆகவும், சேர்ந்து இருந்த உறவுகள் deattached ஆக மாறிவிட்டதும் வருத்த பட வேண்டிய ஒன்றாகும். எதற்குமே react பண்ணுகிற அளவிற்கு நாம் act பண்ணுவதில்லை; இன் நிலை மாறினால் நன்றாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதித்தாலும் வேர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலை முறையிடம் தான் இருக்கு.

புதன், 4 ஜனவரி, 2012

மன அழுத்தமா ...? போயே போச்சு !!!


மன அழுத்தமா ...?  போயே போச்சு !!!

இன்றைய காலக் கட்டத்தில் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று திருமணமான  இளையத் தலைமுறை இடம் காணப் படும் மனஅழுத்தம் .அதுவும் குறிப்பாக பெண்கள்  தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகு பாடே இல்லாமல் இதற்கு ஆளாவது மிகவும் வருத்தத்திற்குரியது ; அதே சமயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ஒரு காலத்தில் இத்தகைய மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் காணப் பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்து வந்தன. குடும்பச் சுமை, பணமின்மை, அதிக பொறுப்பு, கடமையை சரி வர செய்ய முடியாத இயலாமை, பலரின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது அத் தகைய நிலை மிகவும் மாறி விட்டது. இருந்தும் ஏன் இந்த நிலை;

இன்றைய வளர்ப்பு முறைக் கூட ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு  அதிக சுதந்திரம் ,பொறுப்பில்லாத வாழ்கை ,ஒன்றோ இரண்டோ தான் மக்கட் செல்வம்  அதனாலேயே அவர்கள் மேல் பொறுப்பை திணிக்க விரும்பாத பெற்றோர். இதனால் சிறு சிறு விஷயங்களைக் கூட சரியாக ஆளத் தெரியாமலும்  அனுசரித்துப் போக முடியாமலும் திண்டாடுகின்றது இத் தலை முறை. அதுவும் வாழ்வின் முக்கியக் கட்டமான திருமணம் என்று வரும் போது அதிகமாகவே உணரப் படுகிறது.

முன்பு எப்படி சிறிய ஊர்களிலுருந்து திருமணத்திற்கு பிறகு  நகரத்திற்கு வாழ வருபவர்கள் அதிகமோ இப்போது நகரத்திலிருந்து வெளி நாடு செல்வது அதிகமாகி விட்டது. அப்பவும் நகரத்து வாழ்க்கைக்கு சிலர் தங்களை பழக்கிக் கொள்ள மிகவும் தடுமாறுவார்கள். ஆனால் வீட்டுப் பெரியவர்கள் அப்பப்போ வந்து சரியான ஆலோசனை வழங்கி வழி நடத்த ஒரு வாய்ப்பு இருந்தது. மேலும் பெரிய படிப்பு படித்திருக்கும் பெண்களின் விழுக்காடும் குறைவு. பெரியவர்கள் அனுபவத்தில் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவமும் இருந்தது.

ஆனால் இப்போது பொதுவாகவே பெண்கள் நிறைய படிக்கின்றனர்; அதுவும் திருமணம் முடிந்து அதிகம் வெளி நாடு  தான் செல்கின்றனர். அங்குள்ளவர்களுக்கு விடுமுறை குறைவு என்பதால் விசா ஏற்பாடெல்லாம் முன்னமே செய்து திருமணம் முடிந்து கூடவே அழைத்தும் செல்கின்றனர்.

அப்படி போகும்போது படித்த படிக்காத பெண்களுக்கு முதலில் ஏற்படுவது கலாசார அதிர்ச்சி. என்னதான் ஓரளவு வெளி நாட்டு வாழ்கை பற்றி அறிந்திருந்தாலும் அதை எதிர் கொள்ளும் போது தடுமாற்றமும் , பக்குவம் இல்லாததால் பிரச்சனையை சமாளிக்கும் திறமையும் தைரியமும் காணமல் போய் விடுகிறது. மேலும்  கணவனுக்கோ உடனே வேலையில் சேர வேண்டியக் கட்டாயம்; கூட இருந்து சொல்லிக் கொடுப்பது என்பது இயலாதது. மனைவி வீட்டு வேலை வெளி வேலை எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டிய சூழ்நிலை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சகஜமாக பேச முடியாத நிலை, மொழி பிரச்சனை , வீட்டு உபயோகத்திற்கான உபகரணங்களைக் கூட சிலருக்கு எப்படி பயன் படுத்துவது என்பது தெரியாது; என்னதான் F.B, chat எல்லாம் இருந்தாலும் மனதை ஒரு வெறுமை சூழ்ந்துக் கொள்வதை மறுக்க முடியாது. திக்குத் தெரியாத காட்டில் குழந்தையை போல் தவிக்கின்றனர்.

குறிப்பாக முன்பு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வந்த இடத்தில் உடனே வேலைக்கு போக முடியாது; தினமும் பல தரப் பட்ட மக்களை சந்தித்தும்  நண்பர்களுடன் பழகியும் வேலைப் பார்த்தவர்களுக்கு வீட்டிலேயே அடைந் து இருப்பது இயலாத ஒன்று. கணவருக்கோ வேலை பளுவினால் மனைவியின் மன ஓட்டத்தை புரிந்துக் கொள்ள கூட நேரம் இருக்காது. வந்த புதிதில் நண்பர்களை , புதிய இடத்தையும் பார்ப்பதில் ஒரு மாதம் போகலாம்; பிறகு தனிமையும் வெறுமையும் தான் வாட்டும். இந்த சுழலில் தான் சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளக்  கூட யாரையும் நாட முடியாமல் தவிக்கின்றனர். அனால் இந்த ஆரம்பக் கட்டத்தை சமாளித்து தாண்டி விட்டால் பிறகு வாழ்க்கை சொர்க்கம் தான்.

இந்த மன அழுத்தத்தை தவிர்க்க மனதை தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் திசை திருப்ப வேண்டும். ஏதேனும் ஒரு கலையைக் கற்று அதனை வளர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பமாக இந்த நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ளலாம்; கூடுமானவரை மனதை அலைய விடாமல் பிடித்தமான hobby இல் கவனம் செலுத்தலாம். எல்லா இடமும் நாம் நினைப்பது போல் அமைவது அத்தனை சுலபம் இல்லை. மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது; அதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு ஏற்ப வாழ மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதை புரிந்துக் கொண்டால் தேவையல்லாத உளைச்சலும் மன அழுத்தமும் ஏன் ஏற்பட போகிறது?.