relationship லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
relationship லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2011

பொண்ணு பார்க்க .....





பூமா அன்று காலையிலிருந்து படபடப்பாகவும் எல்லாம் நல்ல படியாக  முடிய    வேண்டுமே  என்றும்    நினைத்தாள். இருந்தாலும் அப்பப்போ  வயற்றில் மீன் துள்ளித்துள்ளி விளையாடியது .(அது என்ன எப்பபாரு  பட்டாம் பூச்சி  பறக்கிறது..} இன்னிக்கு அகில் பூமாவின் மகன் சுகந்த்கு பெண்  பார்க்க போகிறார்கள் .சுகந்தும் அஞ்சனாவும்   ஒரு  வருஷமா நன்றாக பழக்கம். பொண்ணு பார்க்க என்று  சொல்வதற்கு பதில்  சம்பந்தி பார்க்க என்று சொல்வது தான் சரி.

பூமாக்கு.தன்னை   பெண் பார்க்க வந்த நாள்  நல்ல ஞாபகம் வந்தது.பூமா குடும்பம் ஒரு  கட்டுப்பட்டியானது. ஜாதகம் பார்பதே  சொல்லமாட்டார்கள் . எல்லாம் ஒரு மௌன நாடகமாகவே  இருக்கும் ..இவளும் அதை மனதுக்குள் ரசிப்பாள். திடீரென்று  மாப்பிளை வருவதாக அன்று காலை தான் சொன்னார்கள். .என்ன படிப்புவேலைஒரு போட்டோ மூச் எதுவும் சொல்லவில்லைஅகில் , வந்தவுடன் ஒரு பேப்பர்   வைத்து முகத்தை மூடியவர்தான் ,ஏதோ அதிலிருத்து   தான் கேள்வி  கேட்க  போகிற மாதரி  மூழ்கி விட்டார் .ஏதோ தம்பியும் அம்மாவும் பார்க்க   நல்ல இருந்ததால் மனதில்  பாரத்தை  போட்டு பூமா சரி என்று சொன்னாள்.  ஆனால் அகில் உண்மையிலே ரொம்ப  நல்ல மாதிரிபேப்பர் விஷயத்தை கவனித்தது தனி கதை.

பூமாஅகில்சுகந்த் மூவரும்  சரியான டைம்க்கு கிளம்பி அஞ்சனா வீடு  போனார்கள் . என்ன அதிசியம் ! அஞ்சனா தான் எல்லோரையும்  உபசரித்து  அமர  செய்தாள், இரு குடும்பங்களயும் அஞ்சனாவும்சுகந்தும் அறிமுகம் செய்து விட்டு இரண்டு பேரும்  வாசலுக்கு போய்விட்டார்கள்.  இவர்களும்.  ஒரு  மாதிரி ஆரம்ப  கூச்சம் எல்லாம் போக சகஜமாக பேசி ,கல்யாணம் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு  வந்தார்கள்இது தான் இன்றைய  நடை முறை! . இதை புரிந்து கொண்டு நடந்தால் இந்த தலை முறையோடு  பெற்றவர்களுக்கு  நல்ல உறவு பாலம் அமையும் .

வெள்ளி, 21 அக்டோபர், 2011

உறவில் திருமணம் ....ஒரு ஷொட்டு!!!



ஒரு காலத்தில் உறவில் திருமணம் என்பது நம்மிடையே அதிகம் காணப்பட்டு வந்தது. பின் விஞ்ஞானரீதியாக உறவுத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் சில குறைபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்து வைக்கப் பட்டதால் அத்தகைய திருமணம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது. இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதனால் சில நல்ல விஷயங்களையும்  இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

இன்றைய உறவுகள் சங்கிலித் தொடர் போல் இல்லாமல் சிறு சிறு தீவாகக் காணப்படுகிறது. உறவில் திருமணம் குறைந்தது கூட இந்நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொத்துக்காக மட்டும் இன்றி பலமான உறவு பாலத்திற்கும் உறவில் திருமணம் பெரிதும் துணை புரிந்ததை மறுபதற்கில்லை. புகுந்த வீடும், பிறந்த வீடும் ஒன்றுக்குள் ஒன்றாகி இருந்ததால், திருமணம், பண்டிகை, மற்ற முக்கிய  தினங்களில் எல்லோரும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வதுடன், மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆசையுடனும் கலந்துக் கொண்டு உறவின் பெருமையை மேம் படுத்தினர். தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடோ , பிரச்சனைகளோ வந்தாலும் பாதிப்பு எல்லோருக்குமே என்பதால், அதிகம் வளரவிடாமல் விரைவிலேயே தீர்வும் காணப் பட்டது. உறவின் மதிப்பும் பலமும் உணரப் பட்டது.

இன்று குடும்பத்தின்  வெளியே திருமணம் , அதையும் தாண்டி ஜாதி மதம் பாராமல் செய்யப் படுவது ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் உறவுகள் மேம் பட அது கட்டாயம் துணைப் புரிவதில்லை. மேலும் திருமணம் போதும் மற்ற விசேஷ நாட்களிலும் அந்தந்த உறவிற்கான , மாமா, அத்தை பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா இவர்களுக்கான முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப் படுவதில்லை. நெருங்கிய சொந்தங்களிடமும்  ஒரு ஈடுபாடில்லாமல் கலந்துக் கொள்வதுடன் ஒரு தயக்கத்துடன் கூடிய அந்நியத் தன்மை தான் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலக் குடும்பங்களில் யார் யார் தங்கள் உறவு என்றுத் தெரியாமலே இருக்கின்றனர். 

முன் போல் எல்லோ உறவுகளோடும் அன்னோன்னியமாக இருக்க முடிவதில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்காகவேனும் உறவில் திருமணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது .

திங்கள், 10 அக்டோபர், 2011

சுமையிலும் ஒரு சுகம் !!!

கதிரவன் முழுமையாக விழிக்கும் முன் பூங்காவில் மேற் கொள்ளும் நடை பயணம் ஒரு சுகமான அனுபவம். அதை விட அருகில் நடைபயில்பவர்களின் உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே நடப்பது கூடுதல் சுவாரசியம். எல்லா விஷயங்களும் அரசியல், சொந்த அனுபவம், கிசு கிசு எல்லாம் அலசப்படும். சில விஷயங்களை புதுக் கோணத்தில் பார்கக் கூடிய வாய்ப்பையும் தருகிறது. அது போல் கேட்ட விஷயம் தான் இம்மாதிரி எழுதத் தூண்டியது.

இன்று இந்தியாவின் எல்லாப் பகுதிலிருந்தும், தெருவிற்குப் பத்து வீடு இருந்தால் அதில் 6, 7 குடும்பங்களில் இருந்தேனும் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலைப் பார்கின்றனர். வேலைப் பளுவால் இந்தியா வர முடியாததால், 55, 60 வயதை தாண்டியப் பெற்றோர்கள், பிள்ளைகள் இருக்கும் இடம் பயணிப்பது அதிகமாகி விட்டது. முக்கியமாக குழந்தை பேரு காலம் அல்லது பேரக் குழந்தைகளின் விடுமுறை போதும் மிகவும் அவசியமாகிறது.  இரு பாலரும் வேலைக்குப் போவதால் பெரியவர்களின் வருகை சிற்சிலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது நல்ல விஷயமே; ஆனால் பெரியவர்களுக்கு ஏற்படும் சில சங்கடங்களையும் கஷ்டங்களையும் சிலர் கவனிக்கத்  தவறி விடுகின்றனர்.

முதலாவதாக பயண நேரம்; U.S,U.K போன்ற நாடுகளுக்கு குறைந்த பட்சம் 18,20 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்பது அந்த வயதில் மிகுந்த சிரமங்களையும் , அசௌரியத்தையும் ஏற்படுத்துகிறது. பேரு காலத்தில், எந்தத் தாய்க்குமே கூட இருந்து கவனிப்பது மகிழ்ச்சியும், மன நிறைவையும் தரும் விஷயம்; ஆனால் கூடுதல் சுமையாக வீட்டு நிர்வாகமும், சமையலும் சேரும் போது செய்ய மனம் இருந்தாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது; வேலைக்கு  ஆள் கிடைப்பது கஷ்டம் என்றாலும், வாரத்தில் 1,2 முறையேனும் உதவிக்கு வைத்தால் சுமை அதிகம் தெரியாது.

இன்னொரு ஏக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் மொழி ; வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் தாய் மொழி அல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதே பெரிதும் வழக்க மாகிவ்ட்டது. என்னதான் இக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும், உச்சரிப்பு வேறுபடுவதால் புரிந்து கொள்வதில் சிரமும், ஒரு அந்நியத் தன்மையும் தான் ஏற்படுகிறது. பேரக் குழந்தைகளுடன் சிறிது  காலமே இருக்கக் கூடிய சந்தர்பத்தில், தாய் மொழியால் தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். உறவின் வலுவானப் பிணைப்பிற்கு தாய் மொழி தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். அலுவலகம், பள்ளி .பொது இடங்கள் செல்லும் போது அந்தந்த நாட்டு மொழி தெரிந்திருப்பது அவசியம். அதே முக்கியத்துவத்தை அவரவர் தாய்மொழிக்கு கொடுக்கும் வண்ணம் வீட்டிலாவது பேச வேண்டும்.

மற்றும் இப்போது விமான சேவையில் நிறைய கூடுதல் வசதிகளை பெற முடிகிறது. குழந்தைகளை, விடுமுறை போது பாதுகாப்பாக தனியாக அவரவர் செல்ல விரும்பும் இடங்களுக்கு அனுப்பவும் முடியும்; இம்மாதிரி பெரியவர்கள் வருவதற்கு பதில் குழந்தைகளை அவர்கள் இருக்கும் இடம் அனுப்புவதால் கூடுதல் பிணைப்பும், பழக்க வழக்கங்களை நன்கு அறிந்துக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த கோணத்தில் சிந்தித்தால் எல்லோருக்கும் சுமையை விட சுகமே மேலோங்கி நிற்கும் அல்லவா !!!