புதன், 19 அக்டோபர், 2011

ரியாலிடி ஷோ .... தேவை ஒரு தணிக்கை !!!!



இன்று தொலைக் காட்சியில் எந்த சேனலைப் பார்த்தாலும், ரியாலிடி ஷோ என்ற பேரில் நடக்கும் போட்டிகளின் தாக்கம் தான் அதிகம் காண்கிறோம். இது போட்டி என்றக் கட்டத்தை தாண்டிஅதிகம், ஒரு உணர்ச்சிமயமான நாடகமாகத் தான் நடத்தப் படுகிறது. இதற்கு சொல்லப் படும் காரணம் T.R.P rating. இது எப்போ யார் மூலம் எடுக்கப் படுகிறது என்பது சம்மந்த பட்டவற்கே வெளிச்சம். பொழுது போக்கோ, இல்லை திறமையை வெளிப் படுத்தும் நிகழ்ச்சியானாலும் எதற்கும் ஒரு வரையறை இருத்தல் அவசியம். சில நாட்கள் முன்ஒரு சேனலில்  எதேச்சையாகப் பார்த்த ஒரு நிகழ்ச்சி என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது .

நம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுக்  கொண்டிருக்கிறது? இது என்ன மனிதத்தன்மையே இல்லாத ஒரு நிகழ்ச்சி !! விஷயம் இது தான்; ஆணோ, பெண்ணோ தன்னை ஏமாற்றிய காதலன் இல்லை காதலியை எந்த விதத்தில் பழி வாங்கவோ, பொது இடங்களில் அசிங்கப்  படுத்தவோ விரும்பினால்  இந்த பிரசித்திப் பெற்ற சேனலை அணுகலாம். அதற்கு தேவையான  நடிகர்கள், கதை படப் பிடிப்பு எல்லாம் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பழைய காதலன், காதலி எப்படி அசிங்கப் பட்டார்கள் என்பதை படமாக்கி, ஒரு நிகழ்ச்சியாக ஒளிப் பரப்புகிறார்கள். அவமானப் படுபவர்கள் ஏதேனும் விபரீத முடிவை எடுத்தால் என்னாவது? என்ன கொடுமை இது!! தாங்கள்  ஏமாற்றப் பட்டதை இப்படி உலகம் முழுக்கப் பறை சாற்றப் படுவதால் அவர்களின் நடத்தையும் தவறாக பேச வாய்ப்பு உண்டு என்பதை எப்படி மறந்தார்கள்? பழிக்கு பழி வாங்கும் இத்தகைய செயலை அந்த குறுப்பிட்ட சேனலும் எப்படி ஊக்குவிக்கின்றது என்று புரியவில்லை. தீவிரவாதம், கொலை  ,பழிவாங்குதல் போன்றவை அதிகரித்து வரும் தருணத்தில் இம்மாதிரி நிகழ்ச்சி தேவையா?

நாளை ஒருவர், எனக்கு இந்த மனிதனையோ உறவையோ பிடிக்கவில்லை, அவர்களை இந்த உலகிலிருந்து விலக்க வேண்டும் என்று வந்தால் அதையும் T.R.P rating என்ற பெயரில் செய்வார்களோ? ஒருவரோடு ஒத்துவரவில்லை, பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதுங்குவது தான் சிறந்தது. இம்மாதிரி பழிவாங்குவது ஒரு தற்காலிக  மகிழ்ச்சியாக இருக்குமே அன்றி ஆரோக்கியமான செயலாக இருக்காது. அதனால் மனதிற்கு நிம்மதியும் கிடைக்காது. இதை ஈடு செய்யவோ என்னவோ அதே  சேனல் பெற்றோர்களால் சிக்கல் ஏற்படும் காதல் திருமணத்தை சமரசம் செய்து காதலர்களை இணைக்கும் முயற்சியும் செய்கின்றனர்.

எல்லோராலும் பரவலாகப் பார்க்கப் படும் தொலைக்காட்சி , ஒரு பலம் வாய்ந்த ஊடகம். வெகு விரைவில் மக்களை சென்றடையும் சாதனம். இதன் மூலம் நல்ல விஷயங்கள் சொல்லப் படுகிறதோ இல்லையோ தவறான செயல்களை, சிந்தனைகளை கொள்கைகளை சிறு சதவிதம் கூட பரப்ப துணை போதல் கூடாது. இத்துறை சமுதாய அக்கறையுடன் செயல் பட வேண்டும். தயவு செய்து இத் தகைய நிகழ்சிகளை ஊக்கப்  படுத்த வேண்டாம்.


1 கருத்து:

  1. In total agreement. Also shows where children are participating and the parents wanting them to win at any cost. It is painful to watch such innocent looking faces try to sing in a husky voice or do a movement that can be just short of vulgar. In a recent show a ten year old sang 'Raath akaeli hi' :(

    பதிலளிநீக்கு