ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கலக்கல் கலாச்சாரம்

கலக்கல் கலாச்சாரம் 


இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான விளக்கங்கள் பெரியவர்களுக்கே தெரியாததால் இந்தக் குழப்பம்; இந்தத் தலை முறையும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்; எல்லா விஷயங்களுக்கும் காரணம்  இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சிக்கும் உறவுகளின் அருமைக்கும் பெருமைக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்; கூர்ந்து நோக்கினால் நாம் கொண்டாடும் பண்டிகை போது அந்தந்தக் காலத்தில் கிடைக்கும் காய் கனியையோ பொருட்களையோ தான் அதிகம் பயன் படுத்தி இருப்போம்; உதாரணத்திற்கு பொங்கல் பண்டிகை; புதிய அரிசியையும், அந்தக் காலக் கட்டத்தில் விளைந்திருக்கும் கரும்பையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம்; சில பண்டிகைகள் போது ஆரோகியமான உணவு முறையை பின்பற்றுகிறோம் ;நவராத்திரியை உதாரணமாக கூறலாம். பூவிற்கும் நெற்றி பொட்டிற்கும் மிகுந்த முக்கியதுவத்தை தமிழ் காலாச்சாரம் அளித்து வருகிறது. இதில் எல்லாம் பெரிய முரண்பாடுகள் வருவதில்லை; சில நம்பிக்கை   சார்ந்த விஷயங்கள் செயல்படுத்த கட்டாயப் படுத்தும் போது தான் தர்கங்களும் தேவையில்லாத மனக் கசப்பும் ஏற்படுகிறது.

இது ஒரு விதத்தில் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். முன்பெல்லாம் திருமணத்திற்கு தாலியான மஞ்சள் கயத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது; ஆனால் இப்போ தாலிக் கட்டுவதை விட, திருமணம் பதிவு செய்ய படும் சிறு காகிதத்திற்கு தான் அதிக மதிப்பு ; தாலியை விட பதிவு செய்யப் பட்டிருந்தால் தான் அத் திருமணம் ஏற்றுக் கொள்ள படுகிறது; இதை காலாச்சாரம் தவறி விட்டது என்று எப்படி கூற முடியும்? காலாச்சாரம் என்ற பெயரில் பிள்ளை,பெண்ணின் தாய் விதவையாக இருந்தால் அவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் கூட முழுமையாக கலந்துக் கொள்ளும் உரிமை வழங்கப் படவில்லை; கலைஞர் சொன்னது போல் அந்த வார்த்தைக்கு கூட ஒரு பொட்டு இல்லை; அதனாலேயே அமங்கலி என்று எழுதி வார்த்தைலாவது பொட்டு  இருக்கட்டுமே என்று பயன் படுத்தி வந்தார். இன்று நிலைமை மாறி வரவேற்கத் தகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது; இதுவும் காலாச்சாரத்தை மீறின விஷயம் இல்லை.ஒரு காலத்தில் ப்ரோகிதர்கள், கடல் தாண்டி செல்வது பாரம்பரியத்தை மீறின செயலாக கருதப் பட்டது; ஆனால் இன்றும் அப்படியே செயல் பட்டால் நமது பண்பாடு உலகளவில் தெரியப் படாமலே போயிருக்க வாய்ப்புண்டு. அதே சமுகத்தை சேர்ந்த சிலரால் தமிழர்களின் திறமையும் எல்லோராலும் பேசப் படுகிறது. நாமாக ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்கள் காலத்தினால் மாறும் போது அது கலாச்சாரத்தை மீறினதாகாது;

ஆனால் இப்படியே எல்லா விஷயங்களையும் ஒதுக்கியும் மாற்றியும் , காலத்தின் பேரில் பழி போடுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது; விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு வருகிறோம்.அது முழுவதுமாக காணாமல் போகும் முன் சுதாரித்துக் கொள்வது நல்லது. திருமணம் என்றாலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் சரியானபடி அவர்களை உபசரித்து அனுப்புவதில் கூட நாம் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை; நம்மை மதித்து வந்தவர்களை தக்க மரியாதையுடன் கவனித்து, உபசரித்து அனுப்புவது தான் பண்பாடு; அழைபிதழ்களை வேண்டுமானால் நேரமின்மைக் காரணமாக e-mail இல் அனுப்புவதை ஏற்றுக் கொள்ளலாம்; சில விஷயங்களுக்கு அதற்குண்டான முக்கியத்துவத்தை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும்.என்னதான் நண்பர்கள் பெருகி இருந்தாலும் சுற்றத்தார்களுக்கும் நாம் உரிய பெருமையை அளிக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும்,விருந்தோம்பலிலும் நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது. இது நாம் உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விஷயம். சுகி சிவம் அவர்கள் சொன்னது போல் முன்பு தனியாக இருந்த bath.room இன்று attached ஆகவும், சேர்ந்து இருந்த உறவுகள் deattached ஆக மாறிவிட்டதும் வருத்த பட வேண்டிய ஒன்றாகும். எதற்குமே react பண்ணுகிற அளவிற்கு நாம் act பண்ணுவதில்லை; இன் நிலை மாறினால் நன்றாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதித்தாலும் வேர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலை முறையிடம் தான் இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக