கதிரவன் முழுமையாக விழிக்கும் முன் பூங்காவில் மேற் கொள்ளும் நடை பயணம் ஒரு சுகமான அனுபவம். அதை விட அருகில் நடைபயில்பவர்களின் உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே நடப்பது கூடுதல் சுவாரசியம். எல்லா விஷயங்களும் அரசியல், சொந்த அனுபவம், கிசு கிசு எல்லாம் அலசப்படும். சில விஷயங்களை புதுக் கோணத்தில் பார்கக் கூடிய வாய்ப்பையும் தருகிறது. அது போல் கேட்ட விஷயம் தான் இம்மாதிரி எழுதத் தூண்டியது.
இன்று இந்தியாவின் எல்லாப் பகுதிலிருந்தும், தெருவிற்குப் பத்து வீடு இருந்தால் அதில் 6, 7 குடும்பங்களில் இருந்தேனும் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலைப் பார்கின்றனர். வேலைப் பளுவால் இந்தியா வர முடியாததால், 55, 60 வயதை தாண்டியப் பெற்றோர்கள், பிள்ளைகள் இருக்கும் இடம் பயணிப்பது அதிகமாகி விட்டது. முக்கியமாக குழந்தை பேரு காலம் அல்லது பேரக் குழந்தைகளின் விடுமுறை போதும் மிகவும் அவசியமாகிறது. இரு பாலரும் வேலைக்குப் போவதால் பெரியவர்களின் வருகை சிற்சிலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது நல்ல விஷயமே; ஆனால் பெரியவர்களுக்கு ஏற்படும் சில சங்கடங்களையும் கஷ்டங்களையும் சிலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
முதலாவதாக பயண நேரம்; U.S,U.K போன்ற நாடுகளுக்கு குறைந்த பட்சம் 18,20 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்பது அந்த வயதில் மிகுந்த சிரமங்களையும் , அசௌரியத்தையும் ஏற்படுத்துகிறது. பேரு காலத்தில், எந்தத் தாய்க்குமே கூட இருந்து கவனிப்பது மகிழ்ச்சியும், மன நிறைவையும் தரும் விஷயம்; ஆனால் கூடுதல் சுமையாக வீட்டு நிர்வாகமும், சமையலும் சேரும் போது செய்ய மனம் இருந்தாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது; வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டம் என்றாலும், வாரத்தில் 1,2 முறையேனும் உதவிக்கு வைத்தால் சுமை அதிகம் தெரியாது.
இன்னொரு ஏக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் மொழி ; வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் தாய் மொழி அல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதே பெரிதும் வழக்க மாகிவ்ட்டது. என்னதான் இக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும், உச்சரிப்பு வேறுபடுவதால் புரிந்து கொள்வதில் சிரமும், ஒரு அந்நியத் தன்மையும் தான் ஏற்படுகிறது. பேரக் குழந்தைகளுடன் சிறிது காலமே இருக்கக் கூடிய சந்தர்பத்தில், தாய் மொழியால் தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். உறவின் வலுவானப் பிணைப்பிற்கு தாய் மொழி தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். அலுவலகம், பள்ளி .பொது இடங்கள் செல்லும் போது அந்தந்த நாட்டு மொழி தெரிந்திருப்பது அவசியம். அதே முக்கியத்துவத்தை அவரவர் தாய்மொழிக்கு கொடுக்கும் வண்ணம் வீட்டிலாவது பேச வேண்டும்.
மற்றும் இப்போது விமான சேவையில் நிறைய கூடுதல் வசதிகளை பெற முடிகிறது. குழந்தைகளை, விடுமுறை போது பாதுகாப்பாக தனியாக அவரவர் செல்ல விரும்பும் இடங்களுக்கு அனுப்பவும் முடியும்; இம்மாதிரி பெரியவர்கள் வருவதற்கு பதில் குழந்தைகளை அவர்கள் இருக்கும் இடம் அனுப்புவதால் கூடுதல் பிணைப்பும், பழக்க வழக்கங்களை நன்கு அறிந்துக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த கோணத்தில் சிந்தித்தால் எல்லோருக்கும் சுமையை விட சுகமே மேலோங்கி நிற்கும் அல்லவா !!!