சில தினங்களுக்கு முன் செய்தித் தாளில் கண்ட அந்த செய்தியை படித்தவுடன் இது சரியா என்றக் கேள்வி மனதில் தோன்றியது. செயற்கை முறை கருத்தரிப்பில் ஒரு தம்பதியருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது தான்; இதில் என்ன அதிசயம் , ஆச்சரியம் என்கிறிர்களா? ஒன்றும் இல்லை, தந்தைக்கு 80 வயதும் தாய்க்கு 48 வயதும் தான்! (மெனோபாஸ் ஆனவர்) அதுவும்அந்தப் பெண்மணி அவரின் இரண்டாவது மனைவி!! நடந்திருப்பது வெளி நாட்டில் இல்லை; நம்ப தமிழ் நாட்டில் தான் ; இதற்கு அவர்கள் சொன்னக் காரணம் விநோதமானது.
சில வருடங்களுக்கு முன் 23 வயதான தங்கள் வாரிசை விபத்தில் பறி
கொடுத்ததால் தனிமை வாட்டியதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டதாம். பொருளாதரத்தில் சாதாரண நிலையில் உள்ள இவ்வயது பெற்றோர் இந்த முடிவை எடுத்தது சரியா? இன்று தங்கள் தனிமையை பற்றி யோசிப்பவர்கள் நாளை எவ்வளவு சீக்கிரம் அதே தனிமையில் தள்ளப் பட்டு ஆதரவு இல்லாமல் குழந்தைகளின் எதிர் காலம் எவ்வளவு கேள்விக் குறி ஆகிவிடும் என்பதை ஏன் யோசிக்கவில்லை. இதில் இன்னொரு கவனிக்கப் பட வேண்டிய விஷயம் சம்பந்தப் பட்ட மருத்துவரின் அணுகு முறை .
குழந்தை வேண்டி இம்மாதிரி செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருபவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப் படுகிறதா ? மேற் கூறிய சம்பவத்தைப் பார்க்கும் போது சந்தேகம் வரத் தான் செய்கிறது. தங்கள் திறமையை பரிசோதிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட மாதிரி அல்லவா தோன்றுகிறது. தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் அந்த மருத்துவர் செய்தது சரி என்றாலும் சமுதாயப் பொறுப்பிலிருந்து தவறி விட்டதாக தோன்றுகிறது.
இத்தனை வயதிற்கு மேல் அதுவும் பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கும் இவர்களால் குழந்தை பெற முடிந்தாலும் வளர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கூற ஏன் தவறி விட்டார்கள்? இது இவர்களுக்கு கூடுதல் சுமை தானே? நாளை அந்தக் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு யார் உத்தரவாதம்? உலக அறிவு அதிகம் இல்லாத அந்தப் பெற்றோருக்கு சரியான ஆலோசனையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த மருத்துவர் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. தனிமையைப் போக்க வேறு எத்தனையோ வழிகள் இருக்க அதை செல்படுத்த முயற்சி செய்திருக்கலாமே? அதற்கான முயற்சியைக் கூட செய்யவில்லை என்று பார்க்கும் போது மருத்துவர்களுக்கு சமுதாய அக்கறை பற்றிக் கவலை இல்லையோ என்றுக் கேட்கத் தோன்றுகிறது. இத் தகைய செயல்களைக் காணும் போது சில மருத்துவர்களைக் கண்டு ஆச்சரியப் படுவதா இல்லைக் கோபப்படுவதா என்றே புரியவில்லை!!