ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஏன் இந்தக் கொலை வெறி?



சமீபத்தில் சென்னை பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவம் மனதை உலுக்கியது மட்டுமல்லாமல் நமது மாணவ சமுதாயம் சென்றுக் கொண்டிருக்கும் பாதை பற்றிய பயத்தையும் கவலையையும் கொள்ளச் செய்கிறது. ஒரு பிரபல பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் தன சக நண்பர்களின் முன்னே தன் ஆசிரியரைக் குத்திக் கொலை செய்தான் என்ற செய்தியை படித்தப் போது, இதயம் துடிக்க மறந்து அதிர்ச்சியானது உண்மை. இதற்கான காரணம் அந்த ஆசிரியர் குறிப்பிட அந்த மாணவன் படிப்பில் சற்று பின் தங்கி இருப்பதாக குறிப்பேட்டின் மூலம் பெற்றோருக்கு தெரிவித்ததால் தான். அவர் தன கடமையை தானே செய்தார். இம்மாதிரி, மாணவன் தன் நண்பர்களையும் ஆசிரியர்களையும் சுடுவது எல்லாம் வெளி நாடுகளில் நடப்பதை தான் அதிகம் கேள்விபட்டிருக்கோம்; ஆனால் இங்குமா? நம்பவே கஷ்டமாக இருக்கிறது. இது தொடராமல் முளையிலேயே கிள்ளப் பட வேண்டும். மற்றக் கலாச்சாரம் போல் இதுவும் நம்மில் பரவுவதை அனுமதிக்க முடியாது.

இதற்கு பொறுப்பு நீயா நானா என்று விவாதம் செய்யாமல் எல்லோரும் சேர்ந்து தீர்வுக் காண முயல வேண்டும். இன்றைய ஆசிரியர்களின் நிலைமை ஒரு விதத்தில் சவாலாகத் தான் உள்ளது. எல்லாப் பள்ளித் தலைமைகளும் நூறு சதவிகித ரிசல்ட் வர வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மாணவர்கள், பெற்றோர் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பாதிக்கப் படுகின்றனர். குறுகியக் காலத்தில் நிறைய பாடங்களை முடிக்க வேண்டிய சூழல்; அதிலும் மாணவர்களை  எப்படி நடத்த வேண்டும், கண்டிப்பு, தண்டனை எந்த அளவிற்கு இருக்கலாம் என்று நிறையக் கட்டுப்பாடுகள்; ஆசிரியர்களுக்கென்று தனி மதிப்பு நம் நாட்டில் எப்போதுமே உண்டு; இன்றும் ஆசிரியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட தவறுவதில்லை; முன்பெல்லாம் அவர்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை இருந்து வந்தது; அவர்கள் நம்மைக் கண்டித்தாலோ,அறிவுரை வழங்கினாலோ சரியானக் கோணத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டது; நம்மிடத்தில் அசிரியர்களுக்குண்டான அக்கறை உணரப் பட்டது. இன்று நிலைமை அப்படி இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்; ஆசிரியர்களால் நல்லெண்ணத்தில் சொல்லும் விஷயங்களை பெற்றோர் கூட புரிந்து கொள்வதில்லை; நீங்கள் எப்படி என் பிள்ளைகளைப் பற்றி சொல்லலாம் என்று சண்டைக்கு வரும் முதல் நபர் சில இடங்களில் அவர்களாகத் தான் இருக்கிறார்கள். மாணவர்கள் முன்னிலையிலே அவர்களைத் தரக் குறைவாக பேசினால் மாணவர்களுக்கு எப்படி அவர்களிடம் மதிப்பு வரும்?


அப்படியே சில ஆசிரியர்கள் ஏதேனும் கடுஞ்சொல் கூறிக் கண்டித்தால் தொலைந்தது! உடனே ஒரு தற்கொலை முயற்சி; அப்போதும் இடி வாங்குவது பரிதாபத்திற்குரிய ஆசிரியர்களே. முழு சுதந்திரத்துடன் ஆசிரியர்களை செயல் பட விட்டால் தான் ஒரு நல்ல  மாணவனை உருவாக்க முடியும். அந்த நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும்.

இதில் சம பங்கு பெற்றோருக்கும் உண்டு; காலத்தின் கட்டாயத்தால் தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பணத்திற்கு குறை இல்லை; தேவையா இல்லையா என்று அறிந்துக் கொள்ளாமலே குழந்தைகள்  எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்கின்றனர். குழந்தைகள் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை ; ஆனால் அதனாலேயே எந்தப் பொருளின் அருமையும்,பெறுமையும் தெரியாததோடு, பிடிவாதமும் வளர்கிறது. உயர் தரக்  கல்விக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நல்லப் பள்ளியிலும் சேர்க்கின்றனர்; ஆனால் அதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைப்பது தான் தவறாகி விடுகிறது. வீட்டை விட பள்ளியில் தான் அதிக நேரம் இருப்பதால் வழி   நடத்துவது அவர்கள் கடமை என்று சிலப் பெற்றோர் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். வேலை அழுத்தம் ஒரு புறம் இருந்தாலும் குழந்தைகளுடன் quality time ஒதுக்க வேண்டும். அதுவும் இந்த மாதிரி ஒன்பது, பத்தாம் வகுப்பிற்கு செல்லும் காலக் கட்டம் மிகவும் இக்கட்டானப் பருவம்; படிப்பினாலும் வயதிற்கே உரிய இயற்கையான மாற்றத்தினாலும் ஏற்படும் தடுமாற்றங்களை பெற்றவர்கள் தான் கவனிக்க வேண்டும். அவர்கள் படிப்பிலும் ஏன் நண்பர்கள் வட்டத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தருணம் இது. அது  மட்டுமல்லாமல் சமுக   வலை தளங்கலங்களும் அவர்களின் கவனச் சிதறல்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. தேவையான வசதிகளையும் பொருள்களையும்  கொடுப்பதோடு நிற்காமல் அப்போது தேவைப்படும் உண்மையான தோழமை  தான் சிறப்பாக வழி நடத்த உதவும். மேற்கூறிய  சம்மவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஆசிரியர்களின் பாதுகாப்புக் குறித்தே கேள்விக் குறி ஆக்கி விட்டது. பெற்றவர்கள் கொடுக்கும் சலுகைகளால் குழந்தைகளின் சகிப்புத் தன்மை குறைவதோடு  போரிடும் குணமும் காணாமல் போய்  விடுகிறது. சில சமயம் குழந்தைகளிடம் வைக்கும் அதித அன்பு அவர்களைக் கோழைகள் ஆக்குவதோடு தன்னம்பிக்கை அற்றவர்களாக்கி விடுகிறது. இந்த மாணவன் ஒன்றும் பரம்பரை குற்றவாளியோ, திட்டம் தீட்டியோ நடத்த வில்லை; அந்தக் கணத்தில் ஏற்பட்டக் கோவம், தன்னை எப்படி  குறை சொல்லலாம் என்ற அகம்பாவவுமே தான்! எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோதிடம் மாணவர்களிடையே இருப்பதில்லை. பள்ளியில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கு கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது இதைத் தான் பறை சாற்றுகிறது. எல்லாப் பக்கங்களிலும் தாக்கப் படும் ஆசிரியர்களின் நிலையும் மிகவும் பரிதாபத்திர்க்குரியவர்களே.


இன் நிலை மாற எல்லோரும் புரிந்துக் கொண்டு செயல் பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆண் பெண் ஆலோசகர்கள் அவசியம் இருத்தல் வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும்   மாற்றம் தென் பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும். இத் தகைய சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது.