இந்தியர்களுக்கு மற்ற விளையாட்டை விட கிரிக்கெட்டில் உள்ள ஆர்வமே தனி. இங்கிலாந்தில் வாங்கிய அடிக்கு இங்கு முழுமையாக திருப்பிக் கொடுத்ததில் தான் எவ்வளவு திருப்தியும் மகிழ்ச்சியும்! அன்று இந்திய வீரர்களைப் பற்றி அவ்வளவு பேசிய நாசர் ஹுசைன் இப்போ எங்கே போனார்? ஆனால் இவ்வளவு ஆராவரத்திற்கும் கொண்டாட்டத்திற்கும் இப்போதைய கிரிக்கெட் தகுதி தானா என்பது யோசிக்க வேண்டிய விஷய மாகிவிட்டது.
எப்போ விளையாட்டை விட பணம், சூதாட்டம் அதிகம் முக்கியத்துவம் பெற்றதோ அப்போதே கிரிக்கெட் தரம் குறைந்து தான் போய்விட்டது. ஒரு காலத்தில் கிரிக்கெட் ஒரு gentlemen game என்று அழைக்கப் பட்டது. ஆனால் புல்லுருவி போல் பணம் உள்ளே நுழைந்ததால் நாம் நல்ல விளையாட்டை மட்டும் இன்றி நல்ல வீரர்களையும் அல்லவா இழந்து விட்டோம். எரியும் நெருப்பில் எண்ணை விடுவது போல் இந்த T.20 தொடரினால் கிரிக்கெட் ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது என்றால் மிகையில்லை. ஆட்டத்துக்கும் பார்ட்டிக்கும் உள்ள முக்கியத்துவம் விளையாட்டுக்கு இல்லை!! மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது!! ஆனால் அந்த மாற்றம் வளர்வதற்குத் துணைப் போக வேண்டுமே அன்றி தரக் குறைவிற்கோ, தாழ்விற்கோ காரணமாகக் கூடாது.
இந்த T.20 முன்னேற நினைக்கும் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம்; பல நாட்டு வீரர்களுடன்கலந்து விளையாடுவதால் தத்தம் பலம், பலவீனங்களை அறிந்து சில நுணுக்கங்களை பகிர்ந்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் விளையாடும் போதுக் கிடைக்கும் பேரும் புகழும் குறுகிய காலத்திற்குத் தான். ஒரு திறமையை வெளிக் கட்டவோ அல்லது கிரிக்கெட்டில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கவோ கண்டிப்பாக இந்த T.20 முறை உதவாது. இந்த முறையில் பிரகாசிப்பவர்கள் டெஸ்ட் மாட்சில், ஒரு நாள் போட்டியில் நிலைத்து விளையாட முடியாமல் போகிறது. துரித உணவு போல் கிரிக்கெட்டிலும் துரிதத்தைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்என்ற பழியை போட்டு இத் தகைய போட்டிகளை நடத்துவது அதிகமாகி விட்டது.
டெஸ்ட் போட்டி அதிகம் நடத்துவதன் மூலம் தான் திறமை சாலிகளை உருவாக்க முடியும்; தரமான விளையாட்டையும் காண முடியும். இதில் என்ன மாற்றம் செய்தால் ரசிகர்களை கவர முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். பணத்திற்கும் வியாபாரத்திற்கும் விளையாடும் இந்தப் போக்கு மாற வேண்டும். இதனால் இன்று அதிகம் பாதிக்கப் பட்ட பாகிஸ்தான் அணியைப் பார்க்கும் போது எல்லா ரசிகர்கள் மனமும் வேதனைத் தான் அடைகிறது. என்ன இருந்தாலும் இந்திய பாகிஸ்தான் போட்டிப் போல் வருமா? தேர்வாளர்களும் அரசியல் கலக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்லப் பயிற்சித் தளங்களை உருவாக்கி சிறந்த வீரர்களையும் உருவாக்க பாடு பட வேண்டும்.