இது நாத்திகமாகுமா!!!!
ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி கொள்கைகளும் வழிபாடுகளும் உண்டு. இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே உருவ வழிபாடு என்ற தனித்துமை உண்டு. இது ஒரு தனிச் சிறப்பாக இருந்தாலும் இதுவே சில சமயம் கேலிக்கு ஆளாக்க படுகிறது. இந்து மதம் என்றாலே பல உருவ கடவுள்களும், இரு பெரும் காப்பியங்களுமான ராமாயண மகாபாரதமும் தான் நினைவுக்கு வரும். இந்த மதத்தில் முக்கியமான ஒரு பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்பது; ஆனால் வணங்கப் படும் சிவன் விஷ்ணு,முருகன்,கண்ணன் என்றுஎல்லாக் கடவுளயும் இரு மனைவியுடன் தான் வணக்குகிறோம். இதுவும் மற்றவர்களால் கேலிக்குறியதாக்கப் படுகிறது. கண்ணனை பற்றி கூறும் போது, லீலைகள் என்ற பெயரில் வெண்ணை திருடியதையும் கோபிகைகளுடன் விளையாடி களித்த கேளிக்கைகளையும் தான் அதிகம் அறிவோம். ஏன் இப்படி? கதா காலஷேபத்திலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி கதை, கிளைக் கதைகளையே கூறி வருகின்றனர்; இந்து மதத்திற்குரிய நான்கு வேதங்களில் வாழ்க்கைக்கு தேவையான எத்தனையோ கருத்துக்கள் கூற பட்டிருக்கின்றன.அதனைக் கொண்டு கதைகளும் கிளைக் கதைகளும் அமைக்கலாமே. படங்களிலும், திரைப்படங்களிலும் உருவங்களை வைத்து அவரவர் இஷ்டத்திற்கு, கையாளுவதும் வரம்பு மீறுவதையும் ஒன்றும் செய்ய முடிவதில்லையே!
இப்படி சொல்வதால் நாத்திகம் பேசுவதாக அர்த்தமாகி விடாது. போலிச் சாமியார்களும் கொள்கைகளை பரப்புவதை விட கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி சொத்துக் குவிப்பதில் தான் வெற்றிக் காண்கின்றனர். ஆன்மிகம் என்பதன் அர்த்தத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை; கோவில் என்பது மனதிற்கு அமைதியையும் தூய்மை படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும் ; எல்லா மனிதனுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் ; ஆனால் கட்டுவதற்கு உதவியவர்களையே விதிமுறைகள் என்ற பேரில் கோவில் உள்ளே அனுமதிபதில்லையே?
அடுத்து ராமாயணம்; ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி சொன்னாலும், அது எழுத பட்டக் காவியம்; அதில் வரும் ஒரு பாத்திரமான ராமனைக் கடவுளாகக் கொண்டாடுகிறோம்; திருமணம் ஆனவர்களை ராமனும் சீதையும் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்; ஆனால் திருமணத்திற்கு பிறகு சீதை அனுபவித்த துயரங்களும் துன்பமும் யாவரும் அறிந்ததே; அப்போ இந்த வாழ்த்து பொருந்துமா என்று தெரியவில்லை;இதே காவியத்தில் தான் ராமனின் தந்தை தசரதனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள்; உடன் பிறப்பு பற்றிய பெருமைக்கு லட்சுமணன் எடுத்துக் காட்டாக இருந்தாலும், மனைவி ஊர்மிளா பாத்திரத்தின் பொறுமையும், பெருமை அதிகம் அறிய படாமலே போய்விட்டது; காவியத்திற்காக படைக்கப் பட்ட பாத்திரங்களை எல்லாம் கடவுளாக கொண்டாடுவதை விட, மனதை தூய்மை ஆக வைத்துக் கொள்ள உதவும் கருத்துக்களை பின் பற்றுவதே மேலாகும்; திருடர்களும், சமுதாய விரோத செயல்களில் ஈடுபவர்கள் கூட கடவுளை வணங்கி விட்டுத் தான் செய்கின்றனர். இதையும் கேலியாகத்தான் பார்கின்றனர்.
மகாபாரதத்தில் பகவத் கீதையில், வாழ்க்கைக்கு துணை நின்று முன்னேறக் கூடிய அனைத்து விஷயங்களும் சொல்லப் பட்டிருகிறது . ஆனால்,அதை விட அதில் இடம் பெற்றிருக்கும் போருக்கும் சண்டை சச்சரவிற்கும் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேசப் படுகிறது. அதிலும் திரௌபதைக்கு 5 கணவர் என்பதை காவியம் என்பதாலையே ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இன்னொன்று , மகாபாரதத்தில் சகோதரி தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் மாமனான கம்சனுக்கு ஆபத்து என்று ஒரு அசரிரி கேட்கும்; இந்தக் காலத்து சிறுவன் கேட்ட கேள்வி, தெரிந்தும் ஏன் இருவரையும் ஒரே சிறையில் கம்சன் அடைத்தான் என்று? இந்து மதத்தில் எத்தனையோ தெளிவான நல்லக் கருத்துக்கள் இருக்கின்றன. அதை எல்லாம் பரப்புவதில் தான் தீவிரத்தைக் காட்ட வேண்டும்.தேவையல்லாத பேச்சையும் கிண்டலையும் களைய முனைய வேண்டும்.
பொதுமறையான வள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளது. இது மனிதனுக்கு எந்தக் காலக் கட்டத்திலும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. இதை விட ஒரு பெரிய பொக்கிஷம் வேறு உண்டா? கடவுள் பக்தி என்பதே மனதை தூய்மையாக வைத்துக் கொள்வது தான்! அது கீதை மூலமாகவோ திருக்குறளின் மூலமாகவோ கிடைக்குமே ஆனால் அதை பின்பற்றி நடப்பதில் தவறேதும் இல்லை.