வெள்ளி, 21 அக்டோபர், 2011

உறவில் திருமணம் ....ஒரு ஷொட்டு!!!



ஒரு காலத்தில் உறவில் திருமணம் என்பது நம்மிடையே அதிகம் காணப்பட்டு வந்தது. பின் விஞ்ஞானரீதியாக உறவுத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் சில குறைபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்து வைக்கப் பட்டதால் அத்தகைய திருமணம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது. இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதனால் சில நல்ல விஷயங்களையும்  இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

இன்றைய உறவுகள் சங்கிலித் தொடர் போல் இல்லாமல் சிறு சிறு தீவாகக் காணப்படுகிறது. உறவில் திருமணம் குறைந்தது கூட இந்நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொத்துக்காக மட்டும் இன்றி பலமான உறவு பாலத்திற்கும் உறவில் திருமணம் பெரிதும் துணை புரிந்ததை மறுபதற்கில்லை. புகுந்த வீடும், பிறந்த வீடும் ஒன்றுக்குள் ஒன்றாகி இருந்ததால், திருமணம், பண்டிகை, மற்ற முக்கிய  தினங்களில் எல்லோரும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வதுடன், மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆசையுடனும் கலந்துக் கொண்டு உறவின் பெருமையை மேம் படுத்தினர். தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடோ , பிரச்சனைகளோ வந்தாலும் பாதிப்பு எல்லோருக்குமே என்பதால், அதிகம் வளரவிடாமல் விரைவிலேயே தீர்வும் காணப் பட்டது. உறவின் மதிப்பும் பலமும் உணரப் பட்டது.

இன்று குடும்பத்தின்  வெளியே திருமணம் , அதையும் தாண்டி ஜாதி மதம் பாராமல் செய்யப் படுவது ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் உறவுகள் மேம் பட அது கட்டாயம் துணைப் புரிவதில்லை. மேலும் திருமணம் போதும் மற்ற விசேஷ நாட்களிலும் அந்தந்த உறவிற்கான , மாமா, அத்தை பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா இவர்களுக்கான முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப் படுவதில்லை. நெருங்கிய சொந்தங்களிடமும்  ஒரு ஈடுபாடில்லாமல் கலந்துக் கொள்வதுடன் ஒரு தயக்கத்துடன் கூடிய அந்நியத் தன்மை தான் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலக் குடும்பங்களில் யார் யார் தங்கள் உறவு என்றுத் தெரியாமலே இருக்கின்றனர். 

முன் போல் எல்லோ உறவுகளோடும் அன்னோன்னியமாக இருக்க முடிவதில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்காகவேனும் உறவில் திருமணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது .