திங்கள், 31 அக்டோபர், 2011

ஆண் (நட்பு) பெண்....!!!!




நாம் பொதுவாக சில விஷயங்கள், உறவுகளை, பொருட்களை விலை மதிப்பிட முடியாது. அப்பேர் பட்ட விஷயங்களில்  நட்பிற்கும் என்றுமே  ஒரு தனி இடம் உண்டு. அதிலும் அபூர்வமாக அமையும் உண்மையான ஆண் பெண் நட்பானது மிகவும் விலை மதிப்பில்லாதது. புராணக் காலத்திலிருந்து இன்று வரைஅத் தகைய நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மகாபாரதத்தில் ஒரு சம்பவம்; கர்ணனும் துரியோதனன் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்  தருணம் இடையே கணவன்  துரியோதனன் வருவதை அறிந்து மனைவி எழ, அறியாத கர்ணன் பாதி ஆட்டத்தில் எழும் தன் நண்பியை தடுக்க, அவள் ஆடையிலிருந்து முத்துக்கள் சிதற துரியோதனன் அதைக் கண்டு ,"எடுக்கவோ, கோர்கவோ" எனக் கேட்கும் சொல் ஆண் பெண் நடப்பினை புரிந்துக் கொண்டதற்கான சிறந்த எடுத்து காட்டாக இன்று வரை சொல்லப் படுகிறது.

அது போல் ஆரோக்கியமான நட்பு இன்று பரவலாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதன் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அதாவது திருமணம் வரை தான் தொடர முடிகிறது. அதற்கு மேல் தொடர தடையாக இருப்பது, கணவன், மனைவி மனோபாவமா, குடும்பமா, இல்லை சமுதாயமா புரியவில்லை. நாம் தயக்கமோ  எதிர்பார்போ இல்லாமல் எந்த விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்; மன அழுத்தம் குறைவதோடு ஆறுதலையும் தெளிவையும் பெற முடியும். என் அனுபவத்தில் இம்மாதிரி நட்பினால் கணவன் மனையிடையே ஏற்படவிருந்த இழப்பு தவிர்க்கப் பட்டு பலமான உறவு அமைய வழி செய்தது. பெரியவர்களும், கணவன் நட்பை மனைவியும், மனைவி  நட்பைக் கணவனும் சரியாகப் புரிந்துக் கொண்டு  ஆரோகியமான நட்பை ஊக்கப் படுத்த வேண்டும். 

தம்பதிக்குள் சிறு சிறு பிரச்சனையோ, புரிதல் இன்மையோ ஏற்பட்டால் இத் தகைய நண்பன், நண்பி மூலம் தெளிவு படுத்தி சரி செய்வது சுலபம். நண்பர்கள் மூலம் சரியானக் கோணத்திலிருந்து தீர்வுகள் அலசப் பட்டு சரி செய்யும் வாய்ப்புகளும் அதிகம். நண்பர்கள் சில விஷயங்கள் சொல்லும்  போது தயக்கம் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். வீட்டுப் பெரியவர்கள் உறவினர்களால் சாதிக்க முடியாததைக் கூட இத்தகைய நட்பு சாதிக்கும் என்பதி ஐயம் இல்லை. எனவே சரியான புரிதலுடன் இத்தகைய நட்பு கடைசி வரை தொடர வேண்டும் என்பதே அவா.