வெள்ளி, 27 ஜனவரி, 2012

House husband!!

"House Husband"...!!!, என்ன ஏதாவது மாற்றி சொல்லி விட்டேனா என்று யோசிக்க வேண்டாம் . house wife கு பதிலாக house husband  ஆக இருந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் மாத்தி சிந்தித்து பார்க்கலாமே! முதலில் இந்த house wife என்ற வார்த்தையே சரியான மதிப்பை பெறுவதில்லை; அதற்கு home maker என்ற வார்த்தை எவ்வளவோ மேல். அது ஆணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை; ஆனால் இது ஒன்றும் புதியது இல்லை. உலகில் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது தான்;  இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் இது வித்தியாசமாகவும், கவுரவக் குறைவாகவும் தெரியலாம்.

சிறு வயது முதலே ஆண்கள் தான் வெளியில் வேலை பார்க்க வேண்டும்; பெண்கள் வீட்டை ஆள வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப் படுகிறார்கள். இப்போது  கொஞ்சம் கொஞ்சம் மாறிக் கொண்டு வந்தாலும் ஆண்கள் வீட்டுப் பொறுப்பை எடுத்து வேலை செய்தால் அது அழகல்ல என்று தான் நினைக்கிறார்கள். பெண்கள் நன்கு படித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பதை ஒப்புக் கொள்ள முடிகிறது.ஆனால் ஆண்கள் விரும்பி வீட்டு பொறுப்பை எடுத்து செய்தாலும் அதை அனுமதிப்பதில்லை ஏன் ? சமுதாயக் கண்ணோட்டத்தில் கூட அந்த ஆண் மரியாதைக்கு உரியவனாக கருதப் படுவதில்லை. சம்மந்தப் பட்ட ஆணின் மனைவியே home maker ஆக தன்  கணவன் இருப்பதை விரும்புவார்களா என்று தெரியவில்லை. பெண்களை பொறுத்தவரை ஓரளவிற்கு மாற்றங்கள் நடந்துக் கொண்டு தான் வருகிறது. நடைமுறையில் அதை ஒப்புக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் ஆண்களுக்கு என்று உள்ள  சில விதி முறைகளையும் கட்டுப் பாடுகளையும் தளர்த்தப்பட மனம் இன்றும்  ஒத்துழைப் பதில்லை.

ஒரு வேளை சில ஆண்களுக்கு home maker  ல் விருப்பம் இருந்து அது மறுக்கப் பட்டால் அவர்களது சுதந்திரத்தை கட்டுப் படுத்துவது மாதிரி  அல்லவா இருக்கும் . இப்போது பெண்களும் தனியாகவே நிறைய சம்பாதிப்பதால் குடும்பம் நடத்த அதுவே போதுமானதாக கூட இருப்பதுண்டு. விருப்பப்பட்ட ஆண்கள் வீட்டில் இருந்தபடியே பெண்களை போல்  மற்றதை கவனித்துக் கொள்வதில்ஆர்வம் இருந்தால் என்ன தவறு? பேங்க் வேலை, மின்சாரக்  கட்டணம், சமையல் போன்றவற்றை செய்யப் பிரியப் பட்டால் வரவேற்கலாமே! இன்னும் சொல்லப்போனால் சமையல் கலையில் ஆண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் . நள பாகம் என்று தான் கூறுகிறோம். இதை விட பெரிய விஷயம் மாமியார், மருமகள் சண்டை சச்சரவு அறவே குறைய வாய்ப்பு அதிகம். அம்மாவும் பிள்ளையும் நிறைய ஒத்து போக முடியும் என்பதால் குடும்பத்தில் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது. நாளையே குழந்தைகள் வந்தாலும் அப்பாக்கள் நிறைய நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியும். கூடவே குழந்தை வளர்ப்பிற்கு ஆயாக்களை அமர்த்தலாம்; இப்போதும் அது நடந்துக் கொண்டுதானே இருக்கு. குழந்தைகளின் படிப்பையும் கூட ஆண்களால் திறமையாக கையாள முடியும்; வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் பலத்தையும் தைரியத்தையும் இவர்களால் ஏற்படுத்த முடியும். சொல்லப்போனால் அவசரத் தேவை, உதவி, ஏற்படும் போது ஆண்களால் பக்குவமாகக் கையாள முடியும்.ஆனால் இதற்கு எல்லாம்  கணவன் மனைவிக்குள் புரிதல் இருந்தால் தான்  சாத்தியமாகும். பெண்களும் தான், தாங்கள் சாதிக்க நினைப்பதை குடும்பப் பொறுப்பைப்  பற்றிக் கவலைக் கொள்ளாமல் வேலையிலோ, தொழிலிலோ சாதித்து முன்னேறலாம். மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது; அது நல்லதிற்கு வழி வகுக்குமே ஆனால் வரவேற்பதில் தவறில்லை. ஒரு வேளை மனைவியை விட குறைவாக கணவன் படித்திருந்தாலும் இம்மாதிரி பொறுப்பை எடுத்துக் கொள்வதன் மூலம் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இது ஒரு மாற்றுக்கோணம் தான்; இப்படி எல்லா ஆண்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூற வரவில்லை; ஆனால் இந்த மாதிரி ஒரு நிலையை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக