வெள்ளி, 27 ஜனவரி, 2012

House husband!!

"House Husband"...!!!, என்ன ஏதாவது மாற்றி சொல்லி விட்டேனா என்று யோசிக்க வேண்டாம் . house wife கு பதிலாக house husband  ஆக இருந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் மாத்தி சிந்தித்து பார்க்கலாமே! முதலில் இந்த house wife என்ற வார்த்தையே சரியான மதிப்பை பெறுவதில்லை; அதற்கு home maker என்ற வார்த்தை எவ்வளவோ மேல். அது ஆணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை; ஆனால் இது ஒன்றும் புதியது இல்லை. உலகில் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது தான்;  இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் இது வித்தியாசமாகவும், கவுரவக் குறைவாகவும் தெரியலாம்.

சிறு வயது முதலே ஆண்கள் தான் வெளியில் வேலை பார்க்க வேண்டும்; பெண்கள் வீட்டை ஆள வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப் படுகிறார்கள். இப்போது  கொஞ்சம் கொஞ்சம் மாறிக் கொண்டு வந்தாலும் ஆண்கள் வீட்டுப் பொறுப்பை எடுத்து வேலை செய்தால் அது அழகல்ல என்று தான் நினைக்கிறார்கள். பெண்கள் நன்கு படித்து வேலைக்கு சென்று சம்பாதிப்பதை ஒப்புக் கொள்ள முடிகிறது.ஆனால் ஆண்கள் விரும்பி வீட்டு பொறுப்பை எடுத்து செய்தாலும் அதை அனுமதிப்பதில்லை ஏன் ? சமுதாயக் கண்ணோட்டத்தில் கூட அந்த ஆண் மரியாதைக்கு உரியவனாக கருதப் படுவதில்லை. சம்மந்தப் பட்ட ஆணின் மனைவியே home maker ஆக தன்  கணவன் இருப்பதை விரும்புவார்களா என்று தெரியவில்லை. பெண்களை பொறுத்தவரை ஓரளவிற்கு மாற்றங்கள் நடந்துக் கொண்டு தான் வருகிறது. நடைமுறையில் அதை ஒப்புக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் ஆண்களுக்கு என்று உள்ள  சில விதி முறைகளையும் கட்டுப் பாடுகளையும் தளர்த்தப்பட மனம் இன்றும்  ஒத்துழைப் பதில்லை.

ஒரு வேளை சில ஆண்களுக்கு home maker  ல் விருப்பம் இருந்து அது மறுக்கப் பட்டால் அவர்களது சுதந்திரத்தை கட்டுப் படுத்துவது மாதிரி  அல்லவா இருக்கும் . இப்போது பெண்களும் தனியாகவே நிறைய சம்பாதிப்பதால் குடும்பம் நடத்த அதுவே போதுமானதாக கூட இருப்பதுண்டு. விருப்பப்பட்ட ஆண்கள் வீட்டில் இருந்தபடியே பெண்களை போல்  மற்றதை கவனித்துக் கொள்வதில்ஆர்வம் இருந்தால் என்ன தவறு? பேங்க் வேலை, மின்சாரக்  கட்டணம், சமையல் போன்றவற்றை செய்யப் பிரியப் பட்டால் வரவேற்கலாமே! இன்னும் சொல்லப்போனால் சமையல் கலையில் ஆண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் . நள பாகம் என்று தான் கூறுகிறோம். இதை விட பெரிய விஷயம் மாமியார், மருமகள் சண்டை சச்சரவு அறவே குறைய வாய்ப்பு அதிகம். அம்மாவும் பிள்ளையும் நிறைய ஒத்து போக முடியும் என்பதால் குடும்பத்தில் அமைதிக்கும் பஞ்சம் இருக்காது. நாளையே குழந்தைகள் வந்தாலும் அப்பாக்கள் நிறைய நேரம் அவர்களுடன் செலவழிக்க முடியும். கூடவே குழந்தை வளர்ப்பிற்கு ஆயாக்களை அமர்த்தலாம்; இப்போதும் அது நடந்துக் கொண்டுதானே இருக்கு. குழந்தைகளின் படிப்பையும் கூட ஆண்களால் திறமையாக கையாள முடியும்; வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் பலத்தையும் தைரியத்தையும் இவர்களால் ஏற்படுத்த முடியும். சொல்லப்போனால் அவசரத் தேவை, உதவி, ஏற்படும் போது ஆண்களால் பக்குவமாகக் கையாள முடியும்.ஆனால் இதற்கு எல்லாம்  கணவன் மனைவிக்குள் புரிதல் இருந்தால் தான்  சாத்தியமாகும். பெண்களும் தான், தாங்கள் சாதிக்க நினைப்பதை குடும்பப் பொறுப்பைப்  பற்றிக் கவலைக் கொள்ளாமல் வேலையிலோ, தொழிலிலோ சாதித்து முன்னேறலாம். மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது; அது நல்லதிற்கு வழி வகுக்குமே ஆனால் வரவேற்பதில் தவறில்லை. ஒரு வேளை மனைவியை விட குறைவாக கணவன் படித்திருந்தாலும் இம்மாதிரி பொறுப்பை எடுத்துக் கொள்வதன் மூலம் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இது ஒரு மாற்றுக்கோணம் தான்; இப்படி எல்லா ஆண்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூற வரவில்லை; ஆனால் இந்த மாதிரி ஒரு நிலையை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

விவாகரத்து - மறுபக்கம் !!!




இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை துலைத்து விடாமல்இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணத்திற்கு இன்று நம்மிடையே பெருகி வரும் அதிக விவாகரத்து. முன்பு இந்த வார்த்தைஎங்கேயோ  எப்போவோ கேட்ட குரலாகத் தான் இருந்தது; ஆனால் இப்போ அடிக்கடிக் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. சகிப்புத் தன்மையும் பொறுமையும் குறைந்ததை ஒருக் காரணமாகச் சொன்னாலும், சட்டத் திருத்தங்களால் இப்பொழுது எளிதில் கிடைபதால் சிலருக்கு மிகவும் சாதகமாகி விட்டது. சம்மந்த பட்ட ஆணோ, பெண்ணோ, அவரவர் தங்கள் விருப்பப்படி வேறு வாழ்க்கை துணையை தேர்வு செய்து செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் இதனால் பாதிப்பிற்கு உண்டான இன்னொரு தரப்பு பற்றி யாருமே நினைத்து பார்பதில்லை. அவர்கள் தான் சம்மந்த பட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள்! கண்டிப்பாக குழந்தைகளின் நல் வாழ்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மனதில் ஏற்படும் அந்தக் காயத்திற்கும் பிறரின் பார்வையில் தாழ்ந்து போவதற்கும் யாரும் மருந்து போட முடியாது. எத்தனையோ கனவுகளுடன் பல மாதங்களாக பார்த்து பார்த்து பிரமாண்டமாக செய்யப் படும்  திருமணம் சில சமயங்களில் அற்பக் காரணங்களால் சில மாதங்களிலே பிரிவு வரும் போது பெற்றோர்களின் மன நிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்றையத் தலைமுறை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் மனோபாவம் இருப்பதால் சுலபமாக எதையும் எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் பாதிப்பு அடைந்த  பெற்றோர் நிலையோ வேறு!

பொது இடங்களிலோ, திருமணத்திலோஇந்த மாதிரி சம்பவத்திற்கு பிறகு அவர்களால்  எப்போதும்  போல் சகஜமாக கலந்துக் கொள்ள முடிவதில்லை; பிறர் கேட்கும்  கேள்விகளை எதிர் நோக்கும் தைரியம்   அவர்களுக்கு இருப்பதில்லை. குடும்பத்தினரிடமும், உறவுகளிடமும் நண்பர்களிடம் , அவர்களின் மதிப்பு குறைந்து விடுகிறது; தங்களின் வளர்ப்பு சரி இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மனம் புழுங்கித்  தவிக்கிறது. இதில் கூட பிறந்தவர்கள் இருந்தால் அவர்களின் திருமணம் என்ற கட்டம் வரும் போது எதிர் பார்ப்பது போல் அவ்வளவு சுலபமாக அமைவதில்லை. விவாகரத்து என்ற சொல் அந்தக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டு   ஒரு சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. விவாகரத்து என்ற ஒன்று இல்லாமலே இருந்தால், சகிப்புத் தன்மையும், வாழ்க்கையின் அருமையும் புரியுமோ என்று நினைக்கும் அளவிற்கு பெற்றோர் மனம் விரும்புகிறது;

ஏன் என்றால் திருமணம் என்ற ஒன்று  நடக்கும் போதே இது சரியாக அமைய விட்டால் இருக்கவே இருக்கு இன்னொன்று என்ற எண்ணத்துடன்  தான் சிலர் மணம் புரிகின்றனர். ரொம்ப சுலபமாகவே விலக்கும் கிடைபதால் வாழ்க்கையின் அருமை எதில் உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவது பெற்றோர்களே என்பதை அறிவதில்லை. எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு அவசியம்; இல்லாமல் போனால் அதன் மதிப்பை உணராமலே தவற விடும் வாய்ப்பு அதிகரித்து விடும். புது கலாச்சார  விஷயங்களை வரவேற்கலாம்; அதற்கு முதலில் நம்மிடம் உள்ள நல்லக் கலாச்சரங்களை உணர்ந்து மதிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தை தொலை நோக்கு பார்வையோடு பார்த்தால் தான் அதன் அருமையை அனுபவித்து  உணர்ந்து ரசிக்க முடியும்.



வெள்ளி, 13 ஜனவரி, 2012

சச்சினா!! சதமா!!

சச்சினா!! சதமா!!

இன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்த படியாகஅதிகமாக  பேசப்படும் விஷயம் சச்சின் சதம் அடிப்பாரா மாட்டாரா! என்ற கேள்விதான். ஐயோ! போதுமடா சாமி! ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாறி மாறி போட்டுத் தாக்குவது; கண்டிப்பாக நூறாவது சதம் என்பது சச்சினுக்கு   இன்னொரு மையில்கல் என்பதில்  ஒரு துளி ஐயமும் இல்லை. எதிர்பார்ப்பு கூடக் கூட அதுவே அவரை பலவீனப் படுத்திவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் அனுபவப்பட்ட வீரராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே! இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது , அவருக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தாமலா போகும்? எல்லோருக்கும் தேவை பொறுமை. அவருக்கும் அந்த சாதனையை செய்யும் துடிப்பு அதிகமாகத்தான் இருக்கும்
.
ஒவ்வொரு தொடரின் பொது இதையே பிராதனமாக கொண்டு பேசப் படுவது தேவை இல்லாத ஒன்று. இப்பொழுது ஆஸ்திரேலியா தொடரை மேலும் சொதப்பாமல், விழித்துக் கொள்ளும்படியான உண்மையான விமர்சனங்கள் தான் நம்மவர்களுக்கு தேவை. நன்றாக ஆடும் போது ஒரேடியாக பாராட்டுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் அப்படியே கீழே போடுவதுமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சச்சின் சதம் அடித்தால் ஒரு அரசாங்கம் அவருக்கு(அரசவையில்அறிவிப்பது போல்) நூறு தங்க காசுகள் பரிசாக கொடுக்கப் படும் என்பதுதான். நல்ல வேளை அந்த முறை அவர் அடிக்கவில்லை; இல்லை என்றால் காசுக்காகத்தான் அடித்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள். சச்சினுக்கு இன்னமும் கிரிக்கெட்டின் மீதான passion, மதிப்பு குறையாததால் தான் அவரால் சாதனை படைக்க முடிகிறது. இம்மாதிரி அறிவிப்பின் மூலம் அவரது திறமையை சிறுமை படுத்தல் கூடாது. இனியும்  ,உலகிற்கு அவர் திறமையை உணரவைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. நம்மை விட அவருக்கு தான் சாதனையை படைக்க இன்னும் அதிக வேகமும் ஆவலும் இருக்கு என்பதை உணர வேண்டும். காலம் கொஞ்சம்  ஆனாலும் கூடிய சீக்கிரமே அந்த மையில் கல்லை அடைய வாழ்த்துவோம்.

புதன், 4 ஜனவரி, 2012

மன அழுத்தமா ...? போயே போச்சு !!!


மன அழுத்தமா ...?  போயே போச்சு !!!

இன்றைய காலக் கட்டத்தில் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று திருமணமான  இளையத் தலைமுறை இடம் காணப் படும் மனஅழுத்தம் .அதுவும் குறிப்பாக பெண்கள்  தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகு பாடே இல்லாமல் இதற்கு ஆளாவது மிகவும் வருத்தத்திற்குரியது ; அதே சமயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ஒரு காலத்தில் இத்தகைய மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் காணப் பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்து வந்தன. குடும்பச் சுமை, பணமின்மை, அதிக பொறுப்பு, கடமையை சரி வர செய்ய முடியாத இயலாமை, பலரின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது அத் தகைய நிலை மிகவும் மாறி விட்டது. இருந்தும் ஏன் இந்த நிலை;

இன்றைய வளர்ப்பு முறைக் கூட ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு  அதிக சுதந்திரம் ,பொறுப்பில்லாத வாழ்கை ,ஒன்றோ இரண்டோ தான் மக்கட் செல்வம்  அதனாலேயே அவர்கள் மேல் பொறுப்பை திணிக்க விரும்பாத பெற்றோர். இதனால் சிறு சிறு விஷயங்களைக் கூட சரியாக ஆளத் தெரியாமலும்  அனுசரித்துப் போக முடியாமலும் திண்டாடுகின்றது இத் தலை முறை. அதுவும் வாழ்வின் முக்கியக் கட்டமான திருமணம் என்று வரும் போது அதிகமாகவே உணரப் படுகிறது.

முன்பு எப்படி சிறிய ஊர்களிலுருந்து திருமணத்திற்கு பிறகு  நகரத்திற்கு வாழ வருபவர்கள் அதிகமோ இப்போது நகரத்திலிருந்து வெளி நாடு செல்வது அதிகமாகி விட்டது. அப்பவும் நகரத்து வாழ்க்கைக்கு சிலர் தங்களை பழக்கிக் கொள்ள மிகவும் தடுமாறுவார்கள். ஆனால் வீட்டுப் பெரியவர்கள் அப்பப்போ வந்து சரியான ஆலோசனை வழங்கி வழி நடத்த ஒரு வாய்ப்பு இருந்தது. மேலும் பெரிய படிப்பு படித்திருக்கும் பெண்களின் விழுக்காடும் குறைவு. பெரியவர்கள் அனுபவத்தில் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவமும் இருந்தது.

ஆனால் இப்போது பொதுவாகவே பெண்கள் நிறைய படிக்கின்றனர்; அதுவும் திருமணம் முடிந்து அதிகம் வெளி நாடு  தான் செல்கின்றனர். அங்குள்ளவர்களுக்கு விடுமுறை குறைவு என்பதால் விசா ஏற்பாடெல்லாம் முன்னமே செய்து திருமணம் முடிந்து கூடவே அழைத்தும் செல்கின்றனர்.

அப்படி போகும்போது படித்த படிக்காத பெண்களுக்கு முதலில் ஏற்படுவது கலாசார அதிர்ச்சி. என்னதான் ஓரளவு வெளி நாட்டு வாழ்கை பற்றி அறிந்திருந்தாலும் அதை எதிர் கொள்ளும் போது தடுமாற்றமும் , பக்குவம் இல்லாததால் பிரச்சனையை சமாளிக்கும் திறமையும் தைரியமும் காணமல் போய் விடுகிறது. மேலும்  கணவனுக்கோ உடனே வேலையில் சேர வேண்டியக் கட்டாயம்; கூட இருந்து சொல்லிக் கொடுப்பது என்பது இயலாதது. மனைவி வீட்டு வேலை வெளி வேலை எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டிய சூழ்நிலை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சகஜமாக பேச முடியாத நிலை, மொழி பிரச்சனை , வீட்டு உபயோகத்திற்கான உபகரணங்களைக் கூட சிலருக்கு எப்படி பயன் படுத்துவது என்பது தெரியாது; என்னதான் F.B, chat எல்லாம் இருந்தாலும் மனதை ஒரு வெறுமை சூழ்ந்துக் கொள்வதை மறுக்க முடியாது. திக்குத் தெரியாத காட்டில் குழந்தையை போல் தவிக்கின்றனர்.

குறிப்பாக முன்பு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வந்த இடத்தில் உடனே வேலைக்கு போக முடியாது; தினமும் பல தரப் பட்ட மக்களை சந்தித்தும்  நண்பர்களுடன் பழகியும் வேலைப் பார்த்தவர்களுக்கு வீட்டிலேயே அடைந் து இருப்பது இயலாத ஒன்று. கணவருக்கோ வேலை பளுவினால் மனைவியின் மன ஓட்டத்தை புரிந்துக் கொள்ள கூட நேரம் இருக்காது. வந்த புதிதில் நண்பர்களை , புதிய இடத்தையும் பார்ப்பதில் ஒரு மாதம் போகலாம்; பிறகு தனிமையும் வெறுமையும் தான் வாட்டும். இந்த சுழலில் தான் சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளக்  கூட யாரையும் நாட முடியாமல் தவிக்கின்றனர். அனால் இந்த ஆரம்பக் கட்டத்தை சமாளித்து தாண்டி விட்டால் பிறகு வாழ்க்கை சொர்க்கம் தான்.

இந்த மன அழுத்தத்தை தவிர்க்க மனதை தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் திசை திருப்ப வேண்டும். ஏதேனும் ஒரு கலையைக் கற்று அதனை வளர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பமாக இந்த நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ளலாம்; கூடுமானவரை மனதை அலைய விடாமல் பிடித்தமான hobby இல் கவனம் செலுத்தலாம். எல்லா இடமும் நாம் நினைப்பது போல் அமைவது அத்தனை சுலபம் இல்லை. மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது; அதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு ஏற்ப வாழ மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதை புரிந்துக் கொண்டால் தேவையல்லாத உளைச்சலும் மன அழுத்தமும் ஏன் ஏற்பட போகிறது?.