திங்கள், 31 அக்டோபர், 2011

ஆண் (நட்பு) பெண்....!!!!




நாம் பொதுவாக சில விஷயங்கள், உறவுகளை, பொருட்களை விலை மதிப்பிட முடியாது. அப்பேர் பட்ட விஷயங்களில்  நட்பிற்கும் என்றுமே  ஒரு தனி இடம் உண்டு. அதிலும் அபூர்வமாக அமையும் உண்மையான ஆண் பெண் நட்பானது மிகவும் விலை மதிப்பில்லாதது. புராணக் காலத்திலிருந்து இன்று வரைஅத் தகைய நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மகாபாரதத்தில் ஒரு சம்பவம்; கர்ணனும் துரியோதனன் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்  தருணம் இடையே கணவன்  துரியோதனன் வருவதை அறிந்து மனைவி எழ, அறியாத கர்ணன் பாதி ஆட்டத்தில் எழும் தன் நண்பியை தடுக்க, அவள் ஆடையிலிருந்து முத்துக்கள் சிதற துரியோதனன் அதைக் கண்டு ,"எடுக்கவோ, கோர்கவோ" எனக் கேட்கும் சொல் ஆண் பெண் நடப்பினை புரிந்துக் கொண்டதற்கான சிறந்த எடுத்து காட்டாக இன்று வரை சொல்லப் படுகிறது.

அது போல் ஆரோக்கியமான நட்பு இன்று பரவலாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதன் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அதாவது திருமணம் வரை தான் தொடர முடிகிறது. அதற்கு மேல் தொடர தடையாக இருப்பது, கணவன், மனைவி மனோபாவமா, குடும்பமா, இல்லை சமுதாயமா புரியவில்லை. நாம் தயக்கமோ  எதிர்பார்போ இல்லாமல் எந்த விஷயங்களையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்; மன அழுத்தம் குறைவதோடு ஆறுதலையும் தெளிவையும் பெற முடியும். என் அனுபவத்தில் இம்மாதிரி நட்பினால் கணவன் மனையிடையே ஏற்படவிருந்த இழப்பு தவிர்க்கப் பட்டு பலமான உறவு அமைய வழி செய்தது. பெரியவர்களும், கணவன் நட்பை மனைவியும், மனைவி  நட்பைக் கணவனும் சரியாகப் புரிந்துக் கொண்டு  ஆரோகியமான நட்பை ஊக்கப் படுத்த வேண்டும். 

தம்பதிக்குள் சிறு சிறு பிரச்சனையோ, புரிதல் இன்மையோ ஏற்பட்டால் இத் தகைய நண்பன், நண்பி மூலம் தெளிவு படுத்தி சரி செய்வது சுலபம். நண்பர்கள் மூலம் சரியானக் கோணத்திலிருந்து தீர்வுகள் அலசப் பட்டு சரி செய்யும் வாய்ப்புகளும் அதிகம். நண்பர்கள் சில விஷயங்கள் சொல்லும்  போது தயக்கம் இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். வீட்டுப் பெரியவர்கள் உறவினர்களால் சாதிக்க முடியாததைக் கூட இத்தகைய நட்பு சாதிக்கும் என்பதி ஐயம் இல்லை. எனவே சரியான புரிதலுடன் இத்தகைய நட்பு கடைசி வரை தொடர வேண்டும் என்பதே அவா.

திங்கள், 24 அக்டோபர், 2011

பொண்ணு பார்க்க .....





பூமா அன்று காலையிலிருந்து படபடப்பாகவும் எல்லாம் நல்ல படியாக  முடிய    வேண்டுமே  என்றும்    நினைத்தாள். இருந்தாலும் அப்பப்போ  வயற்றில் மீன் துள்ளித்துள்ளி விளையாடியது .(அது என்ன எப்பபாரு  பட்டாம் பூச்சி  பறக்கிறது..} இன்னிக்கு அகில் பூமாவின் மகன் சுகந்த்கு பெண்  பார்க்க போகிறார்கள் .சுகந்தும் அஞ்சனாவும்   ஒரு  வருஷமா நன்றாக பழக்கம். பொண்ணு பார்க்க என்று  சொல்வதற்கு பதில்  சம்பந்தி பார்க்க என்று சொல்வது தான் சரி.

பூமாக்கு.தன்னை   பெண் பார்க்க வந்த நாள்  நல்ல ஞாபகம் வந்தது.பூமா குடும்பம் ஒரு  கட்டுப்பட்டியானது. ஜாதகம் பார்பதே  சொல்லமாட்டார்கள் . எல்லாம் ஒரு மௌன நாடகமாகவே  இருக்கும் ..இவளும் அதை மனதுக்குள் ரசிப்பாள். திடீரென்று  மாப்பிளை வருவதாக அன்று காலை தான் சொன்னார்கள். .என்ன படிப்புவேலைஒரு போட்டோ மூச் எதுவும் சொல்லவில்லைஅகில் , வந்தவுடன் ஒரு பேப்பர்   வைத்து முகத்தை மூடியவர்தான் ,ஏதோ அதிலிருத்து   தான் கேள்வி  கேட்க  போகிற மாதரி  மூழ்கி விட்டார் .ஏதோ தம்பியும் அம்மாவும் பார்க்க   நல்ல இருந்ததால் மனதில்  பாரத்தை  போட்டு பூமா சரி என்று சொன்னாள்.  ஆனால் அகில் உண்மையிலே ரொம்ப  நல்ல மாதிரிபேப்பர் விஷயத்தை கவனித்தது தனி கதை.

பூமாஅகில்சுகந்த் மூவரும்  சரியான டைம்க்கு கிளம்பி அஞ்சனா வீடு  போனார்கள் . என்ன அதிசியம் ! அஞ்சனா தான் எல்லோரையும்  உபசரித்து  அமர  செய்தாள், இரு குடும்பங்களயும் அஞ்சனாவும்சுகந்தும் அறிமுகம் செய்து விட்டு இரண்டு பேரும்  வாசலுக்கு போய்விட்டார்கள்.  இவர்களும்.  ஒரு  மாதிரி ஆரம்ப  கூச்சம் எல்லாம் போக சகஜமாக பேசி ,கல்யாணம் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு  வந்தார்கள்இது தான் இன்றைய  நடை முறை! . இதை புரிந்து கொண்டு நடந்தால் இந்த தலை முறையோடு  பெற்றவர்களுக்கு  நல்ல உறவு பாலம் அமையும் .

வெள்ளி, 21 அக்டோபர், 2011

உறவில் திருமணம் ....ஒரு ஷொட்டு!!!



ஒரு காலத்தில் உறவில் திருமணம் என்பது நம்மிடையே அதிகம் காணப்பட்டு வந்தது. பின் விஞ்ஞானரீதியாக உறவுத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் சில குறைபாடுகளும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற கருத்து வைக்கப் பட்டதால் அத்தகைய திருமணம் படிப் படியாக குறைய ஆரம்பித்தது. இது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதனால் சில நல்ல விஷயங்களையும்  இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

இன்றைய உறவுகள் சங்கிலித் தொடர் போல் இல்லாமல் சிறு சிறு தீவாகக் காணப்படுகிறது. உறவில் திருமணம் குறைந்தது கூட இந்நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சொத்துக்காக மட்டும் இன்றி பலமான உறவு பாலத்திற்கும் உறவில் திருமணம் பெரிதும் துணை புரிந்ததை மறுபதற்கில்லை. புகுந்த வீடும், பிறந்த வீடும் ஒன்றுக்குள் ஒன்றாகி இருந்ததால், திருமணம், பண்டிகை, மற்ற முக்கிய  தினங்களில் எல்லோரும் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வதுடன், மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆசையுடனும் கலந்துக் கொண்டு உறவின் பெருமையை மேம் படுத்தினர். தம்பதிகள் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடோ , பிரச்சனைகளோ வந்தாலும் பாதிப்பு எல்லோருக்குமே என்பதால், அதிகம் வளரவிடாமல் விரைவிலேயே தீர்வும் காணப் பட்டது. உறவின் மதிப்பும் பலமும் உணரப் பட்டது.

இன்று குடும்பத்தின்  வெளியே திருமணம் , அதையும் தாண்டி ஜாதி மதம் பாராமல் செய்யப் படுவது ஒரு வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் உறவுகள் மேம் பட அது கட்டாயம் துணைப் புரிவதில்லை. மேலும் திருமணம் போதும் மற்ற விசேஷ நாட்களிலும் அந்தந்த உறவிற்கான , மாமா, அத்தை பாட்டன், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா இவர்களுக்கான முக்கியத்துவம் பிரதானமாகக் கருதப் படுவதில்லை. நெருங்கிய சொந்தங்களிடமும்  ஒரு ஈடுபாடில்லாமல் கலந்துக் கொள்வதுடன் ஒரு தயக்கத்துடன் கூடிய அந்நியத் தன்மை தான் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலக் குடும்பங்களில் யார் யார் தங்கள் உறவு என்றுத் தெரியாமலே இருக்கின்றனர். 

முன் போல் எல்லோ உறவுகளோடும் அன்னோன்னியமாக இருக்க முடிவதில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. இதற்காகவேனும் உறவில் திருமணம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது .

புதன், 19 அக்டோபர், 2011

ரியாலிடி ஷோ .... தேவை ஒரு தணிக்கை !!!!



இன்று தொலைக் காட்சியில் எந்த சேனலைப் பார்த்தாலும், ரியாலிடி ஷோ என்ற பேரில் நடக்கும் போட்டிகளின் தாக்கம் தான் அதிகம் காண்கிறோம். இது போட்டி என்றக் கட்டத்தை தாண்டிஅதிகம், ஒரு உணர்ச்சிமயமான நாடகமாகத் தான் நடத்தப் படுகிறது. இதற்கு சொல்லப் படும் காரணம் T.R.P rating. இது எப்போ யார் மூலம் எடுக்கப் படுகிறது என்பது சம்மந்த பட்டவற்கே வெளிச்சம். பொழுது போக்கோ, இல்லை திறமையை வெளிப் படுத்தும் நிகழ்ச்சியானாலும் எதற்கும் ஒரு வரையறை இருத்தல் அவசியம். சில நாட்கள் முன்ஒரு சேனலில்  எதேச்சையாகப் பார்த்த ஒரு நிகழ்ச்சி என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது .

நம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுக்  கொண்டிருக்கிறது? இது என்ன மனிதத்தன்மையே இல்லாத ஒரு நிகழ்ச்சி !! விஷயம் இது தான்; ஆணோ, பெண்ணோ தன்னை ஏமாற்றிய காதலன் இல்லை காதலியை எந்த விதத்தில் பழி வாங்கவோ, பொது இடங்களில் அசிங்கப்  படுத்தவோ விரும்பினால்  இந்த பிரசித்திப் பெற்ற சேனலை அணுகலாம். அதற்கு தேவையான  நடிகர்கள், கதை படப் பிடிப்பு எல்லாம் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பழைய காதலன், காதலி எப்படி அசிங்கப் பட்டார்கள் என்பதை படமாக்கி, ஒரு நிகழ்ச்சியாக ஒளிப் பரப்புகிறார்கள். அவமானப் படுபவர்கள் ஏதேனும் விபரீத முடிவை எடுத்தால் என்னாவது? என்ன கொடுமை இது!! தாங்கள்  ஏமாற்றப் பட்டதை இப்படி உலகம் முழுக்கப் பறை சாற்றப் படுவதால் அவர்களின் நடத்தையும் தவறாக பேச வாய்ப்பு உண்டு என்பதை எப்படி மறந்தார்கள்? பழிக்கு பழி வாங்கும் இத்தகைய செயலை அந்த குறுப்பிட்ட சேனலும் எப்படி ஊக்குவிக்கின்றது என்று புரியவில்லை. தீவிரவாதம், கொலை  ,பழிவாங்குதல் போன்றவை அதிகரித்து வரும் தருணத்தில் இம்மாதிரி நிகழ்ச்சி தேவையா?

நாளை ஒருவர், எனக்கு இந்த மனிதனையோ உறவையோ பிடிக்கவில்லை, அவர்களை இந்த உலகிலிருந்து விலக்க வேண்டும் என்று வந்தால் அதையும் T.R.P rating என்ற பெயரில் செய்வார்களோ? ஒருவரோடு ஒத்துவரவில்லை, பிடிக்க வில்லை என்றால் விட்டு ஒதுங்குவது தான் சிறந்தது. இம்மாதிரி பழிவாங்குவது ஒரு தற்காலிக  மகிழ்ச்சியாக இருக்குமே அன்றி ஆரோக்கியமான செயலாக இருக்காது. அதனால் மனதிற்கு நிம்மதியும் கிடைக்காது. இதை ஈடு செய்யவோ என்னவோ அதே  சேனல் பெற்றோர்களால் சிக்கல் ஏற்படும் காதல் திருமணத்தை சமரசம் செய்து காதலர்களை இணைக்கும் முயற்சியும் செய்கின்றனர்.

எல்லோராலும் பரவலாகப் பார்க்கப் படும் தொலைக்காட்சி , ஒரு பலம் வாய்ந்த ஊடகம். வெகு விரைவில் மக்களை சென்றடையும் சாதனம். இதன் மூலம் நல்ல விஷயங்கள் சொல்லப் படுகிறதோ இல்லையோ தவறான செயல்களை, சிந்தனைகளை கொள்கைகளை சிறு சதவிதம் கூட பரப்ப துணை போதல் கூடாது. இத்துறை சமுதாய அக்கறையுடன் செயல் பட வேண்டும். தயவு செய்து இத் தகைய நிகழ்சிகளை ஊக்கப்  படுத்த வேண்டாம்.


வெள்ளி, 14 அக்டோபர், 2011

கூடா(ங்)த குளம் !!!

கூடா(ங்)த குளம் !!!

கூடாங்குளம் இன்று தமிழ் நாட்டில்  எல்லோராலும் மெல்லப் படுகின்ற அவலாகி விட்டது. அங்குள்ள மக்கள் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக நடத்தி வரும் போராட்டம், மற்றவர்களை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பதை மறுபதற்கில்லை. ஆனால் இது குறித்து சில கேள்விகள் பாழும் மனதில் எழத்தான் செய்கிறது.

1.இன்று இவ்வளவு தீவிரமாக எழுந்திருக்கும் போராட்டம் அடிக்கல் நாட்டும் போதே நடத்தி இருந்தால் கால விரயமும், பண விரயமும் தடுக்கப் பட்டிருக்கலாம்.
2. இத் திட்டத்தை பற்றிய சரியான விழிப்புணர்வும் தெளிந்த சிந்தனையும் அப்பகுதி மக்களை சென்றடைய வில்லையோ?
3.சில அரசியல்வாதிகளும், கட்சிகளும்தங்களின் சுய விளம்பரத்திற்காக  அப்பாவி மக்களை தங்கள் கை பொம்மைகளாகப் பயன் படுத்துகின்றனரோ?

ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்தைக் கூற உரிமை உண்டு. அது போல் அரசாங்கமும் மக்கள் நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அனுமதி  வழங்கி இருக்காது. மேலும் கல்பாக்கத்தை விட கூடுதல் பாதுகாப்புக் கொண்டு கூடாங்குளம் அமைத்திருப்பதை சம்மந்த பட்டவர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை இதன் பலன், பாதுகாப்பு,மற்ற விவரங்கள் மக்களை சரியாகச் சென்றடைய வில்லையோ? எப்போது மக்களுக்கு தங்கள் வாழ்வு, பாதுகாப்பு பற்றிய பயம் இத் திடத்தினால் ஏற்படுகிறதோ அதை போக்குவது தான் சம்மந்த பட்டவர்களின் முதன்மையானக் கடமை ஆகும். இல்லையனில், மக்களின் அறியாமையை சாதகமாகக் கொண்டு சிலர் அரசியல் சாயம் பூசி முடக்க வாய்பு உண்டு.
இத் திட்டத்திற்காக பல ஆயிரம் கோடி செலவிடப் பட்டுள்ளது; எல்லாம் மக்கள் பணமே; இது கை விடப் பட்டால் பணம், நேரம் விரயமாவதுடன், இங்கு வேலை செய்ய எடுக்கப் பட்டவர்களின் நிலை என்னாகும் என்று தெரியவில்லை! வீணாக்கப் பட்ட எங்கள் பணத்திற்கு என்ன பதில் என்று ஒரு சாரர் போராட்டம் தொடங்கினால்? அதற்கும் இதே கட்சியும் அரசியல்வாதிகளும் துணைப் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. எந்த ஒரு திட்டத்தின் பலனும் மக்களிடம் சரிவர சென்றடைந்தால் தான் அமல் படுத்த முடியும்.எந்த வித குறுக்கீடும் இல்லாமல் மக்களிடம் நேரடியான பேச்சு வார்த்தை நடத்தி சரியானக் கோணத்தில் தெளிவு படுத்த வேண்டும். மக்களும் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்;தங்களின் பலவீனக்களையும் அறியாமையையும் சாதகமாகக் கொண்டு பேசுபவர்களின் சொல்களையும்,செயல்களையும் கண்மூடித் தனமாக பின்பற்றுவதை விட்டொழிக்க வேண்டும்.
சுயமாக சிந்தித்து உண்மையிலே நல்லத் திட்டமாக இருந்தால் இழப்பீட்டையும்,சலுகைகளும் கூடுதலாக பெற வேண்டி போராடலாம். ஆனால் திட்டத்தேயே கைவிட வேண்டும் என்று அதுவும் செயல் படுத்தும் தருணம் முட்டுக் கட்டை போடுவது சரியாய் என்று தெரியவில்லை.

திங்கள், 10 அக்டோபர், 2011

சுமையிலும் ஒரு சுகம் !!!

கதிரவன் முழுமையாக விழிக்கும் முன் பூங்காவில் மேற் கொள்ளும் நடை பயணம் ஒரு சுகமான அனுபவம். அதை விட அருகில் நடைபயில்பவர்களின் உரையாடலை காதில் வாங்கிக் கொண்டே நடப்பது கூடுதல் சுவாரசியம். எல்லா விஷயங்களும் அரசியல், சொந்த அனுபவம், கிசு கிசு எல்லாம் அலசப்படும். சில விஷயங்களை புதுக் கோணத்தில் பார்கக் கூடிய வாய்ப்பையும் தருகிறது. அது போல் கேட்ட விஷயம் தான் இம்மாதிரி எழுதத் தூண்டியது.

இன்று இந்தியாவின் எல்லாப் பகுதிலிருந்தும், தெருவிற்குப் பத்து வீடு இருந்தால் அதில் 6, 7 குடும்பங்களில் இருந்தேனும் பிள்ளைகள் வெளி நாடுகளில் வேலைப் பார்கின்றனர். வேலைப் பளுவால் இந்தியா வர முடியாததால், 55, 60 வயதை தாண்டியப் பெற்றோர்கள், பிள்ளைகள் இருக்கும் இடம் பயணிப்பது அதிகமாகி விட்டது. முக்கியமாக குழந்தை பேரு காலம் அல்லது பேரக் குழந்தைகளின் விடுமுறை போதும் மிகவும் அவசியமாகிறது.  இரு பாலரும் வேலைக்குப் போவதால் பெரியவர்களின் வருகை சிற்சிலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது நல்ல விஷயமே; ஆனால் பெரியவர்களுக்கு ஏற்படும் சில சங்கடங்களையும் கஷ்டங்களையும் சிலர் கவனிக்கத்  தவறி விடுகின்றனர்.

முதலாவதாக பயண நேரம்; U.S,U.K போன்ற நாடுகளுக்கு குறைந்த பட்சம் 18,20 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பயணிப்பது அந்த வயதில் மிகுந்த சிரமங்களையும் , அசௌரியத்தையும் ஏற்படுத்துகிறது. பேரு காலத்தில், எந்தத் தாய்க்குமே கூட இருந்து கவனிப்பது மகிழ்ச்சியும், மன நிறைவையும் தரும் விஷயம்; ஆனால் கூடுதல் சுமையாக வீட்டு நிர்வாகமும், சமையலும் சேரும் போது செய்ய மனம் இருந்தாலும், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது; வேலைக்கு  ஆள் கிடைப்பது கஷ்டம் என்றாலும், வாரத்தில் 1,2 முறையேனும் உதவிக்கு வைத்தால் சுமை அதிகம் தெரியாது.

இன்னொரு ஏக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் மொழி ; வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் தாய் மொழி அல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதே பெரிதும் வழக்க மாகிவ்ட்டது. என்னதான் இக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும், உச்சரிப்பு வேறுபடுவதால் புரிந்து கொள்வதில் சிரமும், ஒரு அந்நியத் தன்மையும் தான் ஏற்படுகிறது. பேரக் குழந்தைகளுடன் சிறிது  காலமே இருக்கக் கூடிய சந்தர்பத்தில், தாய் மொழியால் தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள முடியும். உறவின் வலுவானப் பிணைப்பிற்கு தாய் மொழி தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். அலுவலகம், பள்ளி .பொது இடங்கள் செல்லும் போது அந்தந்த நாட்டு மொழி தெரிந்திருப்பது அவசியம். அதே முக்கியத்துவத்தை அவரவர் தாய்மொழிக்கு கொடுக்கும் வண்ணம் வீட்டிலாவது பேச வேண்டும்.

மற்றும் இப்போது விமான சேவையில் நிறைய கூடுதல் வசதிகளை பெற முடிகிறது. குழந்தைகளை, விடுமுறை போது பாதுகாப்பாக தனியாக அவரவர் செல்ல விரும்பும் இடங்களுக்கு அனுப்பவும் முடியும்; இம்மாதிரி பெரியவர்கள் வருவதற்கு பதில் குழந்தைகளை அவர்கள் இருக்கும் இடம் அனுப்புவதால் கூடுதல் பிணைப்பும், பழக்க வழக்கங்களை நன்கு அறிந்துக் கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த கோணத்தில் சிந்தித்தால் எல்லோருக்கும் சுமையை விட சுகமே மேலோங்கி நிற்கும் அல்லவா !!!


சனி, 8 அக்டோபர், 2011

பணக்கார (ஆ)சாமிகள் !!!

பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்று கடவுளிடையும் பார்க்கப்   படுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது .எந்தக் கடவுளும் தான் பணக்காரன் என்றோ ஏழை என்றோ பறைசாற்றிக் கொள்வதில்லை; மனிதர்களாகிய நாம் ஏற்படுத்தும் மாயை அன்றி, இது வேறொன்றும் இல்லை. இன்று சில கோவில்களில் காணப் படும் சொத்து விவரங்களைப் பார்த்தால், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதை எவருமே ஒப்புக் கொள்ளத் தயங்குவார்கள்.

இம்மாதிரிக் கோவில்களை அரசாங்கம் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர யோசித்து வருவது நாம் அறிந்ததே! அது  மாதிரி நடக்குமே ஆனால் கடலில் கரைத்த உப்பு போல் யாருக்குமே  பயன் இல்லாமல், காணாமல் போக வாய்பு உண்டு. அரசாங்கத்திற்கே உள்ள சில விதி முறைகளால், நல்ல விஷயங்களை செயல் படுத்துவதில் தடங்கல்களும் காலத் தாமதமும் ஏற்படலாம். அதனால், கோவில் நிர்வாகிகளோ, உரிமையாளர்களோ சம்பந்த பட்டவர்களோ நிதானமாக யோசித்து சொத்துக்களை நல்ல முறையில் பயன் படும் வண்ணம் செயல் படுத்த முன் வர வேண்டும்.

அந்தந்த கோவில் சொத்துக்கள் அக் கோவில்களின் மேன்பாட்டுக்கே பயன் படவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து கொஞ்சம் வெளி வர வேண்டும். மனிதனிடம் காணப் படும் "எனது, உனது என்ற உணர்வெல்லாம் கடவுளிடம் கிடையாது; இன்று சிலக் கோவில்களில் பக்தர்களுக்கு, 5 star hotel அளவிற்கு பல  வசதிகளை வழங்குகிறது, அது தேவையா? மன அமைதிக்கும், நிம்மதிக்கும் இத் தளங்களை நாடி வருபவர்களுக்கு அது ஒரு பெரும்  பொருட்டாக இருக்க முடியாது. அதை விடுத்து, எத்தனையோ பழங்கால கோவிகள் பணப் பற்றாகுறையால் நலிந்து, அடிப்படை தேவைக் கூட இல்லாமல் களை இழந்துக் காணப் படுகிறது. அவைகளை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடு படலாம்.  

மேலும் அந்தந்த ஊரிலேயோ, அருகில் இருக்கும் கிரம்மங்களையோ தத்தெடுக்க முன் வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி,மின்சார வசதி, கல்விக் கூடங்கள், அன்ன தானம், போன்ற தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயல் பட்டால், அதை விட பெரிய சேவை வேறொன்றும் இருக்க முடியாது. தேவைக்கு அதிகமான பணம் இம்மாதிரி நல்ல முறையில் பயன் படுத்துவது, மற்றர்வர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சம்மந்தப் பட்டவர்கள் இது பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவிற்கு வந்தால் இரு கரம் நீட்டி வரவேற்கப் படுவார்கள் என்பது திண்ணம்.