ஞாயிறு, 17 ஜூலை, 2011

உச்சக்கட்ட அன்பு

தாரணிக்கும் மூர்த்திக்கும் ,இந்த இரண்டு வாரம்போனதே தெரியவில்லை. மகள் நித்யாவும்,பேரனும் மும்பையிலிருந்து ,விடுமுறைக்கு இங்கு அவர்களுடன் இருந்து விட்டுப் போனது மனதிற்கு மிகவும் சந்தோஷமாவும்,ஆறுதலாகவும் இருந்தது.இருந்தாலும் மூர்த்திக்கு,  "ஐயோ தாரணி மீண்டும் பழையப் புலம்பலை ஆரம்பித்து விடுவாளே"என்று எண்ணிக் கலங்கினான்.

"ச்சேய் "இதே போன கோடை விடுமுறை போது மகள்,மருமகன், பேரனுடன் கழித்த நாட்கள் எவ்வளவு குதுகுலமாகவும்,கொண்டாட்டமாகவும் இருந்தது என்று மூர்த்தி   நினைத்துப் பார்த்தான்.அவர்கள் இருந்த போது தாரணியை கையில் பிடிக்க முடியவில்லை.பேரனுக்கு சரிசமமாக விளையாடி,வேண்டியதை செய்துக் கொடுத்து, தினசரி ஒவ்வொரு இடம் அழைத்துப் போவது என்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள்.அதே நினைப்பில்,இந்த முறையும்,பேரன் முகில் பாட்டியிடம்,"ஏன் பாட்டி எப்போதும் படுத்துண்டே இருக்கே?எனக்கு போர் அடிக்கிறது எப்போதும் போல விளையாடலாம் வா"என்று நிலைமை புரியாமல் கேட்டது வேதனை அளிக்க,தாரணி "கண்ணா,நான் படுத்துண்டே உனக்கு கதைகள்,பாட்டு எல்லாம்  சொல்வேனாம்,நீ என்ன கேட்டாலும் பதில் சொல்கிறேன் சரியா?"என்றாள்.ஆனால் முகில் என்ன சொல்லியும் சமாதனம் ஆகாமல் முரண்டுப்  பிடிக்கத் தான் செய்தான்.

ஒரு வருஷத்திற்கும் மேலாகிறது தாரணி இன்று இருக்கும் இந்த நிலை.இந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருவருமே தவித்தனர்.எவ்வளவு பணம் செலவு செய்யத் தயாராக இருந்தும்,குணப் படுத்த வாய்ப்பே இல்லை என்று தெரிந்த போது மூர்த்தியும்,  ,தாரணியும் மனம் நொறுங்கிப் போனார்கள்.
ஒரே மகள் நித்யாவும் எவ்வளவு நாள் தான் இவர்களுடன் இருக்க முடியும்?அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கு;புகுந்த வீட்டில் நிலைமை புரிந்துக் கொண்டு ஒத்துழைத்தாலும்,எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?.நித்யா இருப்பது ஆறுதலாக இருக்குமே அன்றி தாரணி நோய்க்கு தீர்வாகாது.

தாரணி மிகவும் ஆரோக்கியமான பெண்.ஒரு நாள் கூட தலவலி ஜுரம் என்று படுத்ததில்லை.மனதையும்,உடம்பையும் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பாள்.  எப்போதும் புத்துணர்வுடன் இருப்பாள்.எதையும் பாசிடிவாக    நினைக்கும் குணம். எதற்கும் அதிகம் கலங்க மாட்டாள்.எந்த விஷயமானாலும் பொறுமையாக கையாளுவாள்.                                                                                                    
ஒரு நாள் ஆபீஸ் விட்டு வந்த மூர்த்தி ரொம்ப நேரம் பெல் அடித்தும் கதவு திறக்கவில்லை.தன்னிடம் உள்ள இன்னொரு சாவியைப் போட்டு திறந்து உள்ளே நுழைந்தான்.தாரணியைத் தேடி பெட்ரூம் சென்றுப் பார்த்தப் போது,பேச்சுமுச்சிலாமல் தாரணி  கீழே விழுந்திருக்கும் நிலைப் பார்த்து மனம் பதைபதைத்தான். .தன் அசதியையும் பொருட்படுத்தாமல் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரி சென்றான்.
நிறைய டெஸ்ட் எடுத்தார்கள்; இரண்டு,மூன்று டாக்டர்கள் பரிசோதித்தார்கள்;என்ன பிரயோசனம்,ஒன்றும் புரியவில்லை ;கடைசியல் இடியாய் அந்த செய்தி மனதை தாக்கியது.தாரணி உடைய உள் உறுப்புக்கள் வேலை செய்தாலும்,அவளால் இனி தன் கழுத்துக்கு கீழ்  எந்த உறுப்பையும் அசைக்க முடியாது என்பது தான், இனி காலம் முழுவது படுக்கை இல் தான் வாழ்க்கை என்று முடிவானது..இருவராலுமே இதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.மூர்த்தி தன் சக்தி,உயிர் எல்லாம் தன்னை விட்டுப் போனது போல் நிலை குலைந்தான்.தாரணிக்கு அதிர்ச்சியல் பேச்சே வரவில்லை.
அன்றையிலுருந்து தாரணிக்கு எல்லாமும் அவன் தான் என்றாகிவிட்டான்.வீட்டு  வேலைக்கும்,சமையலுக்கும் ஆள் போட்டான்.தன் கண்மணியான தாரணி உடைய  தேவை அனைத்தும் சலிக்காமல் செய்தான்.பேட்பன் வைப்பது,உடம்பு துடைப்பது,துணி மாற்றுவது,சாப்பாடு கொடுப்பது ,எதிலும் குறை வைக்காமல் அவளை அன்போடு கவனித்தான்.ஆபீஸ் போகாமல் வீட்டில் இருந்தபடி செய்யும் வேலையாக மாற்றிக் கொண்டான்.
.இவர்களை நன்றாக அறிந்தவர்களுக்கு மூர்த்தி செய்வதில் வியப்பு ஒன்றும் ஏற்படாது,
இருவரும் அவ்வளவு நெருக்கமான friendly ஆன ஆதர்ச தம்பதி.மூர்த்தி  எந்த விஷயமானாலும் தாரணியைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான்.இருவருமே அவரவர்களுக்கு உண்டான space  ஐ  மதிக்கத் தெரிந்தவர்கள். சோதனைகளும்,பிரச்சனையும் வரும் போது தாரணி தான், பக்க பலமாக இருந்து ஆலோசனயும் தைரியமும் கொடுத்து வெளி வரக் காரணமாக இருப்பாள்.ஏன்,நடுவில் ஒரு பெரிய பண சிக்கலில் இருந்த போது,சிறியப் பெண்ணாக இருந்த நித்யாவிற்கு கூட அதன் பாதிப்பு தெரியாமல் வளர்த்து,கணவனுக்கும் பேசிப் பேசியே தைரியம் கொடுத்து,ரொம்பவும் உரு துணை ஆக இருந்தாள்.
அப்பேற்பட்ட தாரணி இன் இப்போதைய நிலைமை மிகவும் கொடுமை என்றால்,அதை விடக் கொடுமை,மூர்த்தியை அவள் செய்யச் சொல்லும் விஷயம் தான்.இந்தக் கொடுமையை செய்யச் சொல்லி கடந்த சில மாதமாக அவனை வாட்டுகிறாள்.
"என்னங்க, இப்போ தான் வலை தளத்தில் எல்லாத் தகவலும் இருக்கே,வலி இல்லாத முறையில் எனக்கு இதில் இருந்து விடுதலை கிடைக்க வழி செய்யுங்கள்;இப்படியே இருப்பது கொடுமையிலும் கொடுமைங்க, தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்களேன்" என்றாள்.மூர்த்தி, "ஐயோ,என்ன சொல்ற நீ,என்னால் இது முடியவே முடியாது;எப்படி இவ்வளவு கேவலமா என்னை நினைத்தாய்?நான் என்ன அரக்கனா இப்படி ஒரு கொடுமையை செய்ய"என்று கேட்டு குமுறி அழுதான்.நித்யா இருந்த பத்து நாள்,ஓய்ந்து இருந்த புலம்பல் மீண்டும் தொடங்கியது.
ஒரு விதத்திலும் தன்னால் இனி எந்த உபயோகமும் இல்லை என்ற எண்ணம் தாரணி மனதில் ஆழமாக பதிந்து விட்டது,மூர்த்தியின் நிலைக் கண்டும் மனதிற்குள் புழுங்கி அழுதாள்.இப்பேற்பட்ட கணவனுடன் சந்தோஷமாக நீண்ட நாள் வாழ  முடியாததை எண்ணி எண்ணி வருந்தினாள்.எப்படியேனும் தன் எண்ணத்தை அவர் மூலம் செயல் படுத்த உறுதிப் பூண்டாள்.
"ஏங்க,நீங்க கூட என்னுடைய இந்த  நிலைமையை விரும்புகிறேர்களா?என்னுடைய பரிதாப நிலையையும்,படும் சித்ரவதையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேர்களா?  இதற்கு தீர்வே கிடையாது என்று தெரிந்து தானே சொல்கிறேன்;என்னைக் கண்டு எல்லோரும் பரிதாப படுகிற இந்த நிலையை நான் வெறுக்கிறேன்.எனக்கு விடுதலை வேண்டும்"என்றாள்.
"ஏன் தாரணி நீ எவ்வளவு விஷயத்தில் எனக்கு தைரியம் சொல்லி,பக்க பலமாகவும் இருந்து, கஷ்டத்தில் இருந்து மீட்டு இருக்காய்?இப்போ திருப்பி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு,அதை ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறாய்?இதுவே உன் நிலைமயில் நான் இருந்தால் இப்படிச் செய்வாயா?உனக்கொரு நியாயம்,எனக்கொரு நியாயமா?"என்றான்,மூர்த்தி.

"ஐயோ,இதுவெல்லாம் வாதத்திற்கு வேண்டுமானால் சொல்லலாம்,வலியும்,வேதனயும்,அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்;மதிப்போடும்,மரியாதையோடும்,வாழ்ந்த எனக்கு,சாவும் அதை மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?".வெறிக் கொண்டு பேசும் தாரணி இன் ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தை அறுப்பது போல் இருந்தது."இங்க பாருங்க, தினமும் என்னை இப்படி பார்ப்பது உங்களுக்கு எவ்வளவுக் கஷ்டத்தை கொடுக்கிறது,என்னக்காக,உங்க சுக துக்கங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உப்புச்சப்பில்லாத வாழ்கையை வாழ்வதை பார்க்கும் போது நான் எவ்வளவு பெரிய கொடுமைக்காரி என்று தோன்றுகிறது",என்றாள்."shutup நீ என்ன சொன்னாலும் என்னால் முடியாதுமா."என்றான்,மூர்த்தி.
அவ்வளவு தான்,அன்று முதல் அவரிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டாள்.ஒரு நாள்,இரண்டு நாள் போனது;அவளது மௌனத்தைக் கண்டு,அப்பாடி ஒரு மாதிரி புரிந்து கொண்டாள் என்று நிம்மதி அடைந்தான்.ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாள் நீடிக்கவில்லை.மூர்த்தி உணவு கொடுக்கும் போதோ,மற்ற பணிவிடை செய்யும் போதோ தாரணிக் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பெருகியது.ஆனால் அவளின் மௌனப் போராட்டம் தொடர்ந்துக்  கொண்டு தான் இருந்தது. மாறுவாள் என்று எதிப்பார்த்தவனுக்கு,அவளின் இந்த மௌனம் முன்னிலும்  விட சித்ரவதையாக இருந்தது.தாரணி இன் போக்கு தாங்க முடியாமல்,ஒருவரிடமும் சொல்ல முடியாமல் ரொம்பவும் தவித்தான். 
அன்று தனியாக அமர்ந்து,கண் மூடி ரொம்ப நேரம் யோசனை செய்தான்.மனதை திடப் படுத்தி ஒரு முடிவுக்கு வந்து தாரணி இடம் போய் நின்றான்."சரி,தாரணி நீ சொன்னதிற்கு சம்மதிக்கிறேன்".என்று உணர்ச்சி எல்லாம் வற்றிப் போய் கூறினான்.அவளுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.ஐயோ,மௌனம் ஒரு தலை சிறந்த ஆயுதம் என்று சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று எண்ணினாள்.
"நீங்க என் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து ஒத்துக் கொண்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்;என் முழு சம்மதத்தோடு செய்வதால் இதில் உங்களுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை.ஆன என்னோடஇன்னொரு  ஆசை,எல்லாம் முடிந்தவுடன்,ஒழுங்காக இருக்கும் உறுப்பை எல்லாம் தானமாக கொடுக்க வேண்டும் சரிங்களா?" என்றாள்.சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான்.
ஆனால்,மனதில் "பைத்தியக்காரப் பெண்ணே,உனக்கு இந்தக் கொடுமையை செய்து விட்டு நான் மட்டும் உலகில் இருப்பேன் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறாய்?"என்று நினைத்தான்.இனியும் தள்ளிப் போடாமல் சீக்கிரமே செயல் படத் தொடங்கினான்.தானும் அவளுடன் சேர்ந்து பயணிக்கப் போவதுப் பற்றி மூச்சு விடவில்லை. 
பத்து நாட்களாக ஒரு மருந்து சீட்டை வைத்து பல கடைகளில் தூக்க மாத்திரை வாங்கினான்.அன்று அந்த மாத்திரை பாட்டில் ஐ கையில் எடுத்தான்.இருவரும் இந்த உலகிலிருந்து விடை பெற போதுமானதாக இருந்தது.கடைசி இரவை எண்ணி இருவரிடமும் பெருத்த அமைதி நிலவியது.தாரணி மகளுடன் போன் இல்  பேச விரும்பினாள்;என்னத்தான் தைரியமாக இருந்தாலும்,நித்யா உடன் பேசப் பேச உணர்ச்சியை கட்டுப் படுத்த முடியாமல் தவித்தாள்.மூர்த்தி அவளிடமிருந்து போன் ஐ வாங்கினான்.நித்யாவிடம் சாதரணமாகப் பேசி,எல்லோர் நலங்களையும் விசாரித்தான்.குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினான்.பிறகு,"நித்யா,கூடிய சீக்கிரமே நீ இங்கு வர வேண்டி இருக்கும் மா," "ஏன் பா,என்ன விஷயம்,ரொம்பவும் முக்கியமா பா,எப்போ வரணும்?நித்யா குரல் காற்றில் ஒலிக்க,கேட்டுக் கொண்டே நவீன் போன் ஐ மெதுவாகக் கிழே வைத்தான்.

2 கருத்துகள்: