சனி, 30 ஜூலை, 2011

துணிந்து நில் !!!

நகரத்திலிருந்து சற்றே தள்ளி இருந்த அந்த  பிரம்மாண்ட பங்களாவிற்கு மேலும் அழகு சேர்த்தது அதன் உள்ளே இருந்த பூக்களும் செடிகளும் நிறைந்த தோட்டம். நகரின் முக்கிய புள்ளிகளும்,பணக்காரர்களும், அமைதி வேண்டி இந்த மாதிரி இடத்தை விரும்புவது அதிகமாகி விட்டது. பிரபாகரின் குடும்பமும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த சொந்த வீட்டில் குடி வந்து முன்று வருடங்கள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் கூட்டு குடும்பம் என்பது மிகவும் அரிதாகிவிட்டது . 

ஆனால் பிரபாகர் குடும்பம் கொஞ்சம் விதி விலக்கு. மனைவி சரளா, மகன்கள் ராகவ்,பாஸ்கர் மருமகள் சுனிதா என எல்லோரும், எந்த வித ஈகோ வும் இல்லாமல்சேர்ந்து இருக்கும்  நெருக்கமான குடும்பம்.

பாஸ்கரைத் தவிர மற்ற எல்லோரும் நன்றாகப்  படித்து நல்ல வேலையில்  இருப்பவர்கள். ராகவ் வெளி நாட்டில் படித்து இருந்தாலும், தாய்நாட்டில் வேலை செய்யவே விரும்பினான். அவன் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையும் ,வசதியும், மதிப்பும் உள்ள அலுவலகம் அமைய அதுவே போதுமானதாக இருந்தது. மனைவி சுனிதா தனியார் வங்கியல் பணிபுரிபவள். பிரபாகர் தனியார் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி. இவர் மனைவி சரளாவும் நிறைய படித்திருந்தாலும் வேலைக்குப் போகாமல் நிறைய பொது சேவையில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவள். பாஸ்கர் மட்டும் அதிகம் படிக்காததால், சொந்தமாக தொழில் தொடங்கி, அதில் நிறைய சம்பாதிக்கவும் செய்கிறான். வரும் லாபத்தில் ஒரு சிறு பகுதியை அனாதை இல்லங்கள், மருத்துவ உதவி, கல்விக்கு என்று தவறாமல் ஒதுக்கி விடுவான். இந்த குடும்பத்தில் எல்லோருக்கும் இரத்த தானம் செய்யும் வழக்கமும் உண்டு.

பாஸ்கர்  தனக்கு படிப்பு வராததை ஒரு பெரிய குறையாகவே எண்ணி தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு வீட்டினுள் வளைய வருபவன். குடும்பத்தினர் அதனைப் போக்க வேண்டி அவனை இழுத்து வைத்து கலகல என்று பேச முயன்றாலும் அவன் ஒதுங்கியே தான் இருப்பான். இந்த வீட்டில் தான் மட்டும் தனித்து இருப்பதாக பாஸ்கருக்கு தோன்றும்.

சமையல் அறையிலிருந்து கமகம என்று சாம்பார்,பொங்கல் மணம் எல்லோரையும் dining hall கு இழுத்தது. சரளாவின் மேற்பார்வையில்  சமையல்,மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருப்பதால், வீட்டுப் பொறுப்பைப் பற்றி கவலைப் படாமல் அவரவர் வேலைக்கு நிம்மதியாக போய் வர முடிந்தது. சாப்பிடும் போது எல்லோரும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே சாப்பிடுவது இவர்களது வழக்கம்.

 அன்றும் பாஸ்கர் வழக்கம் போல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சரளா,"என்னடா, இப்படி இருக்கே.வயதிற்கு  ஏற்ற மாறி ஜாலியா சந்தோஷமா இரேன்; தேவை இல்லாமல் கண்டதையும் நினைத்து உனக்கு நீயே ஒரு வேலிப் போட்டு  கொண்டு வெளி வர மறுக்கிறாய். ராகவைப் பாரு என்னதான் படித்து, வெளி நாடெல்லாம் போயிருந்தாலும் உன்னை போல் தொழில் தொடங்கும் தைரியம் இருந்ததா? என்றாள்  "ராகவ்,"ஆமாம் பாஸ், உன்னைப் பார்த்தால் பொறாமையாகவும்  ,அதே சமயம் பெருமையாகவும் இருக்கு; என்ன இருந்தாலும் உன் சாமர்த்தியம் எனக்கு வராது; இன்னொருவருக்கு சலாம் போடாமல் தனித்து சாதித்து ஜெயித்துக் கொண்டு இருக்கே', என்றான்.

ஆனால் இதே பாஸ்கர் நண்பர்கள் மத்தியில்  ரொம்பவும் ஜாலியாகவும், கடி ஜோக்ஸ் அடித்துக் கொண்டும் கலகலப்பாக இருப்பான்; இதுவே சரளாவிற்கு எதைச்சையாக வீட்டில் நடக்கும் ஒரு விருந்தின் போது தான் தெரிய வந்தது. வார நாட்களில், எல்லோரும் வேலை வேலை என்று ஓடுவதால் வாரக் கடைசியில்  relaxed ஆக இருக்க விருந்தை சரளா ஏற்பாடு செய்வதுண்டு . அப்படி தான் ஒரு முறை," அவனா இவன்!! என்று வியக்க வைத்த பாஸ்கரைப் பார்த்தாள். அது முதல் அவன் நண்பர்களும் விருந்தில் இருக்கும் மாறு பார்த்துக் கொள்வாள்.

"பாஸ்கி இந்த சனிகிழமை உன் friends இடம் dinner இருக்கு என்று சொல்லி விடு சரியா"என்றாள் சரளா. பின் ஆமாம்,ஏன் ரொம்ப dull ஆக இருக்கே, உடம்புக்கு ஒன்றும் இல்லையே, ஒழுங்க சாப்பிட கூட இல்லையே" ."கொஞ்சம் அலைச்சல் ஜாஸ்தி அதான்",என்றான். ஆனால் உள்ளுக்குள் ஏன் முன்பு போல் நம்மால் அதிக நேரம் உழைக்க முடியாமல் சோர்வு ஏற்படுகிறது; சரியாக சாப்பிட முடிவதில்லை, அடிக்கடி மயக்கம் வேறு வருகிறது என்று தெரியாமல் குழம்பினான். போன வாரம் கூட clientஇடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம், சுற்றி என்ன நடந்தது எனப் புரியாமல் இருட்டிக் கொண்டது. உடனே சரியாகி விட்டது. வேலை மும்மரத்தில் மறந்தும் விட்டான். இப்போ அம்மா கேட்கும் போது தான் நினைவு வந்தது. சரளாவிற்கு எதுவோ சரி இல்லை என்று தோன்ற,"எதற்கும் டாக்டர் ஐ போய் பாரு" என்றாள்.

வழக்கம் போல் இந்த வார விருந்தும்  பாட்டும் கும்மாளமுமாக களை கட்டிக் கொண்டிருந்தது. பாஸ்கி நண்பர்கள் கூட வந்தாகி விட்டது; பொதுவாக நேரத்திற்கு வரும் பாஸ்கரை தான் இன்னும் காணோம். கடைசியில்  சாபிடுகிற நேரம் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த குடும்பதற்கு, "ஐயோ,இதன்ன முகமெல்லாம் வெளிறிப் போய், ஜீவனே இல்லாத நடைப் பிணமாய் இருக்கான். தொழிலில் ஏதேனும் பிரச்சனையா? என்று கலங்கினர். எதுவானாலும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவனை சாப்பிட அழைத்தனர். அவனும் சாபிட்டுவிட்டு நழுவுவதிலே  குறியாக இருந்தான்.
இவனுக்கு நல்ல கலகலவென்ற வாயடிப் பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணனும், அப்போதான் மாறுவான்." என்ற கிண்டலைப் பொருட்படுத்தாமல், அசதியாக இருக்கு என்று படுக்கப் போவதாக கூறி தன் அறையை நோக்கி நடந்தான். எதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட சரளாவும் அதற்கு மேல் கட்டாயப் படுத்தவில்லை.

தன் அறைக்குப் போய் கதவை தாளிட்டவன் படுக்கையில் விழுந்து கதறி அழுதான். இது எப்படி நடந்தது, எனக்கா இந்த நிலை,இனி என் எதிர்காலம், அப்படி ஒன்று உண்டா? என் பலதும் எண்ணி மனம் புழுங்கினான். இனி உயிர் வாழ்வதில் என்ன பலன்? குடும்பதற்கு என்னால் எவ்வளவு பெரிய தலை குனிவு, அவமானம்; அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்? பல உணர்சிகளும், எண்ணங்களும் தாக்க உறக்கமும் வராமல் தவித்தான். வழக்கம் போல் ரத்த தானம் கொடுக்க போன போது,டாக்டர் சொன்ன விஷயம் தான் அவனை இந்த பாடு படுத்தியது.   அவன் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாக நத்தைப் போல் தனக்குளே சுருண்டான்.

4,5 நாட்களாக சரியாக சாப்பிடவும் இல்லை; தொழிலையும் கவனிக்கவில்லை.   இன்னும் சகஜ நிலைக்கு திரும்பாதது வீட்டில் எல்லோருக்கும் கவலையை அளித்தது. எல்லோரும் கலந்து பேசி பாஸ்கரிடமே தெளிவு படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். அன்று கொஞ்சம் நேரம் கழித்து வந்த  பாஸ்கர் hall லில் எல்லோரும் கூடி இருப்பதைப் பார்த்து தயங்கி நின்றான். சரளா அவனை அருகில் அமர்த்தி நிதானமாக பேச ஆரம்பித்தாள். 

"இங்கே பாரு நீ எங்களை விட்டு ஒதுங்கியே இருந்தாலும் நாங்கள் உன்னை எவ்வளவு நேசிக்கிறோம் என்று உனக்கேத்  தெரியும். இந்த கொஞ்ச நாளா உன்னைப் பார்க்கவே மனதிற்கு ரொம்ப கஷ்டமாகவும்,வருத்தமாகவும் இருக்கு; என்னப் பிரச்சனையானாலும் சொல்லு; எதுவானாலும் நாங்க உனக்கு உறுதுணையாக இருப்போம்". சரளா பேசப்பேச பாஸ்கர் துக்கம் தாங்காமல் சரளாவின் மடியில் முகம் புதைத்து கட்டுப் படுத்த முடியாமல் அழுதான். அனைவரும் ஒரு கணம் மூச்சு விட மறந்து அதிர்சிக்கு உள்ளனார்கள். விஷயம் தாங்கள் எதிர் பார்த்ததுக்கும் மேலான விபரிதம் என்று புரிந்தது. பாஸ்கர் ஒரு கணம் தலை நிமிர்ந்து தன்னை உயிர் கொல்லியான எய்ட்ஸ் தாக்கி இருப்பதைக் கூறிவிட்டு வேகமாக தன் அறையிகுள் புகுந்து கதவை சாத்தினான். குடும்பத்தினர் அதற்கு react பண்ணவும் மறந்து மிகுந்த அதிர்ச்சிக்கு
உள்ளனார்கள்.

2,3, நாட்கள் ஒருவர்கொருவர் பேசவும் முடியாமல் கலகலப்பு குறைந்து வீடே ஒரு மயான அமைதியை தழுவியது. எல்லோரும்  ஒரு நிலைக்கு வர இந்த நேரம் தேவையாக இருந்தது. 

அன்று சரளா பாஸ்கர் அறைக்குள் நுழைய,அவனோ பெட்டியுடன் எங்கோ கிளம்புவதற்கான ஆயுதத்தில் இருந்தான். "எங்கே போகிறாய்,"என்ற சரளாவின் குரல் மற்ற எல்லோரையும் அங்கு வரவழைத்தது  . "என்னை மன்னியுங்கள்,என்னால் எவ்வளவு பெரிய தலை குனிவும், அவமானமும்; அதனால் உங்களை விட்டு கண்காண இடம் போய் விடுகிறேன்,அதான் நல்லது " என்றான். "என்னப் பேசுகிறாய்,இப்போது தான் உனக்கு எங்களின்அன்பும் அரவணைப்பும் அதிகம் தேவை. நாங்கள் ஒருவரும் உன்னை தப்பானக் கண்ணோட்டத்தில் பார்கவில்லை;இந்த நோய் எப்படியெல்லாம் பரவக் கூடும் என்ற விழிப்பணர்வு உடையவர்கள். மும்பை போய் இருக்கும் போது, நீயே சொன்னாய் பானிபூரி , பேல்பூரி  எல்லாம் அடிக்கடி சாப்பிட்டேன்  என்று.ஒரு வேளை விற்பவர்களின் விரல் காயங்களினால் கூட வந்திருக்கலாம். சில விஷயங்கள் செய்தியாக படிக்கும் போது நமக்கெல்லாம் இது போல் நடக்க வாய்ப்பே இல்லை என்று தோணும்; அதனால் தான் நமக்கு வரும் போது போராடும் பக்குவம் வருவதில்லை.

எல்லோரும் ஒரு நாள் இந்த உலகை விட்டுப் போக வேண்டியவர்களே! பிறர் சொல்லுக்கும் ஏச்சுக்கும் பயந்து ஓடுவது கோழைத்தனம். உனக்காக வாழு; நமக்கு பணப் பிரச்சனை இல்லை, இனி இருக்கும் காலத்தில் இதைப் பற்றிய விழிப்புணர்வையும்,எதிர்த்துப் போராடும் பக்குவத்தையும் எங்கெலாம்  தேவையோ அங்கு பரப்புவோம். இந்த காலத்தில் சிறு குழந்தைகளுக்கு கூட சர்க்கரைநோய், எய்ட்ஸ் எல்லாம் பாதிக்கிறது. அந்த வயதிற்கே உண்டான விளையாட்டு, உணவு எல்லாம் மறந்து கட்டுப்பாடுடன் இருக்க வேண்டி உள்ளது; அந்தக் குழந்தைகளின் பெற்றோரை நினைத்துப் பார்; இப்படி எல்லோரும் வாழ்கை முடிந்து விட்டது என்று நினைத்தால், போராட்டம், மன தைரியம் போன்ற வார்த்தைகளுக்கு அகராதியல் இடம் இல்லாமலே போய் விடும். சுய இரக்கத்தை ஒதுக்கி விட்டு தைரியமாக எதிர் கொள். நாங்கள் எல்லோரும் உனக்கு பக்க பலமாக இருப்போம்."

சரளாவும் மற்றவர்களும் பேசப் பேச பாஸ்கர் மனதில் உள்ள சஞ்சலங்களும்,வருத்தங்களும் விலகி, போராடும் நம்பிக்கை நுழையத் தொடங்கியது. தன் குடும்பத்தினரை இன்று முழுமையாக
 புரிந்து கொண்டதுடன், அவர்களை நினைத்து மிகவும் பெருமைக் கொண்டான்.

இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைந்தால், ஒரு பாஸ்கர் என்ன, லட்சம் பாஸ்கர் கூட சமூகத்தையும் எந்தவிதமான  நோயையும் தைரியமாக   எதிர் கொள்ள முடியும் !!!

******************



சனி, 23 ஜூலை, 2011

கொஞ்சம் நில்லுங்கள் !!!

இந்தியா என்றாலே எல்லோரும்  நம் கலாச்சாரம், கூட்டுக் குடும்பம், உறவுகளுக்கு மதிப்புக் கொடுத்து அணைத்துச் செல்பவர்கள் என்று தான் பெருமையாக பேசுவார்கள். ஆனால் இன்று அந்த பெருமையும், அடையாளமும் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.முழுமையாக விலகும் முன்பே சுதாரித்துக் கொள்வது தான் பெற்றோர்க்கும், இளைய தலை முறைக்கும் நல்லது. பணப் புழக்கமும், வசதிகளும், தேவைகளும் அதிகமாக அதிகமாக மனித தன்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகிறதோ?

இன்று முதியோர் இல்லங்களும், பெற்றவர்களை பேணுவதை தவிர்க்க நினைக்கும் தலை முறைகளும் பெருகிவிட்டன. இதற்கு எப்போதும் போல் இந்த தலை முறையேயை குறை சொல்லாமல், அவர்கள் கோணத்திலிருந்தும் பார்த்தால் ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம். இந்த நிலைக்கு பெரியவர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களிடம் சுயப் பச்சாதாபமும் வறட்டு பிடிவாதமும், அதிகமாகிக் கொண்டு வருகிறது. நான் தான் கஷ்டப்பட்டு பெற்று,வளர்த்து ஆளாக்கினேன்; அதனால் தங்களுக்குத் தான் உரிமை, எல்லாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இதனால் தானாக கிடைத்த அன்பு, பாசம் எல்லாம் கட்டாயத்தின் பேரில் பெறபடுகிறது.
ஒரு காலக் கட்டம் வரை குழந்தைகளுக்கு பெற்றவர்களின் அரவணைப்பு தேவை; பின் பருவத்திற்கு ஏற்ப, தேவைகள் மாறுபடும் போது அதை உணர்ந்து, பெற்றவர்கள் தள்ளி இருந்து ரசித்து பெருமை பட வேண்டும். குழந்தைகளின் திருமணத்திற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

திருமண புதிதில் அவர்களுக்கு உண்டான space ஐ கொடுத்தால் அன்பும், புரிதலும் சரியாக அமைய வாய்ப்பு உண்டு. ஆரம்பக் கால சரியான புரிதல் தான் வலுவான உறவு பாலம் அமைக்க உதவும். இது சரியாக இருந்தாலே, பிற்காலத்தில் நம்மை ஒதுக்குவர்களோ என்ற அச்சம் எழாது.இன்றைய பொருளாதார சூழ்நிலை காரணமாக இரு பாலரும் வேலைக்கு போக வேண்டிய நிலை, இதனால் பெரியவர்களுக்கு சில சங்கடங்கள்; இரு சாரரும் புரிந்துக் கொண்டால் பிரச்சனை குறைய வாய்ப்பு உண்டு.
பெரியவர்களும் தனக்கென்று ஒரு தொகையை தனியாக வைத்துக் கொள்வது நல்லது. எல்லாவற்றையும் கொடுத்து விட்டு பிற்காலத்தில் வருந்த நேரும் நிலையை தவிர்க்கலாம்.

முதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் சென்று சேவை செய்கிறேன் என்று சொல்வது, இப்போது ரொம்ப நாகரிகமாகி விட்டது. ஆனால் அந்த சேவை மனப்பான்மை வீட்டில் உள்ளவரிடம் வருவதில்லை ஏன்?
என்னதான் மனம் ஒரு காரணம் என்று சொன்னாலும், அந்த உறவுகளால் ஏற்பட்ட மனக் கசப்பு தான் பிரதான காரணமாக இருக்க முடியும்.முன்பின் தெரியாதவர்களால் எந்த பாதிப்பும் இல்லாததால் சேவை செய்ய முடிகிறது; உறவுகளைப் பார்க்கும் போது, ஆஹா, இவர்களால் என்னன்ன கஷ்டங்களும்.பேச்சும் கேட்க வேண்டி இருந்தது, எவ்வளவு துன்பம் அனுபவித்தோம், என்ற கசப்பான நினைவு தான் முன்னே நிற்கும். ஏன் செய்ய வேண்டும் என்று மிக சாதாரண மனிதர்களை போல் எண்ணுகிறார்கள்.
-நண்பர்களே இது தவறான கண்ணோட்டம் அல்லவா? அடுத்த தலைமுறைக்கும் தவறான பாதையை அல்லவா தொடர்ந்து காட்டுகிறோம். முதுமை பருவத்தில் கண்டிப்பாக தவறை உணர்ந்து அன்பிற்கும், அரவணைபிற்கும் ஏங்கி நிற்கும் தருணம். தவறை உணர்ந்தவர்கள் மேதை, அதை மன்னிக்க தெரிந்தவர்கள் மாமேதை என்பார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டு அவரவர்கள் பார்வையை கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே!

உறவுகளின் மதிப்பை, தன்னலமற்ற அன்பும்,புரிந்து கொள்வதனலுமே உயர்த்த முடியும். காளான் போல் முளைத்து வரும் முதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறோமோ இல்லையோ, கமா வைக்காவது முயற்சிசெய்யலாம் அல்லவா?.



ஞாயிறு, 17 ஜூலை, 2011

உச்சக்கட்ட அன்பு

தாரணிக்கும் மூர்த்திக்கும் ,இந்த இரண்டு வாரம்போனதே தெரியவில்லை. மகள் நித்யாவும்,பேரனும் மும்பையிலிருந்து ,விடுமுறைக்கு இங்கு அவர்களுடன் இருந்து விட்டுப் போனது மனதிற்கு மிகவும் சந்தோஷமாவும்,ஆறுதலாகவும் இருந்தது.இருந்தாலும் மூர்த்திக்கு,  "ஐயோ தாரணி மீண்டும் பழையப் புலம்பலை ஆரம்பித்து விடுவாளே"என்று எண்ணிக் கலங்கினான்.

"ச்சேய் "இதே போன கோடை விடுமுறை போது மகள்,மருமகன், பேரனுடன் கழித்த நாட்கள் எவ்வளவு குதுகுலமாகவும்,கொண்டாட்டமாகவும் இருந்தது என்று மூர்த்தி   நினைத்துப் பார்த்தான்.அவர்கள் இருந்த போது தாரணியை கையில் பிடிக்க முடியவில்லை.பேரனுக்கு சரிசமமாக விளையாடி,வேண்டியதை செய்துக் கொடுத்து, தினசரி ஒவ்வொரு இடம் அழைத்துப் போவது என்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள்.அதே நினைப்பில்,இந்த முறையும்,பேரன் முகில் பாட்டியிடம்,"ஏன் பாட்டி எப்போதும் படுத்துண்டே இருக்கே?எனக்கு போர் அடிக்கிறது எப்போதும் போல விளையாடலாம் வா"என்று நிலைமை புரியாமல் கேட்டது வேதனை அளிக்க,தாரணி "கண்ணா,நான் படுத்துண்டே உனக்கு கதைகள்,பாட்டு எல்லாம்  சொல்வேனாம்,நீ என்ன கேட்டாலும் பதில் சொல்கிறேன் சரியா?"என்றாள்.ஆனால் முகில் என்ன சொல்லியும் சமாதனம் ஆகாமல் முரண்டுப்  பிடிக்கத் தான் செய்தான்.

ஒரு வருஷத்திற்கும் மேலாகிறது தாரணி இன்று இருக்கும் இந்த நிலை.இந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருவருமே தவித்தனர்.எவ்வளவு பணம் செலவு செய்யத் தயாராக இருந்தும்,குணப் படுத்த வாய்ப்பே இல்லை என்று தெரிந்த போது மூர்த்தியும்,  ,தாரணியும் மனம் நொறுங்கிப் போனார்கள்.
ஒரே மகள் நித்யாவும் எவ்வளவு நாள் தான் இவர்களுடன் இருக்க முடியும்?அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கு;புகுந்த வீட்டில் நிலைமை புரிந்துக் கொண்டு ஒத்துழைத்தாலும்,எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?.நித்யா இருப்பது ஆறுதலாக இருக்குமே அன்றி தாரணி நோய்க்கு தீர்வாகாது.

தாரணி மிகவும் ஆரோக்கியமான பெண்.ஒரு நாள் கூட தலவலி ஜுரம் என்று படுத்ததில்லை.மனதையும்,உடம்பையும் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பாள்.  எப்போதும் புத்துணர்வுடன் இருப்பாள்.எதையும் பாசிடிவாக    நினைக்கும் குணம். எதற்கும் அதிகம் கலங்க மாட்டாள்.எந்த விஷயமானாலும் பொறுமையாக கையாளுவாள்.                                                                                                    
ஒரு நாள் ஆபீஸ் விட்டு வந்த மூர்த்தி ரொம்ப நேரம் பெல் அடித்தும் கதவு திறக்கவில்லை.தன்னிடம் உள்ள இன்னொரு சாவியைப் போட்டு திறந்து உள்ளே நுழைந்தான்.தாரணியைத் தேடி பெட்ரூம் சென்றுப் பார்த்தப் போது,பேச்சுமுச்சிலாமல் தாரணி  கீழே விழுந்திருக்கும் நிலைப் பார்த்து மனம் பதைபதைத்தான். .தன் அசதியையும் பொருட்படுத்தாமல் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரி சென்றான்.
நிறைய டெஸ்ட் எடுத்தார்கள்; இரண்டு,மூன்று டாக்டர்கள் பரிசோதித்தார்கள்;என்ன பிரயோசனம்,ஒன்றும் புரியவில்லை ;கடைசியல் இடியாய் அந்த செய்தி மனதை தாக்கியது.தாரணி உடைய உள் உறுப்புக்கள் வேலை செய்தாலும்,அவளால் இனி தன் கழுத்துக்கு கீழ்  எந்த உறுப்பையும் அசைக்க முடியாது என்பது தான், இனி காலம் முழுவது படுக்கை இல் தான் வாழ்க்கை என்று முடிவானது..இருவராலுமே இதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.மூர்த்தி தன் சக்தி,உயிர் எல்லாம் தன்னை விட்டுப் போனது போல் நிலை குலைந்தான்.தாரணிக்கு அதிர்ச்சியல் பேச்சே வரவில்லை.
அன்றையிலுருந்து தாரணிக்கு எல்லாமும் அவன் தான் என்றாகிவிட்டான்.வீட்டு  வேலைக்கும்,சமையலுக்கும் ஆள் போட்டான்.தன் கண்மணியான தாரணி உடைய  தேவை அனைத்தும் சலிக்காமல் செய்தான்.பேட்பன் வைப்பது,உடம்பு துடைப்பது,துணி மாற்றுவது,சாப்பாடு கொடுப்பது ,எதிலும் குறை வைக்காமல் அவளை அன்போடு கவனித்தான்.ஆபீஸ் போகாமல் வீட்டில் இருந்தபடி செய்யும் வேலையாக மாற்றிக் கொண்டான்.
.இவர்களை நன்றாக அறிந்தவர்களுக்கு மூர்த்தி செய்வதில் வியப்பு ஒன்றும் ஏற்படாது,
இருவரும் அவ்வளவு நெருக்கமான friendly ஆன ஆதர்ச தம்பதி.மூர்த்தி  எந்த விஷயமானாலும் தாரணியைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான்.இருவருமே அவரவர்களுக்கு உண்டான space  ஐ  மதிக்கத் தெரிந்தவர்கள். சோதனைகளும்,பிரச்சனையும் வரும் போது தாரணி தான், பக்க பலமாக இருந்து ஆலோசனயும் தைரியமும் கொடுத்து வெளி வரக் காரணமாக இருப்பாள்.ஏன்,நடுவில் ஒரு பெரிய பண சிக்கலில் இருந்த போது,சிறியப் பெண்ணாக இருந்த நித்யாவிற்கு கூட அதன் பாதிப்பு தெரியாமல் வளர்த்து,கணவனுக்கும் பேசிப் பேசியே தைரியம் கொடுத்து,ரொம்பவும் உரு துணை ஆக இருந்தாள்.
அப்பேற்பட்ட தாரணி இன் இப்போதைய நிலைமை மிகவும் கொடுமை என்றால்,அதை விடக் கொடுமை,மூர்த்தியை அவள் செய்யச் சொல்லும் விஷயம் தான்.இந்தக் கொடுமையை செய்யச் சொல்லி கடந்த சில மாதமாக அவனை வாட்டுகிறாள்.
"என்னங்க, இப்போ தான் வலை தளத்தில் எல்லாத் தகவலும் இருக்கே,வலி இல்லாத முறையில் எனக்கு இதில் இருந்து விடுதலை கிடைக்க வழி செய்யுங்கள்;இப்படியே இருப்பது கொடுமையிலும் கொடுமைங்க, தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்களேன்" என்றாள்.மூர்த்தி, "ஐயோ,என்ன சொல்ற நீ,என்னால் இது முடியவே முடியாது;எப்படி இவ்வளவு கேவலமா என்னை நினைத்தாய்?நான் என்ன அரக்கனா இப்படி ஒரு கொடுமையை செய்ய"என்று கேட்டு குமுறி அழுதான்.நித்யா இருந்த பத்து நாள்,ஓய்ந்து இருந்த புலம்பல் மீண்டும் தொடங்கியது.
ஒரு விதத்திலும் தன்னால் இனி எந்த உபயோகமும் இல்லை என்ற எண்ணம் தாரணி மனதில் ஆழமாக பதிந்து விட்டது,மூர்த்தியின் நிலைக் கண்டும் மனதிற்குள் புழுங்கி அழுதாள்.இப்பேற்பட்ட கணவனுடன் சந்தோஷமாக நீண்ட நாள் வாழ  முடியாததை எண்ணி எண்ணி வருந்தினாள்.எப்படியேனும் தன் எண்ணத்தை அவர் மூலம் செயல் படுத்த உறுதிப் பூண்டாள்.
"ஏங்க,நீங்க கூட என்னுடைய இந்த  நிலைமையை விரும்புகிறேர்களா?என்னுடைய பரிதாப நிலையையும்,படும் சித்ரவதையையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேர்களா?  இதற்கு தீர்வே கிடையாது என்று தெரிந்து தானே சொல்கிறேன்;என்னைக் கண்டு எல்லோரும் பரிதாப படுகிற இந்த நிலையை நான் வெறுக்கிறேன்.எனக்கு விடுதலை வேண்டும்"என்றாள்.
"ஏன் தாரணி நீ எவ்வளவு விஷயத்தில் எனக்கு தைரியம் சொல்லி,பக்க பலமாகவும் இருந்து, கஷ்டத்தில் இருந்து மீட்டு இருக்காய்?இப்போ திருப்பி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு,அதை ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறாய்?இதுவே உன் நிலைமயில் நான் இருந்தால் இப்படிச் செய்வாயா?உனக்கொரு நியாயம்,எனக்கொரு நியாயமா?"என்றான்,மூர்த்தி.

"ஐயோ,இதுவெல்லாம் வாதத்திற்கு வேண்டுமானால் சொல்லலாம்,வலியும்,வேதனயும்,அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்;மதிப்போடும்,மரியாதையோடும்,வாழ்ந்த எனக்கு,சாவும் அதை மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?".வெறிக் கொண்டு பேசும் தாரணி இன் ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தை அறுப்பது போல் இருந்தது."இங்க பாருங்க, தினமும் என்னை இப்படி பார்ப்பது உங்களுக்கு எவ்வளவுக் கஷ்டத்தை கொடுக்கிறது,என்னக்காக,உங்க சுக துக்கங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உப்புச்சப்பில்லாத வாழ்கையை வாழ்வதை பார்க்கும் போது நான் எவ்வளவு பெரிய கொடுமைக்காரி என்று தோன்றுகிறது",என்றாள்."shutup நீ என்ன சொன்னாலும் என்னால் முடியாதுமா."என்றான்,மூர்த்தி.
அவ்வளவு தான்,அன்று முதல் அவரிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டாள்.ஒரு நாள்,இரண்டு நாள் போனது;அவளது மௌனத்தைக் கண்டு,அப்பாடி ஒரு மாதிரி புரிந்து கொண்டாள் என்று நிம்மதி அடைந்தான்.ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாள் நீடிக்கவில்லை.மூர்த்தி உணவு கொடுக்கும் போதோ,மற்ற பணிவிடை செய்யும் போதோ தாரணிக் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பெருகியது.ஆனால் அவளின் மௌனப் போராட்டம் தொடர்ந்துக்  கொண்டு தான் இருந்தது. மாறுவாள் என்று எதிப்பார்த்தவனுக்கு,அவளின் இந்த மௌனம் முன்னிலும்  விட சித்ரவதையாக இருந்தது.தாரணி இன் போக்கு தாங்க முடியாமல்,ஒருவரிடமும் சொல்ல முடியாமல் ரொம்பவும் தவித்தான். 
அன்று தனியாக அமர்ந்து,கண் மூடி ரொம்ப நேரம் யோசனை செய்தான்.மனதை திடப் படுத்தி ஒரு முடிவுக்கு வந்து தாரணி இடம் போய் நின்றான்."சரி,தாரணி நீ சொன்னதிற்கு சம்மதிக்கிறேன்".என்று உணர்ச்சி எல்லாம் வற்றிப் போய் கூறினான்.அவளுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.ஐயோ,மௌனம் ஒரு தலை சிறந்த ஆயுதம் என்று சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று எண்ணினாள்.
"நீங்க என் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து ஒத்துக் கொண்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்;என் முழு சம்மதத்தோடு செய்வதால் இதில் உங்களுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை.ஆன என்னோடஇன்னொரு  ஆசை,எல்லாம் முடிந்தவுடன்,ஒழுங்காக இருக்கும் உறுப்பை எல்லாம் தானமாக கொடுக்க வேண்டும் சரிங்களா?" என்றாள்.சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான்.
ஆனால்,மனதில் "பைத்தியக்காரப் பெண்ணே,உனக்கு இந்தக் கொடுமையை செய்து விட்டு நான் மட்டும் உலகில் இருப்பேன் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறாய்?"என்று நினைத்தான்.இனியும் தள்ளிப் போடாமல் சீக்கிரமே செயல் படத் தொடங்கினான்.தானும் அவளுடன் சேர்ந்து பயணிக்கப் போவதுப் பற்றி மூச்சு விடவில்லை. 
பத்து நாட்களாக ஒரு மருந்து சீட்டை வைத்து பல கடைகளில் தூக்க மாத்திரை வாங்கினான்.அன்று அந்த மாத்திரை பாட்டில் ஐ கையில் எடுத்தான்.இருவரும் இந்த உலகிலிருந்து விடை பெற போதுமானதாக இருந்தது.கடைசி இரவை எண்ணி இருவரிடமும் பெருத்த அமைதி நிலவியது.தாரணி மகளுடன் போன் இல்  பேச விரும்பினாள்;என்னத்தான் தைரியமாக இருந்தாலும்,நித்யா உடன் பேசப் பேச உணர்ச்சியை கட்டுப் படுத்த முடியாமல் தவித்தாள்.மூர்த்தி அவளிடமிருந்து போன் ஐ வாங்கினான்.நித்யாவிடம் சாதரணமாகப் பேசி,எல்லோர் நலங்களையும் விசாரித்தான்.குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினான்.பிறகு,"நித்யா,கூடிய சீக்கிரமே நீ இங்கு வர வேண்டி இருக்கும் மா," "ஏன் பா,என்ன விஷயம்,ரொம்பவும் முக்கியமா பா,எப்போ வரணும்?நித்யா குரல் காற்றில் ஒலிக்க,கேட்டுக் கொண்டே நவீன் போன் ஐ மெதுவாகக் கிழே வைத்தான்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

விடியலை நோக்கி

அழகான வீட்டின் முன்னாடி இருக்கும் சிறிய தோட்டத்தில் இருந்து பூக்களின் மணம் கலந்த சுகமான காற்று வேதாவின் நாசியைத் தீண்டியது.காலை பரப்பரப்பு ஓய்ந்த இந்த அமைதி, பழக்கம் என்றாலும்,இன்று வேதா மனதில் ஒரு சலிப்பும் வெறுமையும் சூழ்ந்தது.வேதாவின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால் இது நியாயம் என்று தான் தோன்றும்.

வேதா பயந்த சுபாவம் உள்ளப் பெண்.பிறந்த வீட்டில் சுதந்திரம் இல்லாமல், ரொம்பக் கண்டிப்புடன் வளர்ந்தவள்.டிகிரி முடிக்கும் முன்பே 19வயதிலையே அரவிந்த் உடன் திருமணம்.திருமணத்திற்குப் பிறகாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்ததில் விழுந்தது மண். அரவிந்த் பார்க்க நன்றாக இருப்பான்; பெரியப் படிப்பு , நல்ல வேலையும் கூட.ஆனால் ரொம்ப முன்கோபம்,அகம்பாவம்,ஆண் என்ற மமதை இதல்லாம் எப்போதும் அவனுடன் இருப்பவை.

திருமணம் ஆனா நாளிலிருந்து இதோ இன்று வரை, 30வருடமாக வேதாவின் பொழுது 4மணிக்கே ஆரம்பித்துவிடும். அரவிந்துக்கு கடவுள் பக்தி , பூசை இதில் எல்லாம் விருப்பமும், நம்பிக்கையும் அதிகம். விடிக்காலை எழுந்து, ஆபீஸ் போகும் முன்பு 2மணி நேரம் கடவுளிடம் உரையாடி விட்டுத்தான், செல்வான். வேதாவும் பிடிக்கிறதோ இல்லையோ கூடவே எழுந்து எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டும். கூடவே தேவையான சிற்றுண்டியும் தயார் செய்வாள். ஆனால், அரவிந்தோ,தன்னை நம்பி வந்த மனைவி இடம் குறைந்த பட்ச அன்பையோ மதிப்பையோ காட்டாத்தெரியாதவன். இவனுக்கு பூசை சாமி எல்லாம் எதற்கு என்று தோன்றுகிறது.

மனைவி என்பவள் தன் ஆளுமையல் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் வர்கத்தில் அரவிந்தனும் ஒருவன். வேதாவிற்கு என்று ஒரு விருப்பு,வெறுப்போ, பேச்சு சுதந்திரமோ கிடையாது. வேதாவிற்கு பாட்டில் மிகவும் ஈடுபாடு, நன்றாக பாடவும் செய்வாள். கச்சேரி போகும்,கேட்கும் பழக்கமுள்ள அரவிந்த் இது வரை அவளைப் பாடச் சொல்லிக் கேட்டதில்லை. "நீ பாடினால் கதவிடுக்கில் மாட்டிய எலிப் போல் இருக்கு, தயவு செய்து என் முன்னால் பாடதே",என்பான். ஆபீஸ், மற்றும் friends இவர்களிடம் எல்லாம் கலகல என்று பழகுபவன் மனைவியை மட்டும் ஒருஅடிமை போல் தான் நடத்துவான்.வேதாவிற்கு கைவேலை painting எல்லாம் ரொம்ப நன்றகத் தெரியும்.ஆனால்," நீ என்ன கண்காட்சியா வைக்கப் போகிறாய்?" என்பான்.

ஒருவரின் எந்த சொல்லோ, செயலோ, நமக்கு வருத்தமும், கஷ்டமும் தருகிறதோ, அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது என்ற எண்ணம் கொண்டவள் வேதா. எல்லோரிடமும் ரொம்பவும் நட்புடன் அன்புடனும் பழகுபவள். உறவினற்கோ, நண்பர்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ உதவி செய்வதிலும், உடல் நிலை சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கும் செவிலியரைப் போல் துணையாக இருப்பதிலும் முதல் ஆளாக இருப்பாள்.
ஆனால் கணவருடன் இதுவரை ஒரு ஆபீஸ் பார்ட்டியோ, நண்பர்கள் வீடோ போனதில்லை. இப்படி இருந்தும் வேதாவுக்கு கணவனிடத்தில் அன்பு இருக்க தான் செய்தது. இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உண்டு.மற்றவர்கள் அவரைக் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, தனக்கு குழந்தை பாக்கியத்தைக்கொடுத்தாரோ என்று வேதா நினைப்பதுண்டு. இன்று அவன் திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக இருக்கான். அப்பப்போ போனில் பேசுவதோடு சரி.அவனாவது மனைவியை நல்லபடியாக வைத்த்ருக்கானே என்று தோணும். வேதாவும் அவர்களை தொந்தரவு செய்யமாட்டாள்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இவளுக்கென பொறுப்பெல்லாம் முடிந்து,கவலை இல்லாத வாழ்க்கை என்று தான் தோன்றும்.ஆனால் வேதாவிற்கு தான் தெரியும்,ஒரு நாள் கூடதான், தனக்காக வாழ்வில்லை என்று.சாப்பாடு விஷயத்தில் கூட கணவனது விருப்பம் தான்.சரி, வீட்டில்தான் இப்படி என்றால், என்றேனும் அத்திப் பூத்தாற்போல் ஹோட்டல் சென்றால் அங்கும், அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்து விடுவான். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களுக்கு உள்ள மெனோபாஸ் கஷ்டத்திலும், அவனது தேவையையோ சௌகரியத்தியோக் குறைத்துக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் கூட கணவனின் அன்பும்,அனுசரணையும் அவளுக்கு கிடைக்கவில்லை.

கூடப் பிறந்தவர்களும், பெற்றோரும் அரவிந்த் குணம் தெரிந்து கொஞ்சம் ஒதுங்கியே தான் இருப்பார்கள். வேதாவிற்கு தன் கணவன் எப்படி இருந்தாலும், அனுசரித்து போவது தான் நல்லது என்று எண்ணுபவள்.இருந்தும்,மற்ற கணவன்,மனைவியைப் பார்க்கும் போது ஒரு ஏக்கம் வரத் தான் செய்யும்.மனதில் உள்ளதை எல்லாம் ஆதங்கத்துடன் தன் பள்ளித் தோழி தயாவுடன் தான் பகிர்ந்துக் கொள்வாள். அவளுடன் எப்போ பேசினாலும் கணவனிடம் தைரியமாக பேசச் சொல்வதுடன், மனதளவில் வேதாவிற்கு அதற்கு உண்டான பக்குவமும், தைரியமும் வரும்படியான முயற்ச்சியை செய்யத் தவறமாட்டாள்.தயாவிடம் பேசும் போது வரும் தைரியம், கணவனைக் காணும் போது, விளக்கைப் போட்டால் ஓடி மறையும் இருளைப் போல் வேதாவின் தைரியமும் ஓடி மறைந்து விடும்.

 இன்று என்னவோ மனம் ரொம்ப சலிப்படைந்து விட்டதுப் போல் தோன்றியது.இன்னும் கொஞ்ச நாளில் அரவிந்த் ஓய்வு பெற்று விடுவார்.அப்பவும் இதே நிலை தொடரந்தால் தன் மன அழுத்தமே நோயில் தள்ளி விடுமோ என்று அஞ்சினாள். முன்பு மன பலம் இருந்ததோ,இல்லையோ உடல் பலம் இருந்ததால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது.இப்போ மன,உடல் பலம் இரண்டுமே சோந்து விட்டது.அன்புக்கும் அனுசரணைக்கும் ஏங்கியது., இதைக் கணவனும் உணர வேண்டும்என்று விரும்பினாள் .வேதா இனியும் தாமதிக்காமல் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று உணர்ந்தாள்.

தன் உயிர்த் தோழி தயாவிடம் பலவிதமாக கலந்து ஆலோசித்து,என்ன,எப்படி செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தாள். இப்போது மனம் ஒரு ஜான்சி ராணியாக உருவெடுக்கத் தொடங்கியது. இத்தனை வருட மண வாழ்க்கையில் அர்விந்திற்கு தன் மேல் ஒரு துளி அன்பேனும் இருக்கும் என்று நம்பி இந்த முடிவை எடுத்தாள்.நிதானமாக அரவிந்திற்கு, மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதோடு அவனை விட்டு தான் தற்காலிகமாக பிரிந்து இருக்க விரும்புவதயும் தெரியப் படுத்தினாள்.இந்தப் பிரிவு அவனுக்குப் பலதையும் புரிய வைக்கும் என்று நம்பினாள். தான் இல்லாத போது தன் அன்பையும், அன்நோன்னியத்தையும் கணவன் உணர வேண்டும், என்று விரும்பினாள்.நம்பிக்கைத்தான் வாழ்க்கை;அரவிந்த் தன்னை தேடி வரும் நாள் வெகு தூரம் இல்லை ;மீண்டும் ஒரு புது வாழ்க்கையை அரவிந்துடன் தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

மாய வேலை (வலை)

அனிதா திருமணம் முடிந்து துபாய் வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது . அன்பான கணவன் சுரேஷ், 18 மாத குழந்தை அருண் இவர்களுடன் வாழ்கை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அனிதா நாளை விடியலை மிகவும் ஆவலாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். என்றும் போல் அவளை இன்று உறக்கம் ஆட்கொள்ளவில்லை. நாளை எழுந்தவுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை  . மனதிற்குள் அசைப்போட்டாள் .தான் எடுத்திருக்கும் முடிவால் கணவனுக்கும், குழந்தைக்கும் எந்த வித இடைஞ்சலும் வராமல் இருக்க ஆசைப் பட்டாள். எப்போது உறங்கினளோ ? தீடிரென்று 4 மணிக்கு அலாரம் அடிக்க உறகத்திலுருந்து விடுபட்ட அனிதா, அதன் தலையல் பட்டென்று அடித்தாள். அவசரமாக காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு கிச்சனில் நுழைந்தாள். இங்கு பால் காரனுக்கு  காக்க வேண்டிய அவசியம் இல்லை. fridge  லிருந்து பால் எடுத்து காபி குடித்தவுடன் மடமடவென்று சமையலை கவனிக்கத் தொடங்கினாள். சத்தத்தில் எழுந்த சுரேஷ், மனதிற்குள் சிரித்துக்கொண்டான். இவள் எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று கவலைப்பட்டான்.

சமையலை முடித்த அனிதா சுரேஷிடம் வர, மணி காலை 6 .30 ஆனது. ''இன்னுமா தூக்கம்? இன்று தான் முதல் நாள் ஆபீஸ் எனக்கு; நீ கிளம்புபோது என்னையும், அருணை babysiter இடமும் drop பண்ணனும்  சரியா?' 'உன் பேசுக்கு  மறு பேச்சு உண்டா? நீ எல்லாம் தயார் பண்ணு, நான் குளித்து விட்டு வருகிறேன் " என்றான். அனிதா அவனுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தூங்கும் குழந்தை இடம் வந்தாள். தூக்கத்திலே பாலைக் கொடுத்துவிட்டு ஈரமாக இருத்த டயபர் ஐ மாற்றி டிரஸ் யும் மாற்றினாள். இதற்குள் சுரேஷ் ரெடி ஆகிவிட்டான் ."சுரேஷ், உன்னுடைய பிரேக்.பாஸ்ட் ரெடி ,சாப்பிட்டுவிட்டு, அருண் க்கு வேண்டியதை அந்த பாக்ஸ் இல் பாக் பண்ணிவிடு ப்ளீஸ், நான் இதோ ரெடி ஆகி விடுகிறேன் " என்று ரூமுக்குள் புகுந்தாள். நேற்றே அயன் பண்ணி இருந்த காட்டன் புடவைக்கு மேட்ச் ஆக மற்ற இத்யாதிகளையும் அணிந்து வெளியே வரும் போது அருண் இன்னமும் சுரேஷ் தோளில் தூங்கிக் கொண்டிருந்தான். "அனிதா,  இப்பிடியே கொண்டு விட்டால் எழுந்ததும் ரொம்பவும் அமக்களம் பண்ணுவானே  " அதெல்லாம் போகப்போக சரியாகிவிடும் ,சுரேஷ் " என்றபடி சமைத்ததை ஹாட்.பாட் இல் வைத்துவிட்டு வர மணி 7.45 ஆகிவிட்டது . சுரேஷ் அவர்களை drop செய்துவிட்டு ஆபீஸ் வந்து  சேர 8.30ஆகிவிட்டது .

இந்தியாவில் கல்யாணத்திற்கு முன்னால் ஒரு வருஷம் அம்மா எல்லாம் பார்த்துக் கொண்டதால் அனிதா வால் ஜாலியாக வேலைக்குப் போய்வர முடிந்தது. இங்கு வந்த புதிதில் பார்ட்டி, டின்னெர், அரட்டை என்று பொழுது போனது. அருணும் வந்து விட்டதால் பொழுது சரியாக இருந்தது. இருவருக்கும் அருண் மேல் ரொம்ப ஆசை. அருண் சரியான அம்மா செல்லம் .இந்த routine  கொஞ்சம் போர் அடிக்க, அப்பப்போ எட்டிப்பார்க்கும், வேலைக்குப் போகும் ஆசை அனிதாவிற்கு இப்போ அதிகமானது. கணவன் எவ்ளவோ சொல்லிப் பார்த்தான் , "அனி, நீயே  உன் friends பற்றி குறை சொல்வாய், வீட்டையும் குழந்தையும் விட்டு விட்டு அப்படி என்ன பொல்லாத வேலை என்று ", இல்லை ,சுரேஷ், I can manage " என்றாள். அதற்கு மேல் அவன் கட்டாயப்படுதவிலை . எப்படியோ இன்று அனிதா வேலைக்கு போகும் முதல் நாள்.

ஆபீஸ் போன அனிதாவிற்கு அருணைப் பற்றித்தான் சிந்தனை. எழுந்ததும் என்ன கலாட்டா பண்ணுகிறனோ, சுரேஷ் ஒழுங்காக breakfast  வைத்தாரா என்று.உடனை சுரேஷ்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, அருணை மறக்காமல் 1 .30 மணிக்கு pick up செய்ய சொல்லி, "நானும் ஒண்ணரை மணிக்கு வந்துடுவேன் " என்றாள். "சரி அனி, நான் இப்போ ரொம்ப பிஸி , சும்மா தொந்தரவு பண்ணாதே" என்று போன் ஐ வைத்தான். "சீய் இந்த ஆம்பிளைகளே இப்படித்தான், என்னடா, இன்று wife க்கு முதல் நாள் ஆபீஸ் இல்லையா ? எப்படி இருக்கு , என்ன என்று ஒரு வார்த்தைக் கேட்டால் என்னவாம் ?" என்று நினைத்தாள்.

மதியம் லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்த போது, அருண் அவளைப் பார்த்து ஒரேடியாக  அழுது கட்டிக்கொண்டது. அவனை சமாதானப் படுத்தி தூங்க வைத்து,  சாப்பிட்டு எழுந்த போது மணி 3ஐ தொட்டது. அவசரமாக துணியை வாஷிங் மிசின்இல் போட்டுவிட்டு மீண்டும் ஆபீஸ் கிளம்ப தயாரானாள்.

 இரண்டு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. பாவம் அருண்! புது சூழ் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அன்று ஆபீஸ் விட்டு வரும் போதே அருண் உடம்பு சரி இல்லாததைக் கவனித்தாள். காலையில்  எழுந்தபோது நல்ல ஜுரம். அனிதாவால் லீவ் எடுக்க முடியாது. "சுரேஷ் இன்னிக்கு மட்டும் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்துக்கொள்ளேன்". என்றாள். சுரேஷ், "இன்று எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு;
வேண்டுமானால் மருந்து, மாத்திரை எல்லாம் பேபி சிட்டர் இடம் கொடுத்து  விடுவோம்; சாயங்காலம் டாக்டர் இடம் போகலாம் ." என்றான். அன்று எதோ சமைத்து விட்டு அருண்ணை பேபி சிட்டர் இடம் விட்டு ஆபீஸ் சென்றாள். ஜுரம் சீக்கிரமே குறைந்தாலும் , அவன் சரியாக சாபிடாதது வருத்தமாக இருந்தது . இப்போதெல்லாம் குழந்தையுடன் விளையாடுவதற்கோ , கொஞ்சுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை , என்று அனிதா ரொம்பவும் வருத்தப்பட்டாள். அதுவே அவனுக்கு ஏக்கமாக கூட இருக்கும். இந்த மாதிரி  பல சிந்தனை மனதில் ஓட சரியாக தூங்க கூட முடியவில்லை அனிதாவால்.

அன்று  வெள்ளிக்கிழமை வீட்டில் friends ஐ dinner க்கு invite  பண்ணி இருந்தார்கள். காலையிலுருந்து வீட்டை ஒழுங்குப் படுத்தி பாத்ரூம் கிளீன் பண்ணி எல்லாவற்றயும் , சரிப்படுத்தி வைத்தாள். பிறகு டின்னெர் க்கு வேண்டியதை தயாரிக்க ரொம்பவும் திண்டாடிவிட்டாள் , "அனி, நான் cooking ல் ஹெல்ப் பண்ணட்டுமா ? " வேண்டாம் , நீ அருணை ப் பார்த்துக்கொள் , அதுவே பெரிசு" என்றாள். ஒரு மாதிரி எல்லா வேலையும் முடித்து விட்டு, அருணுக்கும் வேண்டியதை கவனித்து guest ஐ வரவேற்கத் தயாரானாள்.எல்லோரும் வந்த பின்பு kitchen இல் வேலை செய்வது , அனிதாக்கு பிடிக்காத விஷயம். எட்டு மணிக்கு ஒரு மாதிரி எல்லோரும் வந்து சேர்ந்தார்கள் . ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வதும், இல்லாத ஒருவரின் தலையை உருட்டுவதும் ஆக நேரம் போய்க்கொண்டு இருந்தது .

"என்ன ,அனிதா , வேலைக்கு போக ஆரம்பித்தப் பிறகு என்னன்ன புதுசா வாங்கினாய் ?' (ஆமாம் ,இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை ,அதற்குள்.) என்ன ரொம்ப பிஸி யா ,எதாவது உதவி வேணுமா ?"  இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கையோ போயிற்று . அனிதா மணியைப் பார்த்தாள். "my god  ! நாளைக்கு ஆபீஸ் இருக்கே ". அருண் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தான் .எல்லா லேடீஸ் கும் பொறுமை போய் சாப்பிடலாமா என்றார்கள் . "இன்னுமா இவர்கள் ட்ரிங்க்ஸ் முடியவில்லை , விட்டாப் போரும், காணாததை, கண்ட மாதரி, ஓயமாட்டார்கள்" என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கூச்சலும் கும்மாளமும் ஆக டின்னெர் முடிந்தது.

எல்லோரும் போனப் பிறகு வீடு இருந்த நிலையைப் பார்த்து அனிதாவிற்கு பக்கென்றது . எல்லாம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டது போட்டப்படி தூங்கப் போய்விட்டாள். காலயில் எழந்ததும் அனிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சுரேஷ்க்கும் ஒரே எரிச்சலாக இருந்தது ."என்ன அனி எப்படி சமாளிக்கப் போகிறோம் " இதற்குத்தான் ஹவுஸ் பாய்க்கு ஏற்பாடு பண்ணு என்று சொன்னேன் , நீ எங்கே கவனிச்ச!" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா? ஓரளவு தான் என்னால் உதவி பண்ண முடியும் , என்னோடஆபீஸ் வேலை ரொம்பவும்  பொறுப்பானது,   தவிர  டென்ஷன்னும் ஜாஸ்தி ; இதையல்லாம் யோசித்துதான் நான் ஆரம்பம்தில் இப்போ உனக்கு வேலை வேண்டாம் என்றேன் ". சரியான சமயம் பார்த்து பிடித்தான் ." ஆமாம் , உனக்கு எப்போவும் இஷ்டம் இல்லை அதான்".

"இல்லை அனி, நீயும் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து நிறைய விஷயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை . அருணின் routine ரொம்பவே மாறிவிட்டது. அவன் பேபி சிட்டர் இடமும் சந்தோஷமாக இல்லை .வீட்டில் நாம் தான் நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு இருப்போமா ?, பாதி நாள் வெளியில்  தான்; அருணை தான் உன்னால் ஒழுங்காக கவனிக்க முடிந்ததா ?  நீ இல்லாமல் அவன் எவ்வளவு தவிக்கிறான் தெரியுமா ?அவசியமில்லாமல் நீயாய் தேடிக்கொண்ட நிலைமை இது ,sorry to say this .எனக்கு ஆபீஸ்க்கு நேரமாகிறது, bye " என்று கிளம்பிவிட்டான்.

அனிதா முடித்த மட்டும் வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு. ஆபீஸ் கிளம்பினாள். மாலை வீடு வரும் போது ஒரு தீர்மானத்தோடு வந்தாள். அன்றிரவு சுரேஷ் அவளருகில் வந்து தோள் மேல் கை வைத்து ,"சாரி அனி காலையில் நான் அப்படிபேசி  இருக்க கூடாது ; ஆனால் இந்த கொஞ்ச நாளில் உன்னையும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை . இப்படி எல்லோரையும் வருத்திக்  கொண்டு , போலி கௌரவதிற்காக ,வேலைக்குப் போகும் அவசியம் நமக்கு இல்லை; இன்னும் 2 ,3  வருஷத்தில் அருண் கொஞ்சம் பெரியவனாகி விடுவான் , அப்போ இது பற்றி யோசிக்கலாம் . வீட்டிலையே உன்னை பிஸி ஆக வைத்துக் கொள்ள நிறைய வழி இருக்கு . இந்த வயதில் அவனுடன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய் ?".தான் மனதில் நினைத்ததை சுரேஷ் அப்படியே கூற ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்." என்ன அனி , கோவமா ?" "இல்லை சுரேஷ் , நான் தான் கொஞ்சம் அவசர பட்டு விட்டேன் . என் ஆசையை கொஞ்சம் தள்ளிப் போடுவதில் தப்பில்லை .இன்னும் ஒரு வாரம் தான், பாரேன் நான் பழைய அனிதாவாக மாறிடுவேன்." ."தட்ஸ் குட் " என்றான்.

இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசியதால் பிரச்சனை லேசாகியது.  மயக்கும் மாய வேலைக்கு (வலை) விடுதலைக் கொடுக்க நிம்மதியாக உறங்கினார்கள் .

*************************************