இன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த நாடானாலும் சரி, நம் போல் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடும் விதிவிலக்கல்ல; இதற்கு காரணம் அந்தந்த சமுதாயத்தைத் தான் கூற முடியும். சமுதாயம் என்பது தனிப் பட்ட அமைப்பு அல்ல; அங்கு வாழும் மக்களைத் தான் குறிக்கும். நல்லதிர்கான பலனை அனுபவிப்பது போல் சமுக விரோத செயலை தடுப்பதற்கான பொறுப்பும் அங்குள்ள மக்களின் கையில் தான் உள்ளது. உதாரணமாக இன்று நம் நாட்டை எடுத்துக் கொள்வோம்; சமுக விரோத செயல்களோடு, கொலை, கொள்ளை கற்பழிப்பு, திருட்டு போன்ற மனிதாபமற்ற செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது .அதுவும் இதில் அதிகம் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே என்று அறியும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதற்கு பணத்தேவை அதிகரித்திருப்பது ஒரு காரணமாக கூறப் பட்டாலும், இன்னொருக் கோணத்தையும் பார்க்க வேண்டி உள்ளது; குறிப்பாக நம் இந்தியாவை பொறுத்த வரை .
முன்பும் நம் நாட்டை பொறுத்தவரை இத் தகைய செயல்கள் குறைந்த விழுக்காடே இருந்து வந்தது; அதுவும் வறுமையில் வாடுபவர்களாலும், பணத்தாசையில் இருந்தவர்களால் மட்டுமே அதிகம் நடத்தப் பட்டு வந்தது. ஆனால் இப்போது படித்தவர்களும் ,நல்ல நிலையில் இருப்பவர்களும் கூட இச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மூளையை நல்ல வழிப் படுத்தாமல் குறுக்கு வழிலும் பிறரைக் காயப் படுத்தியும் குறுகியக் காலத்தில் முன்னுக்கு வரவே ஆர்வமாக இருக்கின்றனர். அது மாதிரி செய்வதில் ஒரு குற்ற உணர்வு கூட வருவதில்லை. இதன் காரணம் குழந்தை வளர்ப்பில் ஒரு பெண்ணின் அதாவது தாய்மையின் பங்கு குறைந்து வருவதனால் கூட இருக்கலாம்.ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் தாய் என்பவளின் பங்கு மிகவும் அவசியம் என்பது எனது தாழ்மையானக் கருத்து. சமுதாயம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஒரு மனிதனை ஒழுக்கமான நேர்மையான மதிப்புடையவனாக அங்கீகரிக்க கூடிய தகுதியை தாயின் வளர்ப்பு முறை பெற்று தர முடியும். இன்று தாயன்பு முழுவதும் ஒரு சேரக் கிடைக்காமல் ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. படிப்பு, வேலை என்று பொறுப்புக்களை பெருக்கிக் கொண்டதால் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது தான் வருதத்திற்குரியது. பெண்களின் படிப்பிற்கு முன்பு அதிக முக்கியத்துவம் இருந்ததில்லை; ஆனால் இப்போது அதிகம் படித்து பல முன்னேற்றங்களை காண்பது உண்மையிலே பெருமை பட வேண்டிய ஒன்று.
அதேசமயம், படித்தால் கண்டிப்பாக வேலைப் பார்க்க வேண்டும், இல்லை என்றால் எல்லாமே வீண் என்று நினைக்கும் பிடிவாத மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்;படிப்பு என்பது அறிவை விருத்தி செய்துக் கொள்ளவும்,சரியானக் கோணத்தில் அணுகவும் ,மனப் பக்குவத்தை பெறவும் துணை புரிகிறது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பில் நம் நாட்டை பொறுத்த வரை பெரும் பங்கு அம்மாவிற்கு தான்; நாம் ;தந்தையை விட தாய்க்கு தான் அதிக மதிப்பும் மரியாதையும் அளித்து வருகிறோம்; தந்தையால் சீர் கெட்டக் கெடுக்கப் பட்டக் குழந்தைகளை பற்றிக் கூட கேள்வி பட்டிருக்கோம்; பார்த்திருக்கிறோம்; ஆனால் தாயால் சீர்கெட்ட குழந்தைகளை பற்றிக் கேள்விக் கூட பட முடியாது; பெண்களுக்கு தாய்மை என்பது இயற்கையே தந்த வரம்; எல்லாக் குழந்தைக்கும் முதல் ஆசான் தாய் தான். குழந்தைக் கருவில் இருக்கும் போதே ஆரம்பிக்கும் உன்னதமான உறவு இது என்றால் மிகையாகது.
தாய்மை அடைந்த பெண்ணின் எண்ணங்கள்,செயல்பாடு எல்லாம் அப்போதிலிருந்தே வயிற்றில் இருக்கும் சிசுவுடன் பரிமாற்றம் பெறத் தொடங்குகிறது. நல்ல மனிதனின் தொடக்கமும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. உள்ளமும் செயலும் சந்தோஷமாக இருப்பதின் பிரதிபலிப்பை குழந்தையிடம் காண முடியும். தாய்மைக் காலமும், பிறந்த பின் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை தாயின்அருகாமையும், அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு கண்டிப்பாகத் தேவை. அது தான் நல்ல மனிதனாக உருவெடுக்க துணை புரியும் பலமான அஸ்திவாரம். ஆனால் இன்றைய பெண்கள் வேலைக்கு போகும் கட்டாயத்தால் எந்நேரமும் வேலைபளு, மன அழுத்தம்,பரபரப்பு,கஷ்ட்டங்கள் என்றே இருப்பதால் தாய்மையை சரியாக சந்தோஷமாக அனுபவிக்க கூட முடிவதில்லை; வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பிறந்த பிறகும் அதற்கான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரு ஆயாவை அமர்த்தி விட்டால் பொறுப்பு தீர்ந்தது என்று நினைக்கிறார்கள்; சம்பளத்திற்கு வேலை பார்பவர்களிடம் இருந்து உண்மையான அன்பும்,அரவணைப்பும் எப்படிக் கிடைக்கும்? குழந்தைகளுக்கு அந்தந்த வயதில்தாயின் மூலம் கிடைக்க வேண்டியது ,காலத்தின் கட்டாயம் என்ற பெயரில் மறுக்க படுவது நியாயமில்லை; தேவைகளும் வசதிகளும் நாமாகவே ஏற்படுத்திக் கொண்டது தான்; எப்போது எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்; ஏன் அந்தக் காலத்தில் 4,5 குழந்தைகள் இருந்தும் கூட நல்ல ஆரோக்கியமான ,வசதியையும் கொடுத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வளர்க்கவில்லையா ?அப்போது ஒரே வீடாக , மற்ற எரிபொருள், வாகன,மின்சார ,உணவு எல்லாம் ஒன்றாக பொதுவாக இருந்தது. ஆனால் இன்று குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் தனித் தனி வீடு,வாகனம் என்று எல்லாம் பிரிக்கப் பட்டுவிட்டது; அது தான் தேவை கூடுகிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த பட்சம் குழந்தைகள் வளர்பதில்லாவது பெண்கள் தங்கள் பொறுப்பு எத்தகையது என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பிட்டக் காலம் வரை தாயின் அரவணைப்பு அவசியம். ஒரு தாயால் தான் அன்பு நேர்மை உறவுகளின் மேன்மை ஏன் எல்லாவற்றையும் சரியானப் பார்வையில் புரிய வைத்து வளர்க முடியும். சில ஆண்கள் விதி விலக்காக இருக்கலாம். அதையே உதாரணமாகக் கொள்ள முடியாது. நல்ல சமுதாயம் உருவாவது இளங்குருத்துக்களின் கைகளில் தான் இருக்கு; இளங்குருத்துக்களை நல்ல விதமாக உருவாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கு என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்காக குறுகிய காலத்திற்கு சில தியாகங்களை செய்வதில் தவறில்லை. இப்போதைய இளைய சமுதாயத்தின் விரும்பத்தகாத சில நடவடிக்கைகளின் காரணம் சிறு வயதின் வளர்ப்பு முறையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்; அதைக் கருத்தில் கொண்டு பெண்கள் குழந்தை வளர்ப்பதில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்க துணை புரிய வேண்டும்.