அந்த பிரபலமான விளையாட்டு வீரரின் மகன் இறந்த செய்தியைக் கேட்டவுடன் மனம் மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தது. ஆனால், அதே சமயம் அதற்கான காரணம் அறிந்த போது பெற்றோர்களின் பொறுப்பற்றத் தன்மையை நினைத்து கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
மேல்தட்டு மக்களிடம், முக்கியமான தினமோ, அல்லது பிறந்த தினதிற்கோ விலை உயர்ந்த பரிசு வழங்குவது என்பது மிகவும் சர்வ சாதரணமாக நடக்கும் விஷயம் என்பதை மறுபதற்கில்லை. பொதுவாக பரிசுகள் அவரவர்களது status syimball ஐ பறைசாற்றும் வண்ணமே இருக்கும். அது அவர்களுக்கு ஏற்றதா, தகுதி உள்ளதா, இல்லைத் தேவையா என்பது பற்றி யோசிப்பதில்லை. மேற் கூறப் பட்ட சம்பவமும் அதற்கான ஒரு உதாரணமே! தம்மிடம் இருக்கும் செல்வம், குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற தான் என்ற பாச எண்ணம் அவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது.
ஓட்டுவதற்கான அடிப்படை உரிமம் கூட இல்லாதவர்க்கு, இத்தகைய வண்டியை பரிசாக அளிக்கும் முன், யோசிக்காதது யார் தவறு?
கொடுத்த பிறகேனும், அதற்கான பாதுகாப்பையும் தேவையையும் கவனிக்காமல் இருந்தது பெற்றோர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது. குழந்தைகள் செய்யும் வயதிற்கு மீறிய, சில விஷயங்களை வேண்டுமானால் நாம் பெருமையாகப் பேசலாம். ஆனால் இத்தகைய சில செயல்களை ஆதரிப்பதால், இம்மாதிரி பெரிய இழப்புகளையும் சந்திக்க வேண்டி உள்ளது.
இனி பெற்றோர்கள் சில விஷயங்களில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.குழந்தைகளின் ஆசையையும்,தேவையையும் பூர்த்தி செய்வதில் கண்மூடித்தனம் வேண்டாம். பணத்தின் அருமை, பொருள்களின் தேவை எல்லாம் அவர்களும் உணரும் வண்ணம் பெற்றோர்களின் அணுகுமுறை இருத்தல் நலம். எதையும் சுலபமாக பெற முடியும் என்ற எண்ணத்தை வளர விட்டால் எதிர் காலத்தில் உழைப்பு , கடின முயற்சி போன்றவற்றின் அவசியத்தை உணராமலே போக வாய்ப்பு உண்டு. இனியேனும் கொஞ்சம் விழிப்போடு இருப்போமாக!!!