செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கொலைக்கு ஒரு லைசன்சா ??!!

இன்று தமிழ் நாடு முழுவதும் மூவரின் தூக்குத் தண்டனையையை ரத்து  செய்யக் கோரி போராட்டங்கள் நடை பெறுகிறது. பல நாடுகளில் தூக்குத் தண்டனையை முற்றிலும் ஒழித்து விட்டார்கள். ஆனால்,இந்தியா, அமெரிக்க போன்ற சில நாடுகளில் இன்றும் நடைமுறையில் இருப்பது தான் வேதனையை அளிக்கிறது. அஹிம்சைக்கு பேர் பெற்ற நம் நாட்டில் இத்தண்டனை நடைமுறையில் இருப்பது கொஞ்சமும் பொருந்தாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகை கொலை தான்! என்ன உரிமம் பெற்று செய்வது! அவ்வளவுதான். 

தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் அரசாங்கம் ஏன், கருணைக் கொலையையோ தற்கொலையையோ ஆதரிக்காமல் சட்டத்திற்கு விரோதம் என்று வழக்கு போடுகிறது. ஒரே விஷயத்தில் இரு விதமாக நடப்பது முரண்பாடு இல்லையா! அவரவர் கோணத்தில் பார்த்தால், சொந்த வாழ்க்கையைப் பற்றி முடிவு எடுக்க அவர்களுக்குத் தான் அதிக உரிமை உண்டு. இதில் அரசாங்கம் எப்படி தலை இட முடியும்? 

பொருளாதரத்தில் பின்தங்கியும், பணமின்மையாலும்,  தீராத நோயினாலும் தினம் தினம் போராடிக் கொண்டிருப்பவர்கள் கருணைக் கொலையைப் பற்றி நினைப்பதில் என்ன தவறு?  அவர்களிடம் அறிவுரைகளோ. நடந்துக் கொள்ள வேண்டிய முறைகளையோ சொல்வதால், பெரிய நன்மை ஒன்றும் ஏற்படப் போவதில்லை; அவர்களின் போராட்டமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். இருந்தும் கருணைக் கொலையை அனுமதிக்கிரோமா? இல்லையே!!

வாழ்க்கையை வெறுத்து தற்கொலை வரை போக நினைப்பது கோழைத்தனம் என்று சொல்வது, கேட்க  வேண்டுமானால் சரி என்றுத் தோணலாம். ஆனால் அந்த முடிவு எடுக்க உண்மையிலே மிகவும் தைரியம் தான் வேண்டும்; அந்த நிலைக்கு ஒருவர் தள்ளப் பட்டால் அவரது வாழ்க்கை எப்பேர் பட்ட மோசமான சுழலில் இருந்திருக்கும் என்பதை நினைக்க வேண்டும். இவர்களுக்கும் சரியான ஆலோசனையும் மனத் தைரியமும் அளிக்க நிறைய அமைப்புகளும், நிறுவனங்களும் உள்ளன. இம்மாதரி சுழலில் இருந்து வெளி வரவும் உதவி புரிகின்றன. தற்கொலையை எவரும் ஊக்குவைப்பதில்லை.

அது போல் எப்பேர்பட்ட குற்றத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. எந்த மாதிரி தவறு புரிந்திருந்தாலும். ஒரு உயிரை எடுக்க எவருக்குமே உரிமை இல்லை. உயிரை
எடுக்க கூடிய குற்றத்தின் அளவு கோல் இது தான் என்று எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும்?  தூக்குத் தண்டனையை தவிர்த்து ,வேறு முறையில் தீர்வு காண முயல வேண்டும். இத் தண்டனையால் குற்றங்கள் குறைய வாயப்பு உண்டு என்று சிலர் கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. தண்டனைகள்  திருந்தவும், தவறை உணரும் வண்ணம் தான் இருக்க வேண்டுமே  அன்றி வாழ்க்கையை அழிக்கும் படி இருத்தல் கூடாது.


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

எரியும் பிரச்சினை

இன்று இந்தியாவின் ஜனத் தொகை எவ்வளவு பெருகி இருக்கிறதோ அதே அளவு வாகனங்களும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இன்று ஒருவரின் வாழ்க்கைத் தரம் அவர்களிடம் உள்ள வாகனங்களின்  அடிப்படையில் பார்க்கப் படுவதென்றால் மிகையாகது. உலகச் சந்தையில் வேண்டுமானால், எரிப்பொருளின் விலையில் ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஆனால் வளரும் நாடான நம் இந்தியாவில் எந்த அத்யாவசப் பொருட்களின் விலையிலும் எரிபொருள்  விலை உட்பட, இறக்கத்தைக் காண்பது என்பது அரிது.

பெட்ரோல் விலையைக் குறைப்பது என்பது நம் கையில் இல்லை. ஆனால்அதை எப்படி சிக்கனமாகப் பயன் படுத்தி, சேமிப்பை அதிகரிப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. சில வழி முறைகளைக் கடைப் பிடித்தால், சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது; போக்குவரத்து நெரிசலையும் குறைக்க வாய்ப்பு உண்டு. விலை ஏற்றத்தை நினைத்து ஒரு புறம் புலம்புவதோடு நிற்காமல், அது  நம் வாழ்க்கையை அதிகம்  பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.   மக்களுக்கு பயன் படும் பொது  வாகனக்களைத் தவிர்த்து, முதலில் அவரவர் வீடுகளில் இருந்து இதற்கான முயற்சியை  தொடங்க முன் வர வேண்டும்.

இதில் பெரும் பங்கு நடு மேல்தட்டு, மேல்தட்டுமக்கள், மிகவும் பணக்காரர்கள் இவர்கள் அணுகுமுறையில் தான் இருக்கிறது .

1. இம்மாதிரி வீடுகளில் பொதுவாக அவரவர் சௌகரியத்திற்கு, வசதி இருப்பதால், தனித் தனிக் கார்கள் வைத்திருப்பார்கள். இதைத் தவிர்த்து ஒரு வாகனம் இருந்தால் எரி செலவு குறைய வாய்ப்பு உண்டு;  திருமணம், பொது நிகழ்ச்சி ,விழா போன்றவற்கு குடும்பத்துடன் ஒன்றாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.

2. இரு சக்கர வாகனம் அதிகம் புழக்கத்தில் உள்ளது. நடை பழகும் முறையே மக்கள் அடியோடு மறந்து விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எரிபொருள் இன்றி இயங்கும் சைக்கிள், என்பதின் அருமையை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்து கொண்டு, உபயோகிக்கத் தொடங்க வேண்டும். அதனால், உடல் நலத்திற்கு நல்லது மட்டுமல்லாமல், சுற்றுப்புற சூழலுக்கும், கேடு விளையாது.

3. இன்று பல மென் பொருள் நிறுவங்களும், கால்சென்டர்களும், தங்களிடம் பணிப்புரிபவர்களை ,pick up, drop செய்ய நிறைய வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்; இதற்காக அதிக ஓட்டுனர் அமர்த்தல், எரிப்பொருள் செலவு,கால விரயம், மற்ற பிரச்சனை வரும் பொது ஆகும் செலவு எல்லாவற்றையும் பார்க்கும் போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஆகும் செலவை, அந்தந்த அலுவலகம், அருகிலேயே  5 கி.மி. தொலைவில் வீடு வசதி அமைத்துக் கொடுத்தால், மேற் கூறியப் பிரச்னையை சமாளித்து, போக்கு வரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உண்டு.

4. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பெட்ரோல்,டிசல் அல்லாத, சுற்று சூழலையும் பாதிக்கா வண்ணம், வாகனங்கள் செயல்படவேண்டும். உதரணமாக சூரிய சக்தி, battery  கொண்டு இயங்கும் வாகனங்கள் உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு உண்டான ஆய்வை தீவிர படுத்த வேண்டும். இதனை தனியார் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து செயல் படுத்த வேண்டும். 


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்னா அச(தரா )ரே !!!

இன்று இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் குரல் லஞ்ச, ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே  உடன் கை கோர்த்திருப்பது வரவேற்க பட வேண்டியது. லோக்பால் மசோதாவின் முழு விவரம் எல்லோராலும் அறியப் படாமல் இருக்கலாம்; ஆனால் அது லஞ்சஊழலுக்கு எதிரான மசோதா என்ற விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கு இல்லை. 64 வருடங்களுக்கு முன்னால் அந்நியர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற அண்ணல் தலைமையில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம்.; இன்று அன்னா தலைமையில் லஞ்ச ஊழலுக்கு எதிரானப் போராட்டத்திலும் வெற்றிப் பெறுவோம் .அதற்கு எவ்வளவு  காலம் ஆனாலும் தளராமல், சாதிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் இளையத் தலைமுறையும் அதிக ஈடுபாடும், அக்கறையும் கொண்டு செயல் படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த ஆதரவு ஒரு புறம் அதிகரித்தாலும், இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டும். ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் துணைப் போகிறவர்கள் இப்போதேனும் தவறை உணர்ந்து இப் போராட்டத்தில் கைக் கோர்க்க வேண்டும். அதுமட்டும் அல்ல, லோக்பால் மசோதா சட்டத்தை அமல் படுத்துவதால் மட்டுமே லஞ்ச, ஊழலை முடிவிற்கு கொண்டு வர முடியாது; சிறு துளி பெரு வெள்ளம் போல் முதலில் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அந்த உறுதி வர வேண்டும்.

இன்றைய தலைமுறைக்கு, ஒரு காந்தியையோ, விவேகாந்தரையோ போன்ற தலைவர் வழி நடத்த முன்வந்தால் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இதற்கு இன்று அன்னா அசாரேக்கு கிடைத்திருக்கும் ஆதரவே சாட்சியாகும்; அடுத்த தலைமுறையனும் லஞ்ச, ஊழல் இல்லாத நல்ல சூழலில் வாழும் வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்; அதற்கான விதையை இப்போதே விதைக்க வேண்டும்; மரம் நடுபவனே அதன் பலனையும் அனுபவிக்க முடியாது ; அதே நிலைதான் நமக்கும். நல்லப் பலனைத் தருமே ஆனால் அதற்குண்டான முயற்சியையும், உழைப்பையும் கொடுப்பதில் தவறே இல்லை.

இன்னொன்றையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; எந்தப் பிரச்சனைக்கும்,உண்ணாவிரதம் மட்டுமே தீர்வாகாது. நாட்டை நல்ல முறையில் வழி நடத்திச் செல்ல இம்மாதிரி தலைவர்களின் ஆதரவு, துணை   மிகவும் அவசியம். அதற்காக தங்கள் உடல் நலத்தை பேணுவது மிகவும் முக்கியம். இதை மனதில் கொண்டு, போரட்டங்களை வேறு வழிக் கொண்டு கையாள வேண்டும்; அதில் வெற்றியும் காண வேண்டும்.


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

இதுவல்லவோ !!!

நந்தினிக்கு தன் கடமையை சரியாக முடித்த திருப்தியும், சந்தோஷமும் ஒரு நிறைவை தந்தது. இருந்தாலும் மனதில் ஒரு வெறுமை படர்வதை அவளால் மறுக்க முடியவில்லை. தன் ஒரே மகன் சுமனுக்கும்,  சுதாவிற்கும் திருமணம் முடிந்து இன்று தான் அவர்கள் தங்கள் தேனிலவிற்கு கிளம்பிச் சென்றார்கள். கல்யாண அமக்களத்தில் இருந்த வீடு இன்று மிகவும் அமைதியாக இருந்தது. அதுவே நந்தினிக்கு ஒரு பயம் கலந்த வெறுமையை உணர்த்தியது. இனி தன் வாழ்க்கை பயணம் எப்படித் தொடரும் என்பதை எண்ணி சிறு கவலையும் தயக்கமும் சூழ்ந்தது. எல்லாம் கொஞ்ச நேரம் தான்; பின் வழக்கம் போல் வேண்டாத சிந்தனையை ஒதுக்கி விட்டு தைரியமும் சந்தோஷமுமாக வேலைக்கு புறப்படத் தயாரானாள்.

நந்தினிக்கு திருமணமான போது அவளின் கல்லூரித் தேர்வின் முடிவுக் கூட வெளி வரவில்லை. வங்கியில்  வேலை, ஒரே பையன்; தங்கைக்கும் திருமணம் முடிந்து விட்டது; அம்மா மட்டும் தான். இத்தனை விஷயங்களும் அவள் குடும்பத்திற்கு ஏற்றார் போல் இருக்க, பெற்றோர்கள் நந்தினி திருமணத்தை உடனே நடத்தி விட்டனர். வேலையில் இருந்த ஒரே அண்ணன் கூட ஒரு வருடம் போகட்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நவீனுடன் திருமண பந்தத்தில் நுழைந்தாள். பொதுவாக இருக்கும் மாமியார், மருமகள் மாதிரி இல்லாமல், அவருடன் நட்புறவுடன் இருக்கவும்  விரும்பினாள். 

ஆனால், நவீனின்  தாய் மிகவும் சராசரி மாமியராக தான் இருந்தாள். நவீனும், தாய் சொல்லைத் தட்டாத மகனாகதான் இருந்தான். தாயிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த வித முடிவும் எடுக்க மாட்டான். ஒரு விதத்தில் ஒத்துக் கொண்டாலும், எதற்கும் எல்லை உண்டல்லவா? தன் மனைவிக்கு செய்ய வேண்டியதில் கூட தாயின் அனுமதி  இல்லாமல் செய்ய மாட்டான். அவ்வளவு ஏன், தாய் சொன்னதால் தான் குழந்தைப்  பிறப்பைத் தள்ளிப் போடாமல் ஒரு 
வருடத்திலேயே சுமனும்  பிறந்தான். இப்படி இருப்பவனிடம் தனிப் பட்ட அன்பையும், அரவணைப்பையும் எப்படி  எதிர் பார்க்க முடியும்?  நந்தினி மண வாழ்க்கை ரொம்பவும் சுவாரசியம் இல்லாமல் மிகவும் சராசரியாகத் தான் இருந்தது.

திருமண வாழ்வின் அர்த்தம் புரியும் முன்பே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். அவளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவம் இல்லாமலே வாழ்க்கை சென்றது. சிநேகபாவத்துடன்  இருக்க விரும்பிய மாமியார் உறவும் அதன் படி அமையவில்லை. மாமனாரும் இல்லாததால், அவருக்கு உலகமே பிள்ளை நவீன் தான். எப்படியோ, சுமன் பிறந்தவுடன் நந்தனி கவனம் முழுவதும் அவனிடம் திரும்பியது. ஆனால், சுமனுக்கு ஆறு வயது இருக்கும் போது நவீன் காமாலையால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்கு பலன் இல்லாமல் உயிர் துறந்தான். எதிர்பார்க்காத இந்த சம்பவம் எல்லோரையும் சுனாமியாய் தாக்கியது என்றால் மிகையாகாது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு ஒரு மாதிரி நவீனின் வங்கி வேலை நந்தினிக்கு கிடைத்து. மாமியார் துணையுடன்  தனி ஆளாகவே சுமனை  நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாள். நவீனுடன் ரொம்பவும் அன்னோன்ய வாழ்கை இல்லாததால் என்னவோ அவனின் பிரிவு, நந்தினியை அதிகம் பாதிக்கவில்லை; எளிதில் மீண்டு வரவும் முடிந்தது.


இதோ இப்போ சுமனுக்கும் நல்ல படியாக திருமணம் முடிந்து விட்டது. மாமியார் தான் இருந்து பார்க்க கொடுப்பனை இல்லாமல், போன வருடம் நவீனிடம் போய் சேர்ந்தாள். சுமனும், சுதாவும் தேனிலவு சென்று ஒரு வாரம் முடிந்து இன்று ஊர் திரும்புகிறார்கள். இவர்கள் திருமணம் நிச்சயம் ஆன பின்பு சுதா அடிக்கடி  வீட்டிற்கு வந்து நந்தினி உடன் நன்றாக பழக ஆரம்பித்தாள். அப்போதே நந்தினிக்கு தன் மாமியாருடன் இருக்க முடியாத சிநேக உறவை மருமகளுடன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள். எப்பேர்பட்ட நல்ல மாமியராக இருந்தாலும் அம்மாவின் இடத்தை பிடிக்க முடியாது. இதை அறிந்த நந்தினி சுதாவிற்கு ஒரு நல்ல சிநேகிதியாக இருக்க விரும்பினாள். சுதாவும் அதே கோணத்தில் இருந்ததால், சந்தோஷப் பட்டாள்.

தேனிலவு முடிந்து, ஊரிலிருந்து வந்த சுதா ரொம்பவும் சந்தோஷமாக நந்தினியோடு எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டாள். சுமன் அவன் அப்பாவைப் போல் இல்லாமல், சுதாவிடம் அன்னோன்யமாக இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தாள். கொஞ்ச நாள் எல்லாம் சந்தோஷமாக அவரவர் வேலையும் பார்த்துக் கொண்டு வாழ்க்கை நல்லபடியாக போனது. அன்று சுமனும்,சுதாவும் வேலை முடிந்து வரும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தனர். அலுவலகத்தில் அவனை நான்கு வருடம் வெளி நாடு அனுப்பப் போவதுப் பற்றிக் கேள்விப் பட்ட நந்தினி எல்லையில்லா மகிழ்சிக் கொண்டாள். இருந்தாலும் மீண்டும் தனிமை வாழ்வா என்று நினைத்துக் கலங்கினாள்.

காலைக் குளியலை முடித்து வெளியே நந்தினி வந்த போது, சுமனும், சுதாவும் தீவரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு சாதரணமாக பேச முயற்சித்தனர். சரி அவர்கள் விஷயத்தில் தலையிடுவது அவ்வளவு சரிஇல்லை என்று நினைத்து தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.ஆனால் வரும் நாட்களில் இதுவே தொடர்ந்தது; கூடிக் கூடிப் பேசுவதும், விவாதம் பண்ணுவதும், தன் தலையைக் கண்டதும் அமைதியாவதும் நந்தினிக்கு ஒரு கலகத்தை உண்டு பண்ணியது. வெளி நாடு போகும் வேளையில் எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்று வேண்டினாள்.

அன்று விடுமுறை தினமானதால் எல்லோரும் நிதானமாக வேலைகளை முடித்து விட்டு, எப்போதும் போல் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். சுதா சுமனிடம் ஜாடையாக கேட்க, அவனும் தலை அசைப்பதை நந்தினி கவனித்தாள். சுதாவும் தன்னை தயார் செய்துக் கொண்டு நந்தினியடம்,
"அம்மா,நாங்கள் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசவேண்டும்; கோவப்படாமல், தப்பாக நினைக்காமல் பொறுமையாக முழவதையும் கேட்க வேண்டும். இந்த வேளையில் மாமாவும் இருந்தால் நல்லது என்று அவரையும் அழைத்திருக்கோம்." அவள் சொல்லுவதற்கும் மாமா வருவதற்கும் சரியாக இருந்தது. நந்தினிக்கு விஷயம் ரொம்ப தீவிரமோ, என்னவாக இருக்கும் என்று புரியாமல் கலங்கினாள். இருந்தும்  கேட்கத் தயார்
படுத்தி கொண்டாள்.

சுதா"அம்மா,  நிதானமாக யோசித்து நீங்கள்  சொல்லும் பதிலில் தான் நாங்கள் வெளி நாடு போவது பற்றி முடிவு எடுப்போம்." நந்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. சுதா," அம்மா நாங்கள் போனவுடன் மீண்டும் நீங்கள் தனிமையில் தள்ளப் படுவதை எங்களால் பார்க்க முடியாது; இத்தனை நாள் வாழ்வும், பிறருக்காகவும் ,சொந்த விருப்பு வெறுப்பை மனதில் புதைத்துக் கொண்டும் காலம் கடத்தி ஆகி விட்டது; இனிமேலாவது உங்கள் சுகத் துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும், கூடவே இருந்து தேவையும் புரிந்து தோழமையுடன் இருக்க ஒரு துணை அவசியம்; எங்கள் இருவருக்குமே நீங்கள் இப்படித் தனியாகவே மீதி காலத்தையும் கழிப்பதில் உடன்பாடு இல்லை; உங்கள் மனதிற்கும், குணத்திற்கும் ஏற்றார்  போல் நல்லத் துணையுடன் நிம்மதியாக வாழ எல்லாத் தகுதியும் இருக்கு; நாற்பதுக்குப் பிறகு தான் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கும் படியான துணை இன்னும் தேவை. எங்களுக்கு உங்கள் பேரில் உண்மையான அன்பும், அக்கறையும் இருப்பதால் தான் இவ்வளவு சொல்கிறோம். இதற்கு நீங்கள் கட்டாயம் சம்மதிக்க வேண்டும். உங்களுக்கு என்று ஒருவர் இருந்தால், எங்களாலும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வெளி நாடு செல்ல முடியும்." என்றாள்

நந்தினிக்கு உணர்ச்சி மிகுதியால் பேச்சே வரவில்லை; தன் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறையைக் கண்டு வியந்தாள். இப்பேர் பட்ட மருமகளையும், மகனையும் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளின் அண்ணனுக்கும் ச்சே ! நமக்கு ஏன் இந்த யோசனைத் தோன்றவில்லை என்று வெட்கினான்; வயதில் சிறியவர்களாக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்த சிந்தனை என்று பெருமைப் பட்டார். நந்தினியிடம்," இப்படி பட்ட குழந்தைகளை அடைந்ததிற்கு நீ உண்மையிலே பெருமைப் பட வேண்டும். அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இனி உன் வாழ்கையை அர்த்தம் உள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்து கொள்வது உன் கையில் தான் உள்ளது."என்றார். நந்தினிக்கு மனதில் சொல்ல முடியாத பயம் , கலக்கம் சந்தோசம் எல்லாம் போட்டிப் போட்டது. யோசித்து சொல்ல அவகாசம் கேட்டாள். கண்டிப்பாகத்  தன்னையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும்  மனதில் கொண்டு நல்ல முடிவைத்தான் எடுப்பாள் என்று நம்புவோம்.



திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ! கேள்விக்குறி !!


சமச்சீர் கல்வி இன்று சமமாக இல்லாமலும், சீராக இல்லாமலும் சீரழிந்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அதே சமயம் கல்வி தரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகுப்பு வரை ஒரே மாதரியான பாடத் திட்டம்இருக்க வேண்டும் என்பதில் தான் தெளிவு வேண்டும். முதலில் நன்கு தேர்ந்த அனுபவம்  உள்ள கல்வியாளர்களைக் கொண்டு பாடத் திட்டம் வரையறுக்க வேண்டும். 5ஆம் வகுப்பு வரை ஒரே மாதரியான பாடங்கள் இருக்கலாம். ஓரளவு அந்த வயது வரை கற்றுக் கொள்ளும் திறன், அளவுகோல் இதில் எல்லாம் அதிக வேறுபாடு இருக்காது;  தேவையான அடிப்படை அறிவு திறன் கிடைக்கும் வண்ணம் பாட அமைப்பு இந்த வகுப்பு வரை இருத்தல் அவசியம்.

இன்றைய காலக்கட்டத்தில் சராசரிக்கும் அதிகமான knowledge தேவையாக இருக்கிறது . அதை மனதில் கொண்டு பாடத் திட்டத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற் படிப்பிற்கு  போகும் போது அதிக சுமையோ புரிவதில் சிக்கலோ, கஷ்டமோ இருக்ககூடாது. ஆறாம் வகுப்பு முதலே கொஞ்சம் கொஞ்சமாக தயாராகும் வண்ணம் கல்வி அமைப்பு இருத்தல் காலத்தின் கட்டாயம். கல்வித் தரம் நிலையாக இருக்க தகுந்த ஆசிரியர்களை அமர்த்துவது இன்னும் முக்கியம். ஆசிரியர்களை தேர்வு செய்வதில் அரசியல் புகுந்தால் தரமானக் கல்வியை எவ்வாறு தர முடியும்?

 Branded பொருட்களின் விலை அதிகமானாலும், அதன் தரத்தைக் கருதி எவ்வளவு விலையானாலும் வாங்கத் தயங்குவதில்லை. கல்வியும் இன்று அதே வியாபார நோக்கோடு தான் பார்க்கப் படுகிறது. இதனால் சிலப் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் பற்றிக் கவலைப் படாமல் தரமான கல்விக் கிடைக்கும் பட்சத்தில் இத்தகையப் பள்ளிகளை வரவேற்கின்றனர். சில  மேலை நாடுகளில் உள்ளது போல் இங்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி அமைப்பது சாத்தியம் இல்லை. பொருளாதார அடிப்படையல் நிறைய வேறுபாடு இருப்பதால் நடைமுறை படுத்துவது மிகவும் கடினம். இதை மனதில் கொண்டு கல்வித் திட்டம் செயல் படுத்த வேண்டும்.

தொழில் முறைக் கல்வியை விரிவு படுத்தி, அதற்கான விழிப்புணர்ச்சி மாணவர்கள் இடம் சென்றடைய வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஊக்கப் படுத்துவதைக் குறைக்க வழி செய்ய வேண்டும்; பொருளாதரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு இத் தொழில் கல்வி மூலம் பயன் பெற செய்ய வேண்டும். எதிர் காலத்தில் சுயமாகத் தொழில் துவங்குவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். வேலை இல்லாத் திண்டாட்டமும் குறைய வாய்ப்புண்டு; ஏட்டுக் கல்வி மட்டுமே தான் பொருளாதாரம் பெருக உதவும் என்ற எண்ணம் மாற வேண்டும். அடிப்படைக் கல்வியைக் கொண்டே தொழில் மூலம் சாதிபவர்கள் நிறையப் பேர் உண்டு; இரண்டு கோணத்திலும் சிந்தித்து அதற்கேற்றார் போல் கல்வி அமைப்பு இருக்குமே ஆனால் ஓரளவு சீர் படுத்த முடியும்.


வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜீவனாம்சம் !!! கணவனுக்கும் !!!!

பெண்களே உஷார்!!  இன்றையத் தலை முறை  போய்க் கொண்டிருக்கும் வேகம் தான் நமக்குள் "ஏன் கணவன் ஜீவனாம்சம் கேட்க  கூடாது " என்ற கேள்வியை எழுப்புகிறது.  திருமணம், என்பதின் அருமை, மதிப்பு தெரியாமல், தங்கள் தனித்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் அது ஒரு தடை என்றே சிலப் பெண்கள் நினைக்கிறார்கள். திருமண பந்தத்திற்கு ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது மட்டுமே போதாது. எட்டு பத்து வருடங்கள் காதலித்தவர்கள் கூட மணமான இரண்டே வருடத்தில் விவாகரத்து கோருகின்றனர்; ஏன்? அங்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வருவதில்லை; தவிர, பணத்திற்கோ, மற்ற தேவைக்கோ முற்றிலும் கணவனை சார்ந்து இருக்கும் அவசியம் இப்போது இருப்பதில்லை. ஏனென்றால்  சில இடங்களில் கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிப்பதே!

இன்று  பலதரப்பட்ட  உணவு வகைகள் கிடைப்பது போல், வாழ்கை முறையிலும் பலவிதங்களைப் பார்க்கின்றனர். இந்தியர்களின் வாழ்கை  முறை பொதுவாக குடுபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். மேலை நாட்டவர் ஆரம்பம் முதலே உறவுகளுக்கு ஒரு எல்லை வைத்துக் கொண்டே வாழ்பவர்கள்;  ஒரு திருமணம் முறிந்தாலும், வேறு துணையைத் தேடிப் போவதில் பிரச்சனை இருபதில்லை. திருமணமே ஆகாமல் தனித்து வாழவும் சமுக அமைப்பு துணை புரிகிறது. 

இங்கு, மேல்தட்டு மக்கள் பணப் பிரச்சனை இல்லாததால், திருமண பந்தத்தில் நுழைந்து, பொறுப்பையும், கடமையையும் ஏற்றுக் கொள்ளவது அவசியமில்லை என்று நினைகின்றனர். அதையே நடுத்தர, மேல்நடுத்தர வர்கத்தினர் பின்பற்ற தொடங்கி உள்ளனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தனிமையை தாங்கிக் கொள்வது முடியாத விஷயமாகி விடுகிறது. துணையின் தேவையும் உறவுகளின் அருமையும் அப்போது தான் புரிய ஆரம்பிக்கும்.

சிலப் பெண்கள், தாங்கள் அதிகம் சம்பாதிப்பதால் துணை இல்லாமலே வாழ முடியும் என்று தப்புக் கணக்கு போடுவதால் விவாகரத்தும் கூடி வருகிறது.   பேசி தீர்க்க பட வேண்டிய சாதாரண சிறு விஷயங்கள் கூட பெரிதாக்கப்  படுகிறது. துரதிஷ்டவசமாக சில பெற்றோர்களே இதற்கு துணை போகின்றனர்.

சேர்ந்து கொஞ்ச காலம் வாழ்ந்து பிறகு திருமணம் பற்றி முடிவு செய்வது என்பது, நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் விஷயம் அல்ல. என்னதான் பெண்கள் மேல்நாட்டுக் கலாச்சாரத்தை விரும்பினாலும், அதுவே சில சமயம் அவர்களுக்கு எதிராக அமைந்து விடுகிறது. நம் பெண்களுக்கே  உண்டான சில அடிப்படை பண்புகள் மாற கூடாது. பல நாட்டு உணவு வகைகளை வேண்டுமானால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்; ஆனால் அதே போல் வாழ்கை முறையையும் பின்பற்ற நினைப்பது தான் முட்டாள் தனம். அந்தந்த நாட்டு சீதோஷ்ணதிற்கேற்ப உடைகள், உணவு பழக்கம் எல்லாம் இருக்கும் போது, அதை விடுத்து நமக்கு பிடித்ததை செய்தால் நஷ்டம் நமக்கே!

இன்றைய பெண்களுக்கு எந்த விதமான வாழ்கை முறையை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் அதிக குழப்பம்; சில வாழ்கை முறையை மேலோட்டமாக, அதில் இருக்கும் சுகங்களை மட்டுமே பார்த்து, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், பக்குவம் இல்லாத முடிவுகளால் சந்தோஷத்தை இழக்கின்றனர். பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைத்து, சுதந்திரத் தன்மை அதிகம் காணப்படுகிறது. விவாகரத்து கூடுவதற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகளே!!

தான் மணந்தவளுடன் நீண்ட சந்தோஷ வாழ்கை வாழ நினைக்கும் கணவர்களுக்கு சிலப் பெண்களின் இத்தகைய  மனப் போக்கினால் தங்கள் வாழ்கையையே தொலைக்க நேருகிறது. மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும்  ஆளாகிறார்கள். போகிறப் போக்கைப் பார்த்தால், கணவன்களும் மனைவி இடமிருந்து ஜீவனாம்சம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை !!!